சாதி என்கிற புத்தை உடைக்கிறது பரியேறும் பெருமாள்- சீமான் 

/files/detail1.png

சாதி என்கிற புத்தை உடைக்கிறது பரியேறும் பெருமாள்- சீமான் 

  • 22
  • 0

-வித்யா 
 
சாதியம் இந்தச் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய கொடிய நோய் என்பதை தெளிவாக உணர்த்துகிறது பரியேறும் பெருமாள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நீலம் புரொடக்ஷன்ஸ் பா. ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜின் இயக்கத்தில் கதிர், ஆனந்தி நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்தப் படம் குறித்து சீமான் நேற்று (அக்டோபர் 02) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, "பொதுவாக  நாம் நிறையப் படங்கள் பார்ப்போம். அப்படிப் பார்க்கும்போது இந்தப் படம் ஒரு படம் அல்ல அது பாடம் என்று கூறுவோம். அப்படிச் சொல்வது எவ்வளவு பெரிய பொய் என்று பரியேறும் பெருமாள்  படத்தைப் பார்த்த பிறகுதான் தெரிகிறது. உண்மையிலேயே பரியேறும் பெருமாள், படம் அல்ல அது பாடம். திரையில் ஒரு புரட்சி என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜை பொறுத்தவரையில் தன்னுடைய அனுபவம், வயது ஆகியவற்றைத் தாண்டிய ஒரு ஆகச்சிறந்த படைப்பாக உருவாக்கியுள்ளார். சொல்லவருகிற கருத்தை அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்றுதான் அனைவரும் நினைப்போம். ஆனால், மாரி செல்வராஜ் அவரின் வலியை அனைவருக்கும் கடத்தியிருக்கிறார்.

சாதியம் இந்தச் சமூகத்திற்கு எவ்வளவு பெரிய கொடிய நோய் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது இந்தப் படம். சாதியைத் தூக்கி பிடிப்பவர், அந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டவர்கள் திரையரங்களிலிருந்து வெளியேவரும் போது தலை குனிவர். இந்தக் காயத்தை நீண்ட காலமாக சுமந்துவந்தவர்கள் கண்ணீரோடு கடந்து செல்வர். 

                                                                   alt text

இதை இரண்டையும் ஒரே திரைப்படத்திற்குள் கடத்துவது என்பது அரிது. 50 ஆண்டுகளாகச் சாதியை ஒழிப்பதற்கு எத்தனையோ இயக்கங்கள் போராடிவருகிறது. பிறப்புபொக்கும் எல்லா உயிருக்கும், சாதி இரண்டொழிய வேறில்லை என்பதிலிருந்து சாதி ஒழிப்பு போராட்டம் நடக்கிறது. ஆனால் யாரும் தான் சுமந்த, தான் அனுபவித்த வேதனைகளை மற்றவர்களுக்குக் கடத்தியது இல்லை. அதுகுறித்து பேசியிருக்கிறோம், எழுதியிருக்கிறோம் ஆனால் மற்றவர்களை உணரவைத்தோமா? என்பது கேள்விக்குறி. 

ஆனால் இந்தப் படம், இரண்டரை மணி நேரத்திற்குள் இவ்வளவு பெரிய தாக்கத்தை, வலியைக் கடத்திவிடுகிறது. படத்தின் படைப்பாளியான மாரி செல்வராஜிக்கும், தயாரிப்பாளர் ரஞ்சித்துக்கும் இந்த முழு பெருமையும் வெற்றியும். 

சாதிய இழிவை எதிர்த்துப் போராடாமல் இருப்பதைவிடச் செத்துமடிவதே மேல் என்று கூறுகிறார் அம்பேத்கர். சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்று விஷமாகும் என்கிறார் கவிஞர் பழனி பாரதி. சாதி என்கிற புத்தை இடித்துத் தள்ளுவது போன்றுதான் இந்தப் படத்தை பார்க்கிறேன்.  இந்தப் படத்தை பார்ப்பது ஒவ்வொருவரின் கடமை. இந்தப் படத்தை கொண்டாடவேண்டும். இது ஒரு பேராவணம். 

தமிழ்ச் சமூகத்தின் இளைய தலைமுறை பிள்ளைகள், இதை ஒரு பொழுபோக்கு படமாகப் பார்க்காமல், பேராவணமாக பார்க்கவேண்டும். எவன் ஒருவன் தன்னை தவிர மற்றவன் ஒடுக்கப்பட்ட சாதி என்று நினைக்கிறாரோ அந்த எண்ணமுள்ளவன்தான் ஒடுக்கப்பட்ட சாதியாக இருக்கமுடியும். அதுதான் எதார்த்த உண்மை. 

மாரி செல்வராஜின் வலியை நமக்குள் கடத்தியிருக்கிறார். அதை நீங்கள் உணர்ந்துவிட்டிர்கள் என்றால் இந்தப் படைப்பாளிக்கு வெற்றிதான். எவ்வளவு பாராட்டினாலும் போதாது. கதிர், ஆனந்தி என அனைவரும் கதாப்பாத்திரத்தோடு ஒன்றிப்போய்  நடித்துள்ளனர். ஒவ்வொரு நொடியும் பதற்றத்தை தரக்கூடிய அளவுக்குத் திரைக்கதை அமைந்துள்ளது. படக்குழுவுக்குத் தனது பாராட்டுக்கள்" என்று தெரிவித்தார்.
 

Leave Comments

Comments (0)