மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் தமிழ் சினிமாவில் அரிதான புத்துணர்ச்சியூட்டும் நேர்மையான முயற்சி.

/files/detail1.png

மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் தமிழ் சினிமாவில் அரிதான புத்துணர்ச்சியூட்டும் நேர்மையான முயற்சி.

  • 3
  • 0

-கிருத்திகா ஸ்ரீனிவாசன் தமிழில் V.கோபி 

படத்தில் தொழிலாளர் உரிமைகளுக்காக போராடி வரும் தோழர் சகோ கதாபாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். “ஏன் இந்த பாண்டிகளின் (தமிழர்கள்) உரிமைகளை பாதுகாக்க இவ்வுளவு மெனக்கெடுகிறாய் என்று பண்ணை முதலாளி கேட்கையில், தொழிலாளர் உரிமைகளுக்காகவே நான் போராடுகிறேன் – தமிழர்களுக்கோ, மற்றவர்களுக்கோ அல்ல” என்று கோபமாக கூறுகிறார் மலையாளியான சகோ.

சகோ கதாபாத்திரத்தை மட்டும் இப்படி தனித்து கூறிவிட முடியாது. மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் நம்மிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிறுக்கு கிழவி கதாபாத்திரம். யானை இருப்பதாக எண்ணிக்கொண்டு கூக்குரலிட்டு அதை விரட்டுவதற்காக காற்றில் கல் எறியும் அக்கிழவி, மனிதர்கள் – விலங்குகள் மோதல் குறித்தான சிறந்த குறியீடு. (அக்கிழவியின் கனவர் யானை மிதித்து இறந்ததால், அவர்கள் இதுவரை சேமித்து வைத்த பணத்தையெல்லாம் இழந்து மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்).
நூறாண்டுக்கும் மேலான தமிழ் சினிமா வரலாற்றில், நிலமில்லா தொழிலாளர்களின் பாடுகள் குறித்து மேற்கு தொடர்ச்சி மலை படம் சித்தரித்த அளவிற்கு வேறு எந்த படங்களும் இல்லை. வழக்கமாக தமிழ் சினிமா பழங்குடி/தொழிலாளர் வாழ்க்கைகளை உணர்ச்சிமயமாக்கிவிடும். ஆனால் மேற்கு தொடர்ச்சி மலை படம் உள்ளது உள்ளபடி கூறியதால், அதன் நேர்மை நம்மை காயப்படுத்துகிறது.

லெனின் பாரதி இயக்கியுள்ள இப்படம், பண்ணைபுரம், தேவாரம், கோம்பை போன்ற கிராமங்களையும் அதைச் சுற்றியுள்ள குதிரைபஞ்சன் மேடு, வட்டப்பாரை, சாத்தான் மேடு, ராமக்கால் மேடு மற்றும் பதினெட்டாம் படி போன்ற மலைப்பகுதிகளை கதைக்களமாக கொண்டுள்ளது. இம்மலையை சுற்றிலும் அமைந்துள்ள பல ஏலக்காய் தோட்டங்கள், வெளியாட்கள் பார்வையில் கண்களுக்கு குழுமையாக இருந்தாலும், அங்கு பணிபுரிபவர்களுக்கு அவை தண்டனை களங்களே. அடிப்படையில் மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம், வார சம்பளம் வாங்கும் நிலமில்லா தொழிலாளர்களின் போராட்டங்கள் பற்றியதே. இது தமிழ் சினிமாவில் எளிதில் காணக் கிடைக்காதது.

அதிகாரம் படைத்தவர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் தலைமுறை தலைமுறைகளாக நீடித்து வரும் நிலப்பிரசனைக்கே தன்னுடைய படத்தில் முகியத்துவம் கொடுத்துள்ளதாக கூறுகிறார் லெனின். கார்ப்பரேட் நிறுவனங்களின் துணையோடு அரசாங்கங்கள் எப்படியெல்லாம் பழங்குடிகளுக்குச் சொந்தமான நிலங்களை அபகரித்தன என்பதை எந்த தயக்கமும் இல்லாமல் திரைப்படம் நமக்கு விளக்குகிறது. தொழிலாளர்கள் படும் வலிகளை தனது உணர்ச்சிகரமான இசையின் மூலம் பார்வையாளர்களிடம் கொண்டு சென்றுள்ளார் இளையராஜா. தன்னுடைய ஒளிப்பதிவால், மேற்கு தொடர்ச்சி மலை படத்தை ஒரு படி மேலே கொண்டு சென்று விடுகிறார் தேனி ஈஸ்வர். மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும் மக்கள் படும் வேதனைகளையும் பார்வையாளர்களுக்கு ஒருங்கே கடத்தியுள்ளார்.

படத்தில் நடித்தவர்களில் 90 சதவிகிதம் பேர் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்களே. இயக்குனர் லெனின் பாரதியும் அங்குள்ள கிராமத்தேச் சேர்ந்தவரே. “எனது குழந்தை பருவத்தை இங்குள்ள கிராமத்தில் தான் கழித்தேன். எனது அம்மா எஸ்டேட்டில் தொழிலாளியாகவும் அப்பா கம்யுனிஸ்ட் இயக்கத்திலும் இருந்தார். பாட்டாளி வர்க்க போராட்டம் தொடர்பான ரஷ்ய கதைகளையும் அவர்களது உரிமைகளை மீட்டெடுத்த அரசியல் பற்றியும் எனது சிறு வயதிலேயே தெரிந்து கொண்டேன். அப்போது எனக்கு அது புரியவில்லை என்றாலும் வளர்ந்தபிறகு அதை நன்றாக புரிந்து கொண்டேன். எனது திரைப்படமும் இதைச்சுற்றியே அமைந்துள்ளது” என்கிறார் லெனின்.

தொழிலாளர்கள் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடும் இடதுசாரி இயக்கங்களுக்கு நன்றி கூறும் லெனின், பண்ணை முதலாளிகளால் அடிமைகளாக நடத்தப்பட்ட தொழிலாளர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்காக தொழிலாளர் சங்கம் அமைத்து அதன் காரணமாக வேலை நேரங்கள் முறைப்படுத்தப்பட்டு, வார சம்பளம், பெண்களுக்கு பிரசவ விடுமுறை, பண்டிகை சமயங்களில் போனஸ் மற்றும் பல சலுகைகளை பெற்று கொடுத்தது இடதுசாரி இயக்கங்களே.

கடந்த மூன்று வருடங்களாக லெனினும் அவரது படக் குழுவினரும் கிராமத்தினரோடு பயனம் செய்துள்ளனர். “இதனால் அவர்களோடு நெருங்கிய பந்தம் ஏற்பட்டுள்ளது. தங்களின் உண்மையான வாழ்க்கையையே பதிவு செய்கிறார்கள் என எங்களை புரிந்து கொண்டனர். சில சமயங்களில் எங்கள் மீது தன்னலமற்ற அன்பை செலுத்துகிறார்கள்” என்கிறார் லெனின்.

மேற்கு தொடர்ச்சி மலை படம் உலகம் முழுவதும் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் பிரச்சனை எங்களுக்கு மட்டுமே உள்ளது என நினைத்திருந்தோம். ஆனால் அப்படியில்லை என்பதை இப்படத்தின் மூலம் தெரிந்து கொண்டோம். இது உலகம் தழுவிய பிரச்சனை என்பதால் தான் எங்களால் சிறப்பாக படத்தோடு தொடர்பு படுத்த முடிந்தது என்று படக்குழுவினரிடம் பிரான்ஸ் நாட்டு உள்ளூர் விவசாயிகள் கூறியுள்ளனர். அதோடு மேற்கு தொடர்ச்சி மலை படத்தை தங்கள் ஊரில் திரையிடுமாறு இயக்குனர் லெனினிடம் கேட்டுள்ளனர். நிச்சியமாக திரையிடுவோம் என கூறியுள்ளார் லெனின். 

சினிமா என்பது சக்திவாய்ந்த ஊடகம், ஆனால் கிளிஷேக்கள் நிறைந்தது. மற்றொரு கிளிஷேவாக எனது படம் இருக்கக்கூடாது என விரும்பினேன். பார்வையாளர்களை அவர்களின் வேர்களுக்கு கூட்டிச் சென்று அவர்களின் கடந்த காலங்களை இரண்டு மணி நேரம் பார்வையிட வேண்டும் என ஆசைப்பட்டேன் என்று கூறும் லெனினுக்கு மேற்கு தொடர்ச்சி மலை முதல் படம். இப்பட்த்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரித்துள்ளார்.
“தமிழ் சினிமாவில் இப்படம் ஒரு புது முயற்சி என்று சந்தேகமின்றி கூறலாம். இத்தகைய நிலப்பரப்பில் உள்ள கதைகளையும் மக்களையும் நாம் கண்டுகொள்ளாமல் இருந்தது நமது ஒட்டுமொத்த தோல்வியே. மேற்கு தொடர்ச்சி மலையையும் அங்கு வசிக்கும் மக்களையும் உள்ளபடி திரையில் காண்பித்துள்ளார்” என்று பாராட்டுகிறார் இயக்குனர் ராம்.

மேற்கு தொடர்ச்சி மலை திரைப்படம் இந்த வாரம் திரையரங்கில் வெளியாகிறது. தனித்துவமான இப்படம் தமிழ் சினிமா வரலாற்றின் எங்கோ ஒரு பக்கத்தில் மறைந்து விடக்கூடியதல்ல. 

 நன்றி  the wire

Leave Comments

Comments (0)