‘பெருமித இந்தியனாக’ அல்லாமல் ‘பொறுப்புள்ள’ இந்தியனாக இருப்பது எப்படி என்பதை நமது குழந்தைகளுக்கு கற்று கொடுப்போம்

/files/detail1.png

‘பெருமித இந்தியனாக’ அல்லாமல் ‘பொறுப்புள்ள’ இந்தியனாக இருப்பது எப்படி என்பதை நமது குழந்தைகளுக்கு கற்று கொடுப்போம்

  • 1
  • 0

-தமிழில் V.கோபி  

நான் இந்தியன் என்பதில் எனக்கு பெருமிதமா? உண்மை என்னவென்றால் நானோ அல்லது மற்ற இந்தியர்களோ இங்கு பிறந்தார்கள் என்பதற்காக தனிப்பட்ட உரிமை கொண்டாட முடியாது. ஒரு நாட்டின் குடிமகன் என்பது அடிப்படையில் ஒரு விபத்தே. இருந்தபோதிலும் நாம் வளர்ந்த பிறகு “இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்” என அறிவுறுத்தப்படுகிறோம். அதுமட்டுமல்லாமல் இந்திய நாகரீகத்தை நினைத்தும், சிக்கலான கனிதத்தை உலகுக்கு அளித்தது குறித்து பெருமை அடைய வேண்டும் என்றும் உலகம் ‘பிளாஸ்டிக்’ என்ற ஒன்றை அறியும் முன்பே ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ செய்தவர்கள் நாம் என்பதையும் நினைத்து பார்க்க வேண்டும் என நமக்கு கற்பிக்கப்படுகிறது. மரபுவழியாக வந்தவற்றை நாம் வீணாக்கி வரும் நிலையில் நூற்றாண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் செய்ததை நினைத்து பெருமை கொள்ள நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

எனது மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றபோது, இந்தியாவை பற்றிய எனது எண்ணங்கள் எத்தகைய மாற்றம் கொள்ளும் என தெரியாத நிலையில் இருந்தேன். ஏனென்றால் தேச பெருமிதத்தை சிறு வயதிலிருந்து உள்வாங்கி வரும் எனக்கு 25 வயதில் அந்த எண்ணம் அதிகரித்திருந்தது. இந்தியாவிற்கு வெளியே வாழ்பவர்கள் மத்தியில் தேச பெருமிதம் அதிகமாக இருக்கும் என்பதையும் நான் தெரிந்தே வைத்திருந்தேன். சிலர் மற்ற நாட்டினரோடு பேசுகையில் இந்தியாவின் ‘சிறப்புகளை’ பற்றி எடுத்துரைப்பார்கள். யாராவது கேட்க ஆர்வமாக இருந்தால் என் நாட்டை பற்றி கூற நானும் விருப்பமாகவே இருந்தேன். ஆனாலும் எனது இந்திய மனதை அமெரிக்கா என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குழப்பமாகவே இருந்தது.
மற்ற நாட்டு மாணவர்களோடு உரையாடும்போது, தேச பெருமிதம் எப்படி நம் கண்களை மறைத்து குறைபாடுகளை கூறாமல் நமது சிறப்புகளை சற்று மிகைப்படுத்தி கூறுகிறோம் என்பதையும் நான் தெரிந்தே வைத்துள்ளேன். உதாரணமாக பல அமெரிகர்கள் இந்தியாவின் ஜாதி அமைப்பை பற்றி கேட்கும்போது, ஒன்று பெருமித இந்தியனாக நவீன இந்தியாவில் ஜாதி கிடையாது என கூற வேண்டும் அல்லது நேர்மையாக இந்தியாவில் ஜாதி எப்படி சமுகத்திலும் அரசியலிலும் வலுவாக உள்ளது என்பதையும் அதனை குறைக்க எடுத்த வெற்றிகரமான முயற்சிகள் பற்றியும் கூறவேண்டும். இரண்டாவதை கூறவே நான் விரும்புவேன். மற்ற நாட்டினரோடு காஷ்மீர் பற்றியோ, புத்தர் பற்றியோ அல்லது பழமையான இந்தியாவின் பாலுறவு விருப்பங்கள் பற்றியோ உரையாடும்போது எனது வாதத்தை தெளிவாகவும், நடுநிலையாகவும் கூறுவதோடு இது பற்றி மற்ற இந்தியர்களோடும் தெற்காசியர்களோடும் உரையாடும்படி அவர்களை கேட்டு கொள்வேன்.

வேறு வார்த்தையில் கூறினால், தேச பெருமித்ததிற்கு பதில் பொறுப்புணர்ச்சியை என்னிடம் வைத்து கொள்கிறேன். தற்செயலாக ஒரு இந்தியனாக பிறந்தாலும் எனக்கும் சில பொறுப்பு உள்ளது. குறிப்பாக இந்திய தன்மையை பிரதிபலிக்கும் எதையும் நான் பெற்று, அச்சிந்தனையை நேர்மையாக அடுத்தவர்களுக்கு கடத்துவதே எனது பெருமையாக அல்ல பொறுப்பாக கருதுகிறேன். மேலும் பொறுப்பு என்பது நமது கலாச்சாரம், வரலாறு பற்றிய எதிர்மறைகளையும் தற்போதைய குறைபாடுகளையும் ஏற்றுகொள்வதே.

இந்தியர்களான நாம் பசுவை தெய்வமாக வணங்குகிறோம் ஆகவே இந்தியாவில் மாட்டிறைச்சியை தடை கோருவதை தான் ஆதரிப்பதாக வெளிநாட்டில் வசிக்கும் எனது நன்பர் ஒருமுறை என்னிடம் கூறினார். மாட்டிறைச்சியை உண்பவர்களும் பசு புனிதமானது என்ற கூற்றை நம்பாத இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், பழங்குடிகள், இந்துகள் என பலர் இந்தியாவில் உள்ளனர் என்றும் ஏன் இவர்களையெல்லாம் இந்தியர்களாக யாரும் கருதுவதில்லை என அவரிடம் கேட்டேன். ஆனால் நான் கூறிய எதையும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. பெரும்பாலான இந்தியர்கள் தாங்கள் வளர்ந்த பகுதிகளிலிம் அருகிலும் பார்த்தவற்றையும் உணர்ந்தவற்றையும் வைத்துகொண்டு இந்தியாவை குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். ஒரு பொறுப்புள்ள இந்தியனாக ஒருவர் உணரும்போது நாட்டின் பல் கலாச்சார வேறுபாட்டை பொறுத்துகொண்டு அனைவரையும் ஒருங்கிணைப்பவராக இருப்பார்கள்.

ஒரே சமயத்தில் பெருமையும் பொறுபுள்ளவராகவும் இருக்கலாம் என சிலர் கூறுகின்றனர். நம் குழந்தைகளுக்கு கற்பிக்கும்போதோ அல்லது நாமே பழைய சிறப்புகளை மற்றும் இந்தியனாக பெருமை படும்போதோ, நாம் மிகை உணர்ச்சியை விதைக்கிறோம். கடந்த கால சிறப்புகளை நாம் அளவுக்கு அதிகமாக புகழும் பட்சத்தில் தற்போதைய தோல்விகளை மறந்துவிடுகிறோம். இதற்கு உதாரணமாக கோரக்பூர் மக்களவை உறுப்பினர் ஆதித்யனாத்தை கூறலாம். தனது தொகுதி நிலைமையையும் சுகாதரத்தையும் கருத்தில் கொள்ளாமல், பழங்கால இந்து பெருமைகளை பேசி அனைவரிடமும் அதை உயிர்ப்பிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

இந்த சுதந்திர தின நாளில், நமது குழந்தைகளுக்கு பொறுப்புள்ள இந்தியனாக இருப்பது எப்படி என்பதை கற்று கொடுப்போம். ‘பெருமித இந்தியனாக’ இல்லாத பழைய கால பெருமைகளை பேசி கனவு கான்பதை விடுத்து, சிறப்பான நிகழ்காலத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் கடுமையாக உழைக்கும்படி இளம் இந்தியர்களை நாம் தூண்ட வேண்டும்.

நன்றி THE WIRE

Leave Comments

Comments (0)