கலைஞரோடு கொண்ட நட்பை பற்றி வைரமுத்து எழுதிய உருக்கமான கடிதம்

/files/detail1.png

கலைஞரோடு கொண்ட நட்பை பற்றி வைரமுத்து எழுதிய உருக்கமான கடிதம்

  • 50
  • 0

-தமிழில் V.கோபி 

1975ம் வருடம் முதன் முதலாக நான் கருனாநிதியை சந்தித்தேன். முதலமைச்சராக இருந்த கருனாநிதி கவிதை விழாவிற்கு தலைமை தாங்க வந்திருந்தார். பச்சையப்பன் கல்லூரி மாணவனாக இருந்த நானும் அந்நிகழ்ச்சியில் கவிதை பாடுவதாக இருந்தது. எனக்கு அப்போது 23 வயதே ஆகியிருந்தது. பின்னர் இரண்டு வருடம் கழித்து இதேபோன்ற கவிதை நிகழ்வில் இருவரும் மீண்டும் ஒருமுறை சந்தித்து கொண்டோம். நான் எழுத்தாளர் ஆனதற்கு உங்கள் எழுத்தே உந்துசக்தி என அவரிடம் அப்போது கூறினேன். இதை கேட்டதும் என்னை குங்கும்ம் இதழில் எழுதுமாறு கூறினார். அப்படி வெளியானது தான் ‘இதுவரை நான்’ என்ற தொடர். அன்று தொடங்கியது எங்கள் இருவருக்கிடையேயான நட்பு. அவரது வெற்றிகளின் போதும் தோல்விகளின் போதும் நான் அவர் கூடவே இருந்துள்ளேன். அன்றிலிருந்து இன்றுவரை எங்கள் நட்பில் சிறு பிசகும் இல்லை, எந்த மாற்றமும் இல்லை.
அவர் முதலமைச்சராக இருந்த சமயமத்தில் எனது கவிதை நூலை வெளியிடுமாறு மதுரைக்கு அழைத்தேன். அதற்கு உடனடியாக அவர், “நீ கூப்பிடும் தேதியில் நான் முதலமைச்சராக இருக்கமாட்டேன்” என்றார். நான், “கலைஞரை தான் அழைத்தேன் முதலமைச்சரை அல்ல” என்றேன் அவரிடம். எனது கையை இறுக்கமாக பற்றியவர், “என்னிடம் ஏன் இத்தனை அன்பு வைத்திருக்கிறாய்” என்றார். அன்று எனது கையை அவர் அழுத்தி பிடித்தது இன்றும் என் நியாபகத்தில் உள்ளது. அதன்பின்னர் எனது ஐந்து நூல்களை மதுரையில் வைத்து வெளியிட்டார்.

என்னுடைய சொந்த நிதியிலிருந்தும் அரசாங்க உதவியுடனும் எனது கிராமமான வடுகபட்டியில் நூலகம் ஒன்றை கட்டினேன். அந்த சிறிய கட்டிடத்தை கருனாநிதி திறந்து வைக்க வேண்டும் என விருப்பபட்டேன். இதுபோன்ற சிறிய கட்டிடங்களை முதல்வர் திறந்து வைக்ககூடாது என வழிமுறைகள் உண்டு. ஆனால் எனது அழைப்பை ஏற்று என்னுடைய கிராமத்திற்கு வந்து அந்த நூலகத்தை கருனாநிதி திறந்து வைத்தார். எனது விருப்பதிற்கேற்ப நூலகத்தின் பெயரை கவிஞர் கண்ணதாசன் நூலகம் என பெயர் வைக்க மேடையிலேயே ஆணையிட்டார். இதுபோன்ற சம்பவங்களை என் வாழ்நாளில் ஒருபோதும் மறக்கமாட்டேன். அவர் திறந்து வைத்த நூலகம் இன்றும் நன்றாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. 

என் வாழ்க்கையின் பாதி நாட்களை அவரிடமே செலவழித்துள்ளேன். இலக்கியத்தின் மேல் கொண்ட அன்பே எங்கள் இருவரையும் பிணைத்தது. ஒருவொருக்கொருவர் திறமைகளை கொண்டாடியே எங்கள் நட்பு வளர்ந்தது. எப்படி காற்றிலிருந்து ஆக்ஸிஜனை நுரையீரல் பெற்றுகொள்ளுமோ அதுபோல லட்சியத்தையும் நம்பிக்கையையும் அவரது வாழ்க்கையிடமிருந்தும், அவரது கட்சியிடமிருந்து நான் பெற்றுகொண்டேன். இதுபோன்ற நன்மதிப்பை மரியாதையை வேறு யாருக்கும் கலைஞர் கொடுத்திருக்கிறாரா என தெரியவில்லை. அவரது இரண்டு நூல்களுக்கு (மீசை முளைத்த வயதில், வான் புகழும் கொண்ட வள்ளுவன்) என்னை முன்னுரை எழுதும் பெருமையை கொடுத்துள்ளார்.

எனது 12 வயதிலிருந்தே அவரது எழுத்தினால் கவரப்பட்டேன். இளம் வயதில் அவரது பராசக்தி பட வசனத்தை ரசித்துள்ளேன். பராசக்தி படத்தில் சிவாஜி கனேசன் கதாபாத்திரம் உச்சரிக்கும், “என் சுயநலத்திலே பொதுநலனும் கலந்திருக்கிறது. அது எப்படி தெரியுமா? ஆகாரத்திற்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன் அதுபோல”. அந்த வயதில் இப்படியொரு உருவகத்தை நான் வாசித்ததேயில்லை. அவர் எழுதிய அந்த வாக்கியம் 50 வருடம் கழித்து இன்றும் பொருந்துகிறது.

பராசக்தி படத்தில், “ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஒரத்திற்கே ஓடினாள்” என்ற வாக்கியத்தை இளவரசி டயானா இறந்தபோது ஒரு பத்திரிக்கை தலைப்பாக இட்டது. பல வருடங்களுக்கு முன் அவர் எழுதிய எழுத்துக்கள் இன்றும் சமகாலத்தில் சரியாக பொருந்துகிறது. எழுத்து என்பது அவருக்கு பொழுதுபோக்கு இல்லை. அதேசமயத்தில் அவர் தொழில்முறை எழுத்தாளரும் அல்ல. அவர் ஒரு லட்சியவாத எழுத்தாளர். அவர் எந்த லட்சியத்திர்காக அரசியலில் போராடினாரோ அதையே திரைப்படத்திலும் பயன்படுத்தினார். அவரது மொழி அழகு தனிச்சிறப்பானது. எம்ஜிஆரும் சிவாஜியும் மிகப்பெரும் நட்சத்திரமாக வளர்ந்ததற்கு முக்கிய காரணம் கலைஞரின் தமிழே.

கலைஞரின் முக்கிய பங்களிப்பாக நான் கூறுவது 3000 ஆண்டு பழமையான சங்க இலக்கியத்தை இப்போதைய காலத்திற்கு ஏற்றவாறு அனைவருக்கும் புரியும் வகையில் அவர் எழுதியது. அவரது பங்களிப்பு இல்லையென்றால் தற்போதைய ஐடி தலைமுறையினர்கள் தொல்காப்பியம் மற்றும் திருக்குறளின் புகழை அறிந்திருக்கமாட்டார்கள். 50 வருடமாக ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் கலைஞருக்கு இது பெரிய சாதனை இல்லை.
கட்சி தலைவராக மட்டுமின்றி, அண்ணா மற்றும் பெரியாரின் லட்சியங்களை தனது தோளில் ஏந்தி இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்த்தார். 40 வயதிற்கும் குறைவானவர்களுக்கு இன்று பெரியாரையும் அண்ணாவையும் தெரிகிறது என்றால் அதற்கு காரணம் கலைஞர். 106 வருடங்கள் வரலாறு கொண்ட திராவிட இயக்கத்தில், கருனாநிதி மட்டுமே 50 வருடங்கள் கட்சி தலைவராக இருந்துள்ளார். எழுத்தாளர், பேச்சாளர், கட்சி தலைவர், முதலமைச்சர், நாடக ஆசிரியர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், குடும்ப தலைவர் என கலைஞர் போல் பல திறமை கொண்டவர்களை பார்ப்பது அரிது. அவர் எடுத்துகொண்ட எதிலும் உச்சத்தை தொட்டவர்.

35 வருடங்கள் கலைஞரின் தொலைபேசி அழைப்பே எனது விடியலாக இருந்தது. அவர் எழுதிய கடிதம் பற்றியோ, முந்தைய நாள் கூட்டத்தில் பேசியது பற்றியோ, திரைப்படம், இலக்கியம், தினசரி அரசியல் நிகழ்வுகள் என எங்களது உரையாடல்கள் எதை பற்றியும் இருக்கும். என்னிடம் அவர் ஒருபோது கோபப்பட்டது கிடையாது. என்னிடம் எந்த கடுஞ்சொல்லும் கூறியது கிடையாது.

நான் ஒரு வாரத்திற்கும் மேல் அவரை சந்திக்காமல் இருந்து மீண்டும் சந்திக்க சென்றால் என்னை பார்க்காமல் முகத்தை திருப்பி கொள்வார். பின்னர் பொய் கோபத்தோடு, “நான் உன்னை பார்ப்பதற்காக ஏங்கிகொண்டிருக்கிறேன். உனக்கு அந்த உணர்வு இல்லையா?” என கடிந்து கொள்வார். அவர் அப்போது குழந்தையாக மாறி விடுவார். வயதில் மூத்தவர், மனதால் ஒரு குழந்தை!

கடந்த ஒன்றரை வருடமாக தான் எனது தொலைபேசி காலையில் அமைதியாக இருக்கிறது. இப்போதெல்லாம் எனது காலைகள் எந்த வெளிச்சமும் இன்றியே இருக்கிறது. அவரது குரலை நான் இனி எப்போது கேட்பேன். இனி எனது தொலைபேசி காலையில் நிரந்தரமாக அமைதியாகி விடுமே. என் மீது மிகுந்த மரியாதையும், அன்பும், நம்பிக்கையும் வைத்திருந்தார். எனக்கு அவர் தந்தை போன்றவர். என் தமிழ் ஆசான் அவர்.

ஜூலை 11ம் தேதி கலைஞரை சந்தித்தபோது அவரது பேனாவில் ஒன்றை தருமாறு கேட்டேன். பேனாவை எடுத்து கொடுக்குமாறு தனது கண்களால் கனிமொழிக்கு உத்தரவிட்டார். பேனாவை பரிசளித்தவர் கையை உயர்த்தி என்னை ஆசிர்வதித்தார். நாங்கள் இருவரும் சந்திப்பது இதுவே கடைசி முறை என எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அதன் பின்னான நாட்களில் அவர் உடல்நிலை மோசமாகி மருத்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டு இறந்த உடலாகவே திரும்பி வந்தார். ஆனால் கலைஞர் இறக்கவில்லை. அவர் வாழ்நாளில் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு முடிவும் மரணத்தை தோற்கடிப்பதாகவே இருக்கும். மரணத்தை எப்படி தோற்கடிக்க வேண்டும் என்பதை வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் கற்று கொடுக்கும். நீங்கள் வெற்றியாளரா தோல்வியாளரா என்பதை நீங்கள் வாழும் வாழ்க்கையே தீர்மாணிக்கும்.

அவரது எழுத்தாலும், பேச்சாலும், செயலாலும், அவர் கொண்ட தத்துவத்தாலும் கலைஞர் வாழ்வாங்கு வாழ்வார். பல நூற்றாண்டுகளுக்கு அவர் நினைவு கூறப்படுவார்.

நன்றி  TOI

Leave Comments

Comments (0)