போலி செய்திகளை தடுப்பது எப்படி? - அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுக்கும் கேரளா

/files/detail1.png

போலி செய்திகளை தடுப்பது எப்படி? - அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுக்கும் கேரளா

  • 0
  • 0

-தமிழில் V.கோபி

“முற்றிலும் பொய்யான தகவல்கள், புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை கொண்டு மக்களிடம் குழப்பத்தையும் பயத்தையும் வன்முறையையும் தூண்டுவதற்காக வேண்டுமென்று பரப்பப்படுவதே போலி செய்திகள்”. இது கேரளாவின் கன்னூரில் உள்ள அமிர்த வித்யாலயம் பள்ளியில் மாணவர்களுக்காக போலி செய்திகள் தொடர்பாக கற்பிக்கப்படும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதி.

கன்னூர் மாவட்டத்தில் இதுபோன்று 150-க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் போலி செய்திகளுக்கு எதிராக மாணவர்களை தயார் படுத்தி வருகிறார்கள். மாவட்ட ஆட்சியர் மிர் முகமது அலியின் யோசனையில் விளைந்த இம்முயற்சிக்கு, “சத்யமவே ஜெயதே” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் சில மாதங்களாக குழந்தை கடத்தல்காரர்கள் என்று சந்தேகித்து பலர் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். மக்களிடம் இதுபோல் சந்தேகத்தை உருவாக்குவது வாட்ஸப்பில் பரவும் போலி செய்திகளே. சமீபத்தில் கூட கேரள வெள்ளம் தொடர்பாக பல போலி செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. போலி செய்திகளை தடுப்பதற்கு இதுவரை எந்தவிதமான முயற்சியும் யாரும் எடுக்காத நிலையில், கன்னூர் மாவட்டத்தின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

‘சத்யமவே ஜெயதே’ என்ற திட்டத்தில், போலி செய்திகள் என்றால் என்ன, அதனால் நேரும் ஆபத்துகள், அதனை தடுப்பதற்கான வழிகள் ஆகியவற்றை பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுக்கப்படுகிறது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் முகமது அலி கூறுகையில், “இந்த அடிப்படையான பயிற்சியில், குறிப்பிட்ட பண்புகளும், விழுமியங்களும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இணையத்தில் உள்ள தகவல்களை உண்மையானது எது பொய்யானது எது என்பதை வேறுபடுத்தி பார்ப்பதற்கும் கற்று தருகிறோம்” என்கிறார்.

‘நிபா’ நோய் மோசமாக பரவி வந்த சமயத்தில் இது சம்மந்தமாக போலி செய்தி பரப்பிய நபர் ஒருவரை கைது செய்ததின் மூலம் இவ்விஷயத்தில் கன்னூர் மாவட்டம் எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

“உங்களை சுற்றி போலி செய்தி பரப்புகிறவர்கள் இருக்கும்போது நீங்கள் நடுநிலை எடுக்க முடியாது. அப்படி நாம் நடுநிலையாக இருந்தால், நாமும் அவர்களோடு துணை போகிறோம் என்றே அர்த்தம்” என தெளிவு படுத்துகிறார் முகமது அலி.

வாட்ஸப்பில் வந்த வதந்தி செய்தியால் சென்ற ஆண்டு  ரூபெல்லா தடுப்பூசியை சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு போடாமல் எதிர்ப்பு தெரிவித்ததை நினைவு கூறும் ஆட்சியர், “இந்த தடுப்பூசியை குழந்தைகளுக்கு போட்டால் எதிர்காலத்தில் குழந்தை பேறு இல்லாமல் போகும் என்ற வதந்தி பரப்பப்பட்டது. ஆனால் உண்மையோ இந்த தடுப்பூசியை போடாவிட்டால் தான் குறை பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு”.
மேலும் முகமது அலி கூருகையில், “8 முதல் 12ம் வகுப்பை வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் இத்திட்டம் ஜூன் மாதம் 13ம் தேதி தொடங்கப்பட்டது. இதற்கென்று ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு ஆசிரியரை நியமித்துள்ளோம். அவர்களுக்கு ஒரு மாத சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது”. 

“இணையத்தில் அதிக நேரம் செலவழிக்கும் போது, நமக்கு ஆதரவான செய்திகள் அதிகம் தென்படும். உதாரணமாக, நிங்கள் விரும்பும் தலைவர்களின் அனைத்து நல்ல விஷயங்களையும் நம்ப தொடங்குவீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு பிடிக்காத தலைவர்களின் பொய்யான செய்திகள் அனைத்தையும் நம்புவீர்கள். இதை சிலர் எப்படியெல்லாம் தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை மாணவர்களுக்கு விளக்குகிறோம்”.

அடுத்ததாக, clickbait ( நமது கவனத்தை கவரும் வகையில் தலைப்பை கொண்டிருக்கும் இணைப்புகள்) குறித்தும் அதனால் ஏற்படும் கேடுகள் குறித்தும் மாணவர்களுக்கு  விளக்குகிறோம். எங்கள் பாடதிட்டங்களில் சில புதுமையான முறைகளை புகுத்தியுள்ளோம். உதாரணமாக, சில போலி செய்திகளை மாணவர்களுக்கு கொடுத்து, இந்த செய்தியை பெற்றதும் என்ன செய்வாய் என்று அவர்களிடம் கேட்கிறோம்”.

“நமக்கு வந்த தகவல் உண்மையானதா அல்லது போலியானதா என்பதை கண்டறிய மாணவர்களுக்கு சில அளவீடுகளை கற்று கொடுக்கிறோம். முதலில் தகவல்களின் ஆதாரத்தை சோதித்து பார்க்க கூறுகிறோம். தகவல்களை அனுப்பியவர்களிடமே இதற்கான ஆதாரத்தை கேளுங்கள் என மாணவர்களை ஊக்குவிக்கிறோம். யாரும் விபரங்கள் அளிக்காதபோது, மாணவர்களே உண்மையான தகவல்களை கண்டுபிடித்து அங்கு பதிவிடுமாறு அறிவுறுத்துகிறோம். இப்படியாவது போலி செய்தியை தடுக்க முடியுமா என்று முயற்சிக்கிறோம்”.

ஏதாவது புதியதாகவோ அல்லது உற்சாகமான செய்திகள் வரும்போதோ, மக்கள் அதன் உண்மைத்தன்மையை அறியாமல் இணையத்தில் பரப்பும் மனப்போக்கு குறித்து கவலைப்படுகிறார் முகமது அலி. 

எதிர்காலத்தில் ‘சத்யமவே ஜெயதே’ திட்டம் மேலும் பல பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்படும். பெற்றோர்களுக்கும் இத்திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் இதற்காக மலையாளத்தில் பாடத்திட்டம் தயாரித்து வருகிறோம் என அதிகாரிகள் கூறுகிறார்கள்.
போலி செய்தியை தடுக்கும் முறச்சியில் ஈடுபட்டுள்ள ஆட்சியர் முகமது அலியை நாம் மனதார பாராட்டுவோம்.

நன்றி   THE LOGICALINDIAN

Leave Comments

Comments (0)