“ப்யூர் சினிமா” என்னும் கலங்கரை விளக்கு!

/files/detail1.png

“ப்யூர் சினிமா” என்னும் கலங்கரை விளக்கு!

  • 38
  • 0

-லெட்சுமி நாராயணன் பி

‘மௌனகுரு’ கருணாகரனைப் போல கருப்பு நிற பையை தோளில் மாட்டிக்கொண்டு வடபழனி சிக்னலுக்கு முந்தைய பேருந்து நிறுத்தத்தில் ‘எம்70’ பேருந்திலிருந்து இறங்கியபோது மணி மாலை 3.06 எனக்காட்டியது. முன்னால் நடந்தேன். மீயூசிக்கல் சாமான் விற்கும் கடை, நந்தினி ஸ்வீட்ஸ், ப்ரூட் மிக்ஸர் கிடைக்கும் என்ற போர்டு இருந்த பெட்டிக்கடை, ஜோதிட நிலையம், தொலைதூரக் கல்வி நிலையம், செருப்பு தைக்கும் மனிதரின் இரும்பு பெட்டி, பானிபூரிக்காரரின் வண்டி என ஒவ்வொன்றாக கால்கள் கடந்து போக, மனதில் ‘இன்று கண்டிப்பாக போய் பார்க்கனும், நாளைக்காச்சும் நிச்சயம் போய் எப்படி வச்சிருங்காங்கன்னு பார்க்கனும்டா, என்னல்லாம் இருக்கும்?’ அப்படியே யோசித்தே அந்த வாரத்தின் இறுதிக்கு ஒரு வழியாய் வந்தாயிற்று. ஆபிஸ் கேண்டீனில் சாப்பிட்டுட்டு வந்திருக்கலாம். வெள்ளிக்கிழமை வேற இன்னைக்கு, ஏதோ புட் பெஸ்டிவல்ன்னு கூட மெயிலில் வந்திருந்தது. ஆனால் அப்போது ஏனோ சுத்தமாய் பசியில்லை. 

இப்போது கபகப வென்று பசி வயிற்றை தாளம் போட்டது. கண்கள் சரசனவென தேடியதில் மஞ்சள் நிற போர்டில் நீலநிற எழுத்துக்களில் “காமாட்சி உணவகம்” தட்டுப்பட்டது. உள்ளே நுழைந்து கொண்டே ‘அண்ணா, சாப்பிட என்ன இருக்கு?’ ‘பிரிஞ்சு, தயிறு மத்ததெல்லாம் காலி, என்னா வேணும்?’ ‘பிரிஞ்சு தாங்கண்ணா’ வட்டத்தட்டில் மஞ்சள் இலைமேல சூடில்லாமல் வந்தது. ‘ஆம்லேட், ஆப்பாயில்’ ஏதும் சொல்லலாமா? ‘ இல்ல வேணாம்ணா’, ஓகே ரைட்டு விடு, மனிதர் நகர்ந்தார். ஒரு கப் பிரிஞ்சும், தயிரில் முழ்கிய வெங்காயமும், மனிதர் சிரித்த முகமாய் அவராகவே வைத்த கடலைப்பருப்பு, கருவேப்பிலை போட்ட பீட்ரூட் பொரியலும் உள்ளே சிறப்பாய் போனது. தண்ணீரை குடித்துவிட்டு முப்பது ரூபாயை தந்துவிட்டு வெளியே வந்தபோது வெயில் இன்னும் கூட இருந்தது. ‘அஞ்சாதே’ தயா போல வாட்சை திருப்பி மணியை பார்த்தால் (ஹா...ஹா...அது பாஸ்ட்டிராக் ஸ்டீல் வாட்ச் அடிக்கடி அந்தப்பக்கம் திரும்பிக் கொள்வதால் அப்படி ‘தயா’ போல மணி பார்ப்பது ஒரு பழக்கமாகி விட்டிருந்தது), ஒரு இருபது நிமிடங்கள் கடந்திருந்தது.

பையை துழாவினேன். உள்ளே அன்றைய தினசரி, இரண்டு இலக்கிய இதழ்கள், பிரித்த பத்துரூபாய் கடலைமிட்டாய் பாக்கட், ரூம் சாவி, நீலக்கலர் உடன் ஆரஞ்சு கலர் க்ரிப் வைத்த அமுத்தற பால்பாயிண்ட் பேனா, நான்கைந்து காய்ச்சி மேங்கோ மிட்டாய்கள். ஒரு மிட்டாயை பிரித்து வாயில் போட்டுக்கொண்டு ‘எங்கே அந்தப் புத்தகம்? கைகளும், கண்களும் துளாவ,  இதோ இருக்கே, எடுக்கிறேன், வெண் சிங்கப்பிடரி முடியும், நரைத்த வெண்மீசைக்காரன் ஜெயகாந்தன் படம் போட்ட புத்தகம் அது! பெயர் “படச்சுருள்”! அந்த முகவரி எங்கே போட்டு இருக்காங்க? புரட்டுகிறேன். முதல் பக்கத்தில் ஏதோ அடையார் முகவரி, ஆனால் நான் முகவரியை பார்த்தேனே? வேகமாக இதழை புரட்டியபடி இறுதி அட்டைக்கு கண்கள் ஓடுகின்றன.

“தமிழ் ஸ்டுடியோ, எடிட்டர் லெனின் புகைப்படம், லெனின் விருது – 2016, தீபா தன்ராஜ், அனுராக் காஷ்யப், இதோ  இங்கே இருக்கிறது விலாசம், படிக்கிறேன். ஆங்கிலத்தில் இருக்கிறது. “ப்யூர் சினிமா, நம்பர் 7, வெஸ்ட் சிவன் கோவில் ஸ்டீரிட், வடபழனி, சென்னை, உபதகவலாக நியர் கமலா தியேட்டர்.” கமலா தியேட்டர் நல்லா தெரியுமே, இந்தக்கடை எங்கே இருக்கு?, இந்தத்தெரு பக்கம் நம்ம போனதில்லையே? சரி பார்ப்போம், வடபழனி காவல் நிலையம், ஒரு உள்ளடங்கிய கோவில், பஜ்ஜிக்கடையில் இருந்து வரும் அம்சமான வாசனை, ஏடிஎம், ஒரு அக்கா உட்கார்ந்து இருந்த பெட்டிக்கடை, தமிழ் முரசும், மாலைமலரும் தொங்கியது. அந்தவார விகடனில் அட்டைப்படமாய் ஏதோ நடிகையின் புகைப்படம் இருந்தது. “அக்கா இங்க மேற்கு சிவன் கோவில் தெரு?, இதோ பர்ஸ்ட் லெப்ட்ல உள்ள போ’, என்று சொல்லியவாரு என் நன்றியை எதிர்பார்க்காமல் பிரிட்ஜை திறந்து ஏதோ துழாவ, நான் நடந்து சென்று திரும்பினேன். சிறிது அடிகள் நடக்க, வலது புறமாக ‘விக்ரம் ஸ்டுடியோ’ இருப்பதை பார்க்கிறேன், எதிர்புறமாக முகமூடிகள், தலைவிக்குகள், குழந்தைகள் பேன்ஸி டிரஸ்கள் விற்கும் ஒரு கடையை தாண்டி வந்து நிற்கிறேன். கண்கள் அங்கும் இங்கும் தேட எதிரே மாநகரப்பேருந்து வர ஓரமாய் ஒதுங்கியவாறே மேலே பார்க்கிறேன். “கண்டுகொண்டேன்! கண்டுகொண்டேன்!” வெள்ளை நீலம் கலந்த போர்டு கட்டிடத்தின் மேலே ‘ப்யூர் சினிமா’ முகவரியுடன் மாட்டியிருக்க, சந்தோஷமாக வராண்டாவை கடந்து, சிறு விநாயகர் கோவிலை கடந்து மாடியில் ஏறினேன். இரண்டாவது மாடிக்கு வந்திருந்தேன். லிப்ட் இருந்திருப்பதை இறங்கிவரும் போதுதான் கவனித்தேன். “ப்யூர் சினிமா” புத்தக அங்காடியின் பலகை என்னை வரவேற்றது. என்னை அங்கு அழைத்துவந்த “படச்சுருளுக்கு” அன்பின் நன்றிகள். ‘படச்சுருள்’ என் கைகளுக்கு வந்த கதைகூட நல்லாயிருக்கும். ‘தமிழ் ஸ்டுடியோ’ வின் புரட்சி ஊடகக் குழந்தையான ‘கருப்பில்’ அதுபற்றி விரிவாய் எழுதியிருக்கிறேன். தோழர்கள் விரும்பினால் வாசியுங்களேன். இப்படித்தான் அந்த மாலை ‘படச்சுருள்’ எனை கைபிடித்து “ப்யூர் சினிமா புத்தக அங்காடிக்கு” அழைத்து வந்தது. “ப்யூர் சினிமா” எல்லாமே சினிமா! சினிமாவுக்காக எல்லாம்! முழுக்க முழுக்க சினிமா! சினிமா மட்டுமே!”  தமிழ் ஸ்டுடியோ வின் மிக முக்கியமான முன்னெடுப்பு. அதன் குழந்தைகளுள் தனித்துவமான, சிறப்பான பெரும் புத்தகக் குழந்தை தான் அது, சினிமா புத்தகக்கடல், பெரும் புத்தகக் கடலாடி தான் “ப்யூர் சினிமா”! முற்றிலும் சினிமாவிற்காக! 

உள்ளே நுழைந்ததும் கடகடவென்று சுற்றிலும் ஒரு ஓடுபார்வையை ஓட்டினேன். சுற்றிலும் ரேக்குகளில் எண்ணற்ற புத்தகங்கள் வரிசையாய் அழகாய் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருப்பதை பார்க்கிறேன். எதிரே இருந்த ஒரு ரேக்கில் நிறைய டிவிடிக்கள் வரிசையாய் இருப்பதை பார்க்கிறேன். “ஜெய் பீம் காம்ரேட்” என ஒரு நீலநிற வெள்ளை நிற உடையுடன் பறையிசை முழங்க ஒரு மனிதன் என்னை வரவேற்றான். அதற்கு கீழே “ஒரு வெள்ளை நிற வேன்” நிற்கிறது. ஆமாம் அது என்ன? மனதிற்குள் “ஜெய் பீம் தோழர்” என ஒரு கனம் பறையிசையுடன் பலத்த குரல் எழுந்து அடங்கியது. திரும்பினால் அங்கு ‘பேரன்பும், பெருங்கருணையும், ஆற்றுப்படுத்துதலும் கொண்ட மனிதன் உட்கார்ந்து இருக்கிறான். அவன் போதிமரத்தடியே ஞானம் பெற்ற சித்தார்த்தன் ஞானச்சுடர் புத்தபிரான்!” மனது சில மணித்துளிகள் ஏனோ அமைதியாகிறது. அருகிலிருக்கும் தூணுக்கும், புத்தனுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் ஒரு பெண்ணின் தலை தெரிகிறது. எதிரில் சென்று நிற்க, “சொல்லுங்க சார், என்ன வேணும்? என்ற குரல்! இந்த போனமாசம் படச்சுருள் புத்தகம் இருக்கா? எனக்கேட்க, எதிரே கைகாட்டுகிறார், அது சினிமா இதழ்கள் பிரிவு!, படச்சுருளின் பழைய இதழ்கள், காட்சிப்பிழை சினிமா இதழ்கள், நிழல் சினிமா இதழ்கள், இன்னும் சில சினிமா மாத இதழ்கள் என நிறைய இருக்கிறது. எடுத்துப்பார்க்கிறேன். படச்சுருளை புரட்டிக் கொண்டே அவரிடம் கேட்கிறேன். ‘இந்த அருண். மோ இவர் உயிர்மையில் சினிமா கட்டுரைகள் எழுதுகிறாரே அவரா? அது தெரியலைங்க சார். நான் இப்போ தான் வேலைக்கு சேர்ந்திருக்கிறேன்’ என்றார். அவரைப் பார்க்க முடியுமா? என்று கேட்கிறேன். வெளியே சென்றிருக்கிறார் மாலையில் தான் வருவார் என்கிறார் அவர். சரி என்று சொல்லிக்கொண்டே படச்சுருளின் பழைய இதழ்களை எடுத்துக் கொண்டு இவ்வளவு தானா? இல்லை இதற்கு முன்னால் வந்த இதழ்கள் உள்ளதா? என வினவ, இரு மனிதர்கள் அருகே இருக்கும் “நூலகம்” என்ற அறையில் இருந்து வருகிறார்கள். 

இருவரும் தாடி வைத்திருக்கிறார்கள். ஒருவர் கண்ணாடி அணிந்த மஞ்சள் நிற டீசர்ட் போட்டவர், இரண்டாமவர் கருப்பு நிற டீசர்ட் அணிந்தவர். அவர்கள் இரட்டையர்கள் போல இருக்கிறார்கள். அவர்கள் நான் கேட்பதை அறிந்து இன்னும் சில இதழ்களை உள்ளிருந்து எடுத்துத் தருகிறார்கள். என் கேள்விக்கு அந்த மஞ்சள் டீசர்ட் மனிதர் பதிலும் தந்தார். ஆமாம் “உயிர்மையில் எழுதும் அருண். மோ இவர் தான். படச்சுருளின் ஆசிரியர் இவர் தான்.

இது அவருடைய புத்தகம் தான். தமிழ் ஸ்டுடியோ வெளியீடு” என்றார் சிறு புன்னகையுடன். அந்த இருவரும் பின்னாளில் எனக்கு நண்பர்களான அன்பு படிமைத் தோழர்கள் சந்தோஷ், ரியாஸ் தான் அவர்கள். அந்தப்பெண் தோழர் அமுதா. வாங்கி வைத்துக்கொண்டு “ப்யூர் சினிமாவை” முழுதும் சுற்றிவர தொடங்குகிறேன். அன்றிலிருந்து இதுவரை இரண்டு வருடமாக ப்யூர் சினிமாவுக்கும், எனக்குமான ஆழமான அன்பின் உறவு தொடர்கிறது என்பேன் மகிழ்வாய்.

முழுக்கவும் சினிமா சார்ந்த புத்தகங்களால் சூழப்பட்டிருக்கிறது ப்யூர் சினிமா. இந்தியாவிலேயே சினிமா புத்தகங்களுக்கு என தனியே இருக்கும் ஒரே புத்தக அங்காடி ‘ப்யூர் சினிமா புத்தக அங்காடி’ தான். ஒரு நிகழ்வில் தோழர் ‘தமிழ் ஸ்டுடியோ நிறுவனர் அருண் மோ’ இதை குறிப்பிட்டார்.

இந்தியாவில் சினிமா சார்ந்த புத்தகங்களுக்கு இருக்கும் ஒரே கடை இது மட்டும் தான். முன்பு ஒரு கடை கல்கத்தாவில் இருந்தது, அது இப்போது பயன்பாட்டில் இல்லை என்றார். தமிழில் சினிமா சார்ந்த புத்தகங்கள் வருவதும், விற்பதும் மிகக் குறைவே.

அப்படியிருக்கையில் ப்யூர் சினிமா புத்தக அங்காடியின் தேவை என்ன? அதன் அவசியம் என்ன? சினிமா சார்ந்த புத்தகங்கள் ஏன் தேவைப்படுகின்றன? என்கிற கேள்விகள் எனலாம். நியாயம் கூட. இங்குதான் ‘தமிழ் ஸ்டுடியோ’ அழகியல் கலைஞனும், கவிஞனும், சினிமாவில் பெரிதும் மாற்றம் விளைய, மக்களின் ரசனை மாற்றத்தினை பெருக்கவும், சினிமா வெறும் பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமே அல்ல என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள ஆழமான சினிமா சார்ந்த கல்வி தொடர்ச்சியாக தேவை என்று தன் இறுதிவரை தீர்க்கமாய் சொன்ன தமிழ் சினிமாவின் மகத்தான இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களை தனது செயல்பாடுகளில் முன்னிருத்தி செயல்பட்டு வருகிறது. அதன் மையப்புள்ளிதான் “ப்யூர் சினிமா”. தமிழ் ஸ்டுடியோ கடந்த ‘செப்டம்பர் -2016 சினிமா புத்தகங்களுக்கென படச்சுருள்’ தனி இதழை கொண்டுவந்திருந்தது. அதில் சினிமா சார்ந்த கல்வியின் அவசியம், இன்றைய தேவை, அதுவும் முக்கியமாக தமிழ் சினிமாவிற்கு அதன் தேவை என்ன? என்ற வகையில் பல்வேறு சிறந்த சினிமா சார்ந்த புத்தகங்களை முன்வைத்தும், தொடர்ந்து சினிமாவில் நிலைக்க வாசித்தலும், இலக்கியமும் எவ்வாறு உதவுகிறது என்றும், தமிழில் தொடர்ந்து வாசிக்கும் இயக்குநர்களின் சினிமா கனவுகளை மெய்யாக்கிய புத்தகங்கள் குறித்த அவர்களின் நேர்காணல்கள், புத்தகங்களுடனான அவர்களின் ஆத்மார்த்தமான உறவு குறித்தும், உலக மேதைகள் எழுதிய சினிமா சார்ந்த அற்புதமான புத்தகங்கள், தமிழில் வெளிவந்த, ஆவணமாக்கப்பட்ட தமிழ் சினிமாவின் வரலாறு சார்ந்த புத்தகங்கள் என சினிமா புத்தகங்கள் அவசியம் குறித்து பேசியிருக்கும் முக்கியமான இதழ்தான் அது. சினிமா சார்ந்த கல்வி, புத்தகங்கள் எவ்வளவு அவசியம் என்பதை இவ்விதழை வாசித்தாலே நீங்கள் அறிந்து கொள்ளலாம். எனவே ஒரு திரைப்படத்தினை காட்சிகள் சார்ந்து, உள்ளடக்கம் சார்ந்து, வடிவம் சார்ந்து, ரசனை சார்ந்து, மிக முக்கியமாக அதன் அரசியல் சார்ந்து, மக்களின் அரசியலை சார்ந்து பேசிய சினிமாக்கள் சார்ந்து, உணர்வுகள் சார்ந்து, சினிமா ஏற்படுத்திய எழுச்சி சார்ந்து, ஒரு படத்தை எப்படி பார்ப்பது? எப்படி அணுகுவது? திரைப்பட உருவாக்கம் சார்ந்த தொழில்நுட்பங்களையும், அதன் கலை சார்ந்த நுணுக்கங்களையும் என திரைப்படங்களை பகுப்பாய்வு செய்து அதனை கல்வியாக கற்க அது சார்ந்த புத்தகங்களே பெருமளவில் உதவும். மற்ற நாடுகளில் இது என்றோ நடைமுறைக்கு வந்துவிட்டது. அதனை முறையாக கற்பதன் மூலம் தான் நல்ல சினிமா உருவாகும் என்கிறார். இங்கு தமிழில் அதுகுறித்து பெரிதாக இல்லை என்கிறார் ஆசிரியர் ‘அருண் மோ’ அவ்விதழின் தலையங்கத்தில். பெரும்பாலும் ஆங்கிலத்திலே அந்த வகையான அற்புதமான நூல்கள் இருக்கின்றன. சில நல்ல நூல்கள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஆக இவ்வகையான அனைத்து சினிமா சார்ந்த புத்தகங்களையும் ஒரே இடத்தில் ஒருங்கினைத்து ஒரு பெரும் சினிமா புத்தக அங்காடியை உருவாக்க வேண்டும், அது சார்ந்த கல்வியை முன்னெடுக்க வேண்டும் என்ற பெரும் முனைப்பில், பெரும் முயற்சியாலும், கடும் உழைப்பாலும், பெரும் பொருளாதார நெருக்கடிகளை கடந்தும் தான் தமிழ் ஸ்டுடியோ ‘ப்யூர் சினிமா புத்தக அங்காடியை’ கொண்டு வந்திருக்கிறது. இதை வெறுமனே புத்தகங்களை விற்பனை செய்யும் வணிக நோக்கத்தினை முன்னிருத்தும் புத்தகக்கடை என்று சொல்லிவிட முடியாது. தமிழ் ஸ்டுடியோ என்ற ஒரு இயக்கத்தின் களச்செயல்பாடுகளுள் மிக முக்கியமானது இந்த ‘ப்யூர் சினிமா’ புத்தக அங்காடி. தொடர்ந்து நீங்கள் ப்யூர் சினிமா புத்தக அங்காடிக்கு வந்தால் அதன் நோக்கத்தினை உணரலாம்.

சிறந்த சினிமா சார்ந்த புத்தகங்களை கொண்டு வர வேண்டும்  என்ற நோக்கில் தமிழ் ஸ்டுடியோ “பேசாமொழி” பதிப்பகத்தின் சார்பில் பல அரிய புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. இயக்குநர் மிஷ்கினின் ஐந்து திரைப்பட திரைக்கதைகளை புத்தகங்களாக கொண்டு வந்திருக்கிறது. அதில் “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” புத்தகம் அற்புதமானது.  விற்பனையில் பெரும் சாதனை படைத்தது. இயக்குனர் வஸந்தின் திரைக்கதை புத்தகங்கள், சினிமா அரசியல் சார்ந்த எழுத்தாளர் யமுனா ராஜேந்திரனின் புத்தகங்கள், ப்ரசன்ன விதாகனே திரைக்கதை,  படச்சுருளில் வெளிவந்த அற்புதமான கட்டுரைகளை புத்தக வடிவில் “தலித் சினிமா, சாதீய சினிமா, சிறுவர் சினிமா, விநாடிக்கு இருபத்து நான்கு பொய்கள்” என அற்புதமான புத்தகங்கள், தீஷா எழுதிய சினிமா உருவாக்கம், திரைக்கதை சார்ந்த, தொழில்நுட்பம் சார்ந்த அட்டகாசமான புத்தகங்களை மக்கள் பதிப்பாக குறைந்த விலையில்தந்த “ஜூரோ பட்ஜெட் பிலிம் மேக்கிங், கினோ, மான்டேஜ்” போன்ற புத்தகங்கள், ஒளிப்பதிவு சார்ந்த விஜய் ஆர்ம்ஸ்டாங்கின் புத்தகம், மற்ற பதிப்பகம் வெளியிட்டு தற்போது பதிப்பில் இல்லாத நல்ல நல்ல சினிமா சார்ந்த  புத்தகங்களையெல்லாம் தேடித்தேடி அவற்றின் தற்போதைய தேவை குறித்து பேசியும் புத்தகமாக வெளியிட்டும் வருகிறது தமிழ் ஸ்டுடியோவின் “பேசாமொழி’ பதிப்பகம். அதுமட்டுமின்றி “ப்யூர் சினிமாவில்” தொடர்ந்து வாரவாரம் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவசியம் பேச வேண்டும். ‘தமிழ் சினிமாவின் நூற்றாண்டை” சிறப்பிக்கும் விதமாக நூறு நிகழ்வுகளை தமிழ் சினிமாவில் இருக்கும் அத்துனை பிரிவு சார்ந்து இருக்கும் சிறந்த கலைஞர்களை அழைத்து சிறப்பித்து ஒரு பயிற்சி வகுப்பினை, பெரும் கலந்துரையாடலை ஏற்படுத்தித் தருகிறது. கிட்டத்தட்ட நூறு கலந்துரையாடல்களுக்கு மேல் அவை கடந்திருக்கும். எந்தவித கட்டணமும் வசூலிக்காமல் இதனை ப்யூர் சினிமா நடத்துகிறது. இளம் இயக்குநர்கள், நடிப்பு, இசை, படத்தொகுப்பு, திரைஎழுத்தாளர்கள், நாடகம், ஒளிப்பதிவு, திரைப்பட விநியோகம், திரைக்கதை, பெண் கலைஞர்கள், சென்சார், சண்டைக்கலைஞர், டப்பிங் கலைஞர், மேக்கப் கலைஞர், லைட்மேன் என சினிமாவின் ஆதி முதல் அந்தம் வரை இருக்கும் சிறந்த கலைஞர்களை அழைத்து வந்து பெரும் கூட்டத்திற்கு இடையேயும், புத்தகங்களாக அமர்ந்திருக்கும் பெரும் ஆளுமைகளுக்கிடையேயும் அவர்களை பேச கலந்துரையாட வைத்து அங்கீகரித்து நாம் அதில் பங்கெடுத்துக் கொள்ள பெரும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது ப்யூர் சினிமா. புத்தக தினவிழா கொண்டாட்டங்கள், ப்யூர் சினிமா ஆண்டு விழா கொண்டாட்டங்கள், படச்சுருளின் ஆண்டு விழா கொண்டாட்டங்கள், வருடாவருடம் விடிய விடிய நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் என அனைத்தும் அற்புதமான கலைஞர்களுடன் சிறந்த சந்திப்பினையும், சிறந்த திரைப்படங்களையும் திரையிட்டு பெரும் விவாதத்தையும் முன்னெடுத்து வருகிறது. இதெல்லாம் ப்யூர் சினிமாவில் தான் நடக்கும். இந்த கொண்டாட்டங்களில் எல்லாம் வணிக நோக்கத்தினை முற்றிலும் துறந்து தனது “பேசாமொழி” பதிப்பக புத்தகங்களை சினிமா ஆர்வலர்கள் தந்த உதவியின் மூலம் இலவசமாக உதவி இயக்குநர்களுக்கு வழங்கியிருக்கிறது. அதே போல படச்சுருளை தந்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ‘தமிழ் ஸ்டுடியோ’ வே அப்புத்தகங்களை ஐம்பது சதவீத, முப்பது சதவீத தள்ளுபடி விலையில்,மற்ற பதிப்பக புத்தகங்களை பத்து சதவீத தள்ளுபடியில் தந்திருக்கிறது. இது அப்புத்தகங்களை அனைவரும் படிக்க வேண்டும் அதனால் சினிமா சார்ந்த வாசிப்பு தீவிரமாக உருவாக வேண்டும் என்பதை நோக்கிய பெரும் களப்பணியே அன்றி, வேறேதும் இல்லை. சனிக்கிழமைகளில் குறும்படங்கள் திரையிடல், ஆவணப்படங்கள் திரையிடல், ரெட்ரோஸ்பெக்டிவ் வகையில் சிறந்த உலக சினிமா மகத்தான கலைஞர்களின் திரைப்படங்களை திரையிடல், புத்தகதின விழா சிறப்பு திரையிடல்கள், புத்தகப் பரிமாறல் நிகழ்வு, பெண்கள் தின கொண்டாட்டம், பயிற்சி பட்டறைகள், பௌர்ணமி இரவு திரையிடல்கள்  என எக்கச்சக்கமான நிகழ்வுகளை ப்யூர் சினிமா முன்னெடுக்கிறது. ப்யூர் சினிமா புத்தக அங்காடியில் நடக்கும் எவ்வித நிகழ்வுக்கும் பணம் கிடையாது. மேலே தனியாக தனி ஹாலில் நடத்தினால் மட்டுமே சிறு அளவில் பணம் பெற்று நடத்துகிறார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவிலும் நம்மை புத்தகங்கள் வாங்கி படிக்குமாறு அதன் அவசியத்தை உணர்த்துகிறது தமிழ் ஸ்டுடியோ. நாம் புத்தகங்கள் வாங்குவதன் மூலமாகத்தான் அதன் மூலம் வரும் தொகையினால் தான் இது போன்ற தொடர்ந்து களப்பணிகள் நடக்குமே தவிர, மற்றபடி இவையெல்லாம் பெரும் சிரமமே. இதையெல்லாம் வைத்துத்தான் நாம் “ப்யூர் சினிமாவை” பார்க்க வேண்டும். வெறும் புத்தகக்கடை என்ற வரையறைக்குள் அது அடங்கி நிற்காது. அது வணிக நோக்கத்தினை கடந்தது. மிக முக்கியமாக தமிழ் ஸ்டுடியோ என்றுமே தனிமனித துதியை முன்னெடுக்காது. அந்தவகையில் பெரும் கலைஞர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து வருவதைக் காட்டிலும் கலைசார்ந்து சமரசமற்று இயங்கும் எந்தவொரு கலைஞனும் தமிழ் ஸ்டுடியோ வின் கதாநாயகன் தான். 

ப்யூர் சினிமாவில் இருக்கும் புத்தகப் பிரிவுகள் என திரைக்கதை சார்ந்த புத்தகங்கள் என ஆங்கிலத்தில் வெளியான டேவிட் மேமட், சிட்பீல்ட், ஜோசப் கேம்ப்பல் ஆகியோரின் புத்தகங்கள், புகைப்படக்கலை, ஒளிப்பதிவு சார்ந்த மிக முக்கியமான புத்தகங்கள், தமிழில் வெளியான சிறந்த திரைக்கதை நூல்கள் என தனிப்பிரிவே இருக்கிறது. நடிப்பு சார்ந்த புத்தகங்கள் அடுத்த ரேக்குகளில் நிரம்பியுள்ளன. உலக சினிமா குறித்த புத்தகங்கள், நேர்காணல்கள், உலக திரைப்பட மேதைகள் பற்றிய புத்தகங்கள், உலக சினிமா திரைக்கதை புத்தகங்கள், சிறந்த கட்டுரைகள் அடங்கிய புத்தகங்கள், பேசாமொழி வெளியீடுகள், இசை சார்ந்த புத்தகங்கள், பெண் திரைப்பட கலைஞர்கள், தமிழ் , இந்தி, மலையாளம் திரைப்பட கலைஞர்கள் குறித்த புத்தகங்கள், சுயாதீன திரைப்படங்கள், சுயாதீன திரைப்பட உருவாக்கம், சுயாதீன திரைப்பட கலைஞர்கள் குறித்த புத்தகங்கள் என நிரம்பியிருக்கிறது. நடிகர்கள், திரைப்பட மேதைகள் சுயசரிதைககள் புத்தகங்களும், ஆவணப்படங்கள், குறும்படங்கள் குறித்த அறிமுக விரிவான புத்தகங்கள், ஓவியம், நடனம், நாடகங்கள், காமிக்ஸ், திரைப்பட தொழில்நுட்பங்கள், திரைப்பட உருவாக்கம், சினிமா விமர்சனம், சினிமா ரசனை, திரைப்படமான நாவல்கள், சிறுகதைகள் என பலப்பல பிரிவுகள் சார்ந்த புத்தகங்கள் உண்டு ப்யூர் சினிமாவில். அதுமட்டுமின்றி டி ிடிக்கள் பிரிவென்று தரமான டிவிடிக்களாக மிகமிக முக்கியமான ஆவணப்படங்கள், குறும்படங்கள், பல்வேறு மொழிகளில் வந்த திரைப்படங்கள், என்.எப்.டி.சி வெளியீட்டு திரைப்படங்கள் என பெரும் பிரிவு இருக்கிறது. பல அரிய நூல்கள் இருக்கும் நூலகம் ஒன்றும் இருக்கிறது. அதில் பெரும் திரைப்பட தொகுப்பு ஒன்று இருக்கிறது. நீங்கள் தமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் ஆக இணைந்தால் இந் நூலகத்தையும், அத்திரைப்படங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சினிமா எனும் பெருங்கடலில் பயணிக்க ஆழ்ந்த சினிமா குறித்த வாசிப்பும், அவதானிப்பும், நீண்ட பயிற்சியும் தேவை அதை வழிகாட்டும் கலங்கரை விளக்குகளான புத்தகங்கள் நிரம்பிய ஒரு பெரும் புரட்சி விளக்கே “ப்யூர் சினிமா”! நூலகத்திற்கு எதிரே ‘தோழர் தமிழ் ஸ்டுடியோ அருண் மோ’ அவர்களின் அறையில் பழைய கிராமபோன் ஒன்றும் இருக்கிறது.

அதில் நீங்கள் விரும்பினால் பாடல்கள் கேட்கலாம். அதன் பின்புலத்தில் இருக்கும் நீண்ட கருப்பு சேரில் அற்புதமான புன்னகையுடன் அந்த மனிதர் உட்கார்ந்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். ப்யூர் சினிமாவில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் தோழர் அருண் மோ மற்றும் அன்புத் படிமைத் தோழர்களின் ஈடுபாடும் உழைப்பும், ஆர்வமும் அளப்பரியது. நிறைய முறை ப்யூர் சினிமா நிகழ்வுகளில் கலந்துகொண்டு இருக்கிறேன். 

சில தவிர்க்க இயலாத சூழலில் நல்ல நிகழ்வுகளை தவற விட்டும் இருக்கிறேன். நின்று கொண்டே பெரும் கூட்டத்திலும் நிகழ்வுகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். நேரமேலாண்மை மிகவும் முக்கியம் ப்யூர் சினிமாவில். நிகழ்வுகளுக்கு சரியான நேரத்தில், அதுவும் முன்கூட்டியே வந்துவிடுங்கள் என்று சொல்லிவிடுவார்கள். 

இரண்டு வருடங்களாக புத்தாண்டை ப்யூர் சினிமாவில் தான் கொண்டாடுகிறேன். எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் குருநாதர் மிஷ்கினுடன் அதை கொண்டாடிய நினைவெல்லாம் பொக்கிஷங்கள் என்பேன். மறக்கவியலா நிறைய நிகழ்வுகள் உள்ளன. ப்யூர் சினிமா அந்த நிகழ்வில் தந்த இயற்கை உணவுகளின் சிறப்பெல்லாம் மறக்கவியலுமா? நல்ல நண்பர்களை தந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் கலந்து கொள்ளும் நிகழ்விலும் நிச்சயமாக ஒரு புத்தகமாவது வாங்கிவிடுவேன். இப்போது ஆறு வாரங்களாக எந்த நிகழ்வும் இல்லை. ப்யூர் சினிமா புதுப்பொலிவுடன் தனது அடுத்த பாய்ச்சலுக்காக தயாராகி விட்டது. இரண்டு முறை வேலை நடக்கையில் ப்யூர் சினிமா கடைக்கு சென்றேன். படிமைத் தோழர்கள்  ஆசையாக இதெல்லாம் இங்கு இங்கு வருகிறது என்று ஆவலாய் சுற்றிக் காட்டினார்கள். மகிழ்வாய் இருந்தது. இரண்டாம் முறை போகும் போது இம்மாத படச்சுருளையும், தீஷாவின் “மாண்டேஜ்” புத்தகங்களை அன்பு படிமைத் தோழன் ரமேஷிடம் வாங்கிக்கொண்டு திரும்புகையில் உள்ளே ‘பிங்க் நிற டீசர்ட்டும், நீலநிற ஜீன்ஸூம் அணிந்து கொண்டு சரேலென அந்த மனிதர் அதே புன்னகையுடன் உள்ளே நுழைகிறார். ‘வாங்க அருண்! வாங்க லெட்சுமி!’ என்ற சக புன்னகைப் பரிமாறல்கள்! மனிதர் அதே புன்னகை மாறாமல் கடந்து போகிறார். அன்பின் படிமைத் தோழர்களே எனக்கு ஒரு உதவி செய்யுங்களேன்! அம்மனிதருக்கு என் சார்பில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் எனக்கு நீங்கள் தந்த அந்த விஷேமான தேநீர் ஒரு கப்பும், சூடான நவதானிய வடையும் தாருங்கள் படிமைத் தோழர்களே! புதுப்பொலிவு பெறும் எங்கள் “ப்யூர் சினிமாவே” உனக்கு அன்பின் வாழ்த்துகள். ஞாயிறு சந்திப்போம்! கலைகட்டட்டும் கொண்டாட்டங்கள்.
 

Leave Comments

Comments (0)