கோயம்புத்தூரில் உள்ள 800 வருட பழமையான அரச மாளிகை!

/files/detail1.png

கோயம்புத்தூரில் உள்ள 800 வருட பழமையான அரச மாளிகை!

  • 32
  • 0

- V.கோபி 

சமீபத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எழில்மிகுந்த பொள்ளாச்சி ஊருக்குச் சென்றிருந்தபோது, அங்குள்ள ஒரு பழைய மாளிகை பற்றிய கதையை கேட்டேன். ஜமீன் ஊத்துக்குளி மாளிகையில் இருக்கும் பல பொக்கிஷங்கள் பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களால் - மிகவும் பழம்பொருள் குறித்த அறிவும் இருந்தாலன்றி – இன்று நினைவு கூறமுடியாது. ஊத்துக்குளியில் உள்ள முன்னாள் ஜமீன்தார் குடும்பத்திற்குரியதான இந்த பாரம்பரிய தமிழ் வீடு, 800 வருடம் பழமையானதாகும். காலிங்கராயர்களுக்கு சொந்தமான இந்த மாளிகை, முகலாயர்கள் இந்தியாவில் தங்கள் ஆட்சியை நிறுவுவதற்கு முன்பே கட்டப்பட்டுள்ளது.

கலிங்கராய குடும்பத்தின் 37-வது தலைமுறையை சேர்ந்தவரான சித்தார்த் ஏஎம்ஆர் காலிங்கராயரை சந்தித்தேன். தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள ஊத்துக்குளி அரண்மனை மாளிகையில் இவரது தந்தையான அருன்குமார் காலிங்கராயர் வசித்து வருகிறார். தொழிலதிபரும் INTACH (Indian National Trust for Art and Cultural Heritage) உறுப்பினருமான சித்தார்த், என்னை அரண்மனைக்குள் வரவேற்றதோடு காலிங்கராயர்களின் வரலாற்றையும் கூறினார்.

சோழர்கள் காலத்தில் தமிழ்நாட்டின் மேற்குப்பகுதிகளில் ஆட்சி புரிந்த பண்டைய அரசர்களின் வம்சாவளியினரே காலிங்கராயர்கள். மைசூரின் உடையார்கள் மற்றும் மதுரையின் நாயக்கர்களுக்காக போரிடும் இவர்கள், எந்த போரிலும் தோல்வியடைந்ததில்லை என கூறப்படுகிறது. “கொங்கு நாட்டின் வெள்ளோடு பகுதியை ஆட்சிபுரிந்த எனது மூதாதையர்கள், 1282-ம் ஆண்டு வாக்கில், காவிரி ஆற்றின் கிளை நதிகளான அமராவதி, பவானி மற்றும் நொய்யல் ஆகியவற்றை இணைத்து தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியில் வாழும் மக்களுக்காக கால்வாய் ஒன்றை அமைத்தனர். இந்த கால்வாயின் பெயரே காலிங்கராயர் கால்வாய். எங்களது சேவையை பாராட்டி ‘ராயர்’ என்ற பட்டத்தை விஜயநகர பேரரசு வழங்கியது. அதன்பின்னர் எங்கள் குடும்பம் ஊத்துக்குளிக்குச் சென்று அங்குள்ள காடுகளை புணரமைத்து விவசாய நிலங்களாக மாற்றினர். இப்பகுதியில் குடியேறிய முதல் குடும்பம் எங்களுடையதே” என்று கூறும் சித்தார்த், மாளிகையை புதுப்பிக்கும் மிகப்பெரும் வேலையை 2011-ம் ஆண்டு தொடங்கினார்.

ஜமீன்தாரி அமைப்பு ஒழிக்கப்பட்டதும், அதிகாரப்பூர்வ பட்டத்தை தவிர்த்து வந்தாலும், ‘ராயர்’ அடைமொழியை மட்டும் பயன்படுத்தியே வந்தனர். மாளிகையை புதுப்பிக்கும்போது அதன் இயல்பு தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் சித்தார்த். மாளிகையின் குழாய் அமைக்கும் பணிகள், மின்சார பணிகள், மரவேலைகள், விளக்குகள் போன்றவை மட்டுமே புதுப்பிக்கப்பட்டுள்ளன.
மாளிகையின் மைய அறை முழுவதும் பல வகையான புகைப்படங்கள் நிரம்பியுள்ளன. விலங்கு வேட்டையில் சேகரித்தவை, ஆயுதங்கள், மான் கொம்பு, எலும்பு, உலோகத்தால் செய்யப்பட்ட கைப்பிடி உறைகள் என அறை முழுவதும் உள்ளன. வேட்டையாடுதல் அரச விளையாட்டாக இருந்த காலத்தில் இந்த மாளிகை கட்டப்பட்டது. பல கலைப்பொருள்களை சேகரித்து வைத்துள்ள இம்மாளிகையை கடந்த காலத்தின் பொக்கிஷ குவியல் என்றே கூறலாம். யானை தந்தத்திலான மேஜை முதல் பழைய மெழுகுவர்த்தி விளக்குகள், பண்டைய நாணயங்கள், 300 வகையான முத்து/பவளம் மற்றும் தேக்கு மரத்தால் செய்யப்பட்ட நாற்காலிகள், மயில் சிலைகள். இதுமட்டுமின்றி திருமண விஷேங்களில் பயன்படுத்துவதற்காக குடும்பத்திற்கென்று தனியாக இரண்டு வெல்வெட் இருக்கைகள் உள்ளன. இவையாவும் பார்வையாளர்களுக்கு கோயம்புத்தூரில் வாழ்ந்த காலிங்கராயர் குடும்பத்தின் வாழ்க்கையை தெரிந்துகொள்ளும் பொருட்டு தேர்ந்தெடுத்து செய்யப்பட்டுள்ளது.

நான்கு வெவ்வேறு காலகட்டங்களில் நான்கு பகுதிகளாக கட்டப்பட்ட இந்த மாளிகை, ஒவ்வொரு பகுதியும் தனித்துவமான கட்டிட வடிவமைப்பை கொண்டுள்ளது. வடக்கு கேரளத்தோடு ஊத்துக்குளிக்கு இருந்த நெருக்கமான உறவு காரணமாக, முதல் பகுதி கேரள கட்டிட பாதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் வருடத்திற்கு ஐந்து மாதங்கள் மழை பெய்வதால், மேற்கூரை சாய்வாகவும் உயரம் குறைவாகவும் வைக்கப்பட்டுள்ளது. அன்றைய நாட்களில் நெல்களை சேமித்து வைக்க மாளிகையில் மிகப்பெரும் களஞ்சியம் கட்டப்பட்டுள்ளது. 350 வருடங்களுக்கு முன் கடப்பட்ட இரண்டாம் பகுதி, அலங்கரிகப்பட வளைவுகள், வட்டமான தூண்கள் மற்றும் மெல்லிய செங்கலை கொண்டு முகலாயர்கள் பாணியில் கட்டப்பட்டுள்ளது.

அரண்மனையின் சில பகுதிகளில், மிருதுவான சிமெண்ட் தளம், மங்களுர் டைல்ஸ், ரோமன் வளைவுகள் என இந்தோ-சரசெனிக் கட்டிட கலையும் உள்ளது. மஞ்சள் கற்களால் ஆன மாடிப்படிகளில் ஏறிச் சென்றால் பரந்த மொட்டை மாடியை அடையலாம். மேலும் பண்டைய அரசர்களின் தலையை அலங்கரித்த அரச தலைப்பாகையை தற்போது முன்பக்க மாடத்தில் வைகபட்டுள்ளது. சுமார் 80 வருடங்களுக்கு முன் நடைபெற்ற இறுதிகட்ட கட்டிட பணிகளில், அறையுடன் கூடிய கழிப்பறைகள், மொசைக் டைல்ஸ், மின்சார இணைப்பு என “பங்களா வடிவமைப்பு” தெரிகிறது. இந்த அரண்மனை முழுதும் வளைந்து செல்வது போன்ற கட்டிட வடிவமைப்பிலேயே கட்டப்பட்டுள்ளது; எங்கும் நேர் கோட்டில் செல்வதை நாம் பார்க்க முடியாது.
கோவையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ரஜேஷ் கோவிந்தராஜ் கூறுகையில், “காலிங்கராயர்களின் நீண்ட வரலாறை இன்றும் ஊத்துக்குளி மக்கள் நினைவு கூர்கிறார்கள். பலவகையான கட்டிட வடிவமைப்பின் சிறந்த உதாரணமாக இந்த அற்புதமான மாளிகையை கூறலாம். சமீபத்திய மறுசீரமைப்பால், இதன் பெருமையை நிரந்தரமாக்கியுள்ளனர் குடும்பத்தினர். மாளிகை மட்டுமின்றி, ஊத்துக்குளியில் உள்ள 12-க்கு மேற்பட்ட பழங்கால கோயில்களையும் இவர்கள் பரமரித்தும் பாதுகாத்தும் வருகின்றனர்” என்கிறார். 

இதன் பாரம்பரியத்தை மீட்க எடுத்துக்கொண்ட முயற்சியையும் கைத்திறன் வேலைபாடுகளையும் பாராட்டுவதற்கு ஒரு நாள் போதாது. மறுசீரமைப்பு முடிந்த பிறகு, சித்தார்த் ஏஎம்ஆர் காலிங்கரயர் அவர்களே பார்வையாளர்களுக்கு இம்மாளிகையை இரண்டு மணி நேரம் சுற்றி காண்பிக்க உள்ளார்.

நன்றி: architecturaldigest 

Leave Comments

Comments (0)