DARK DRAVIDIAN - PROUD TAMIZHAN
April 18, 2022 - selvamani T
May 16, 2022,5:01:51 PM
- V.கோபி
கையால் மலம் அள்ளும் தொழில் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும், இன்றும் பல ஆயிரக்கணக்கான மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதோடு சாக்கடையை சுத்தம் செய்கையில் இறக்கவும் செய்கிறார்கள். 2010 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் சுமார் 1,470 கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் இறந்துள்ளதாக சஃபாய் கர்மாச்சாரி அண்டோலன் என்ற அமைப்பு கூறுகிறது. இன்று 1.8 லட்சம் மக்கள் இந்தியாவில் கையால் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டு வருவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த பொறியியலாளர் சிலர் இந்த மனித்தன்மையற்ற நடைமுறையை முடிவுகட்ட புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஆள்துளை சாக்கடை குழியில் உள்ளதை துல்லியமாக சுத்தம் செய்வதற்காக சிலந்தி போன்ற வடிவிலான ரோபோட் ஒன்றை தயாரித்து உள்ளார்கள். “பண்டிகூட்” என்று அழைக்கப்படும் இந்த ரோபாட், திருவணந்தபுரத்தில் உள்ள ஐந்து சாக்கடை குழியில் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள், மருந்து கழிவுகள், சகதிகள் போன்றவற்றை எந்த தடையுமின்றி சுத்தம் செய்துள்ளது. சிறிய சாக்கடை குழிகளை சுத்தம் செய்வதற்கு கால் மணிநேரமும், பெரியதை சுத்தம் செய்வதற்கு 45 நிமிடங்களும் எடுத்துக் கொள்கிறது.
இரண்டு வருடத்திற்கு முன்பு ஒன்பது பொறியியலாளர்கள் ஒன்றாக இணைந்து Genrobotics என்ற நிறுவனத்தை தொடங்கினர். அதன் தயாரிப்பே இந்த ரோபாட். “இந்தியாவில் கையால் மனித கழிவுகளை அகற்றும் தொழிலை முடிவுகட்டுவதே எங்களது முக்கிய நோக்கமாக இருந்தது. மனித குழிகளை ரோபா குழிகளாக மாற்றுவதற்கு இதுவே சரியான நேரம்” என்கிறார் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான 25 வயதாகும் விமல் கோவிந்த்.
ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த வெற்றிகரமான சோதனை ஓட்டத்தை தொடர்ந்து, திருவணந்தபுரத்தில் உள்ள அனைத்து சாக்கடை குழிகளையும் சுத்தம் செய்வதற்கு “பண்டிகூட்” ரோபாட்டை பயன்படுத்தப் போவதாக கேரள நீர் ஆணையம் கூறியுள்ளது.
மனித கழிவுகளை கையால் அள்ளும் பணி மற்றும் உலர் கழிப்பறை கட்டுமான தடைச் சட்டம், 1993, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணிகளை தடைசெய்தல் மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு, 2013 என கையால் மலம் அள்ளுதல், மனித கழிவுகளை அகற்றுதல், சாக்கடையை சுத்தம் செய்தல் போன்ற நடைமுறையை நீக்குவதற்கு இதுவரை இரண்டு சட்டங்களை நிறைவேற்றியுள்ளது இந்தியா. ஆனாலும் தங்கள் உயிருக்கு ஆபத்தானது என்று தெரிந்தும் இன்றும் பலர் சாக்கடை குழியை சுத்தம் செய்தே வருகிறார்கள். பல சமயங்களில், இவர்களை பணியமர்த்தும் - குறிப்பாக ஊராட்சி அமைப்புகள் - இவர்களுக்கு தேவையான பாதுகாப்பான உபகரணங்களை கொடுக்காத காரணத்தினால், விபத்து ஏற்பட்டு சில தொழிலாளர்கள் இறக்கவும் நேரிடுகிறது. பாதுகாப்பான் தலைக்கவசம், கையுறை, முகமூடி போன்றவை கூட பலருக்கு சொகுசு பொருளாக இருக்கிறது. இதன் காரணமாக சாக்கடை குழியில் இருந்து வெளிவரும் விஷ வாயுக்கள் மற்றும் ஆக்ஸிஜன் குறைபாட்டால் பல தொழிலாளர்கள் இறக்க நேரிடுகிறது. இத்தொழிலில் ஈடுபட்டு வரும் பெரும்பாலானவர்கள் தலித் சமூகத்தை சார்ந்தவர்கள். இது மிகவும் கொடிய வாழ்க்கை.
இந்நிலையில் “பண்டிகூட்” ரோபாட் மனித கழிவை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த ரோபாட்டை இயக்குவதற்கு ஒருவரே போதும். 80 கிலோ எடையுள்ள இந்த ரோபாட், சாக்கடை குழியினுள் தனது கரத்தை விட்டு உள்ளேயிருக்கும் கழிவுகளை வேளியே எடுத்து வாளியில் கொட்டுகிறது. “எல்லா செய்லபாடுகளையும் நாம் திரையில் பார்த்துக் கொள்ளலாம்” என்கிறார் கோவிந்த்.
“சாக்கடை சுத்தம் செய்யும் பணியாளர்களின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக ஆக்கப்போகிறது “பண்டிகூட்”. வேலையையும் உயிரையும் இழந்துவிடுவோம் என்ற பயமின்றி வாழ்வதற்கு இந்த ரோபாட் உதவியாக இருக்கும். அதுமட்டுமல்லால் ஜாதி அமைப்பையும் இது தகர்த்துவிடும். இனி எந்த மனித உயிர் இழப்பின்றி இந்தியாவில் சாக்கடை குழிகள் சுத்தமாக இருக்கும் என்பதை “பண்டிகூட்” உறுதி செய்யும். மேலும் இவர்களின் மறுவாழ்வை நோக்கமாக கொண்டு ரோபாட்டை இயக்கும் பயிற்சியையும் அளிக்கப்போகிறோம்” என்கிறார் கோவிந்த்.
2015-ம் வருடம், கேரளாவில் மெக்கானிக்கல் பொறியியல் படிக்கும் ஒன்பது மாணவர்கள் இணைந்து ரோபாட் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். “எல்லாரும் ரோபாட்டிக்ஸ் குறித்து மிகவும் ஆர்வமாக இருந்தோம். பலரும் தங்களின் யோசனைகளை பகிர்ந்து கொண்டதன் விளைவாக எங்கள் குழுவிற்கு Team Genrobotics என்ற பெயர் வைத்தோம். 2016-ம் ஆண்டு இதை ஒரு நிறுவனமாக தொடங்கியபோது இந்த பெயரிலியே இருக்க வேண்டும் என முடிவு செய்தோம்” என்கிறார் கோவிந்த்.
கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து கொண்டிருந்த போது இவர்கள் தயாரித்த ஆற்றல் வாய்ந்த புறத்தோடு, பல நற்பெயர்களை இவர்களுக்கு பெற்று தந்தது. நம் உடலில் பொறுத்திக்கொள்ளும் அளவே உள்ள இந்த இயந்திரத்தின் உதவியால், நமது மூட்டுகளுக்கு அதிக பலமும் உறுதியும் ஏற்படும். கனமான பொருட்களை தூக்கிச் செல்லும் ரானுவ வீர்ர்களுக்கும் தீயணைப்பு படையினருக்கும் இந்த இயந்திரம் உதவியாக இருக்கும்.
“2016-ம் ஆண்டு கல்லூரியை முடித்து வெளிவந்ததும், மருத்துவதுறை மற்றும் தொழில்துறையில் பயன்படக்கூடிய வகையிலான புறத்தோடை தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டோம். இதற்கான நிதியை பெற பல நிறுவனங்களில் பணி புரிய ஆரம்பித்தோம்” என்கிறார் கோவிந்த்.
2017-ம் ஆண்டு இவர்களின் திட்டத்திற்கு ஸ்டார்ட்-அப் மிஷன் மூலம் நிதி உதவி அளிப்பதாக கேரள அரசு அறிவித்தது. “மறுபடியும் எங்கள் ரோபாட்டிக்ஸ் கனவிற்கு ரெக்கை கிடைத்ததும் அனைவரும் ஒன்றிணைந்தோம்” என்கிறார் கோவிந்த்.
தங்களது திட்டத்தின் யோசனையை விவாதிப்பதற்காக கேரள மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சரான சிவசங்கரை சந்திக்க சென்றுள்ளனர் Genrobotics குழுவினர். இது குறித்து கூறும் கோவிந்த், “சாக்கடை குழியை சுத்தம் செய்யும் ரோபாட்டை உங்களால் தயாரிக்க முடியுமா என அமைச்சர் எங்களிடம் கேட்டார். சாக்கடையை சுத்தம் செய்யும் ஒருவரின் புகைப்படம் அன்றைய பத்திரிகையில் வெளியானதே அவரின் கேள்விக்கு தூண்டுதலாக இருந்தது. நாங்கள் இதற்கு உடனடியாக ஒத்துக்கொண்டோம்”
உடனடியாக தங்கள் பணியை ஆரம்பித்த குழுவினர், பலவகையான சாக்கடை குழிகளை ஆய்வு செய்து, அதனை சுத்தம் செய்யும் வழிமுறைகளை பல தொழிலாளர்களிடம் கேட்டறிந்து, மனித கழிவுகளை அகற்றும் பல்வேறு ஆவணப்படங்களையும் பார்வையிட்டனர். “மனித கழிவை அகற்றும் பனிகள் குறித்து புரிந்து கொள்வதற்கு இவை யாவும் பெரும் உதவியாக இருந்தது. மனிதனே அள்ளும் இந்த நடைமுறையே ஒழிக்க இதுவே சரியான தருணம் என முடிவு செய்து திட்டத்தின் பணிகளை முழுமூச்சாக தொடங்கினோம்” என்கிறார் கோவிந்த்.
மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் பார்த்த ஆவணப்படம் ஒன்றில், இந்த வேலையை செய்யச் சொன்னது கடவுள் தான் என்று சாக்கடை அள்ளும் தொழிலாளி ஒருவர் கூறுகிறார். அவர் கூறியது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த ஆபத்தான வேலையிலிருந்து இவர்களை மீட்பது தனது கடமை என அப்போதே நான் முடிவு செய்து கொண்டேன்” என்கிறார்.
எங்கள் கனவை நிறைவேற்றியதற்காக கேரள ஸ்டார்ட்-அப் மிஷனுக்கும் கேரள நீர் ஆணையத்திற்கும் நாங்கள் நன்றிகடன் பட்டுள்ளோம் என கூறும் கோவிந்த், “தோராயமாக ஒரு ரோபாட்டின் விலை 10 லட்சம் இருக்குமென்றும் பெருவாரியாக தயாரிக்கும் பட்சத்தில் இதன் விலை குறையக்கூடும். ஆனால் அரசாங்கத்திடம் பேசிய பிறகே இதற்கான விலையை இறுதி செய்ய முடியும்” என்றார்.
நன்றி: scroll.in
காப்புரிமை © 2021 கருஞ்சிறுத்தை. All Right Reserved.
Leave Comments