‘மகாத்மாக்களிடம்’ ஜாக்கிரதையாக இருங்கள்! பகுதி -2

/files/detail1.png

‘மகாத்மாக்களிடம்’ ஜாக்கிரதையாக இருங்கள்! பகுதி -2

  • 5
  • 0

-தமிழில்: கொற்றவை

இடஒதுக்கீடு தீண்டப்படாதோருக்கு நன்மை செய்வதைவிட, தீமையே செய்யும் என்பதே காந்தியின் கவலை!

எண்ணற்ற கடிதங்களை அவர்கள் மீது திணித்தாலும் காந்தியின் ஏற்பாட்டை அரசு ஏற்கவில்லை.வகுப்புத் தீர்ப்பில் கொடுத்த வாக்குகளை மாற்றுவது அவர்கள் கையில் இல்லை என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தனர்.

“அப்படியென்றால், நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறேன்.இந்துக்கள் மத்தியில் பிரிவினையை என்னால் சகித்துக்கொள்ள முடியாது” என்று சொன்ன காந்தி, செப்டம்பர் 2௦,1932 அன்று யெரவாடா சிறையில் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

என்னவிதமான நியாயம் இது? ஒரு அரசியல் பிரச்சினையை ஒருவர் அரசியல் வழியில் எதிர்கொள்ள வேண்டும்.இடஒதுக்கீடு தீண்டப்படாதோருக்கு தீங்கு செய்யும் என்று காந்தி நினைத்திருந்தால், அவர் அந்த எண்ணங்களை தீண்டப்படாதோர் மத்தியில் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும்.அப்படிச் செய்தும் அவர்கள் தங்களின் கோரிக்கைகளை நிராகரித்தால், பின்னர் முடிவை அவர்கள் கையில் விட்டிருக்க வேண்டும்.அந்தக் கோரிக்கைகள் அவர்களை உண்மையில் பாதித்தால் அவர்களே அதனை உணர்வார்கள், “நாங்கள் திரு.காந்தியின் அறிவுரையைக் கேட்கவில்லையே” என்று வருந்துவார்கள்.இவ்வாறாக, காந்தி தனது சிந்தனைகளை தீண்டப்படாதோர் மத்தியில் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும்.வட்ட மேஜை மாநாட்டில் தீண்டப்படாதவர்கள் தன் சொற்களுக்குக் கட்டுப்படுவார்கள் என்று பெரும் ஆணவத்துடன் சொன்னார் இல்லையா? அப்படி இருந்திருந்தாலும், இடஒதுக்கீடு விசயத்தில் அவர் தீண்டப்படாதவர்கள் மத்தியில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தியிருக்கலாம் இல்லையா? ஆனால் நியாயமான வழியைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அச்சுறுத்தலைக் (தீண்டப்படாதவர்கள் இடஒதுக்கீடு கேட்டால் நான் உண்பதை நிறுத்தி விடுவேன், இறக்கவும் துணிவேன்) கையிலெடுப்பது என்பது எந்த வகையில் நியாயம்?

எந்தவொரு காங்கிரஸ் தலைவரும் காந்தியை எதிர்க்கவில்லை, மாறாக ‘இது பொருளற்றது’ என்று சொல்லி இடஒதுக்கீடு கோரிக்கையைக் கைவிடுமாறு அம்பேத்கருக்கு அழுத்தம் கொடுத்தது.அம்பேத்கரே தீண்டப்படாதோரின் முக்கியப் பிரதிநிதி.அவர் ஒப்புக்கொண்டால் ஒழிய வகுப்புத் தீர்ப்பின் ஏற்பாடுகளை மாற்ற இயலாது.மொத்தப் பிரச்சினையும் அம்பேத்கர் தலையில் விழுந்தது. உணவு உண்ணாமல் அங்கு அமர்ந்து கொண்டார் காந்தி.நாட்கள் கழிந்தன.இந்த இக்கட்டான நிலையிலிருந்து தப்பிக்க, அம்பேத்கர் காந்தி சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும், அல்லது காந்தி தனது உண்ணா விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.இது நடக்கவில்லையென்றால், காந்தியின் மரணம் நிச்சயம்.

“சூழல் மிகவும் பதட்டமாக இருந்தது.காந்தியின் வெளிநாட்டு நண்பர்கள் அவரது உண்ணாவிரதத்தை ‘இரண்டாவது சிலுவையேற்றம்’, ‘புனிதமான உயிர்த்தியாகம்’ என்றெல்லாம் ஏற்றிப் போற்றி வருணித்துள்ளனர்.”

இது இப்படியே போய்க்கொண்டிருக்க, தீண்டப்படாதோரின் தலைவர்களான எம்.சி.ராஜா போன்றோர் காந்தியிடம் சென்று அவர்களுக்கு (தீண்டப்படாதோருக்கு) தனித்தொகுதி தேவை இல்லை என்றனர்.இந்த ராஜா காங்கிரசின் தீவிர எதிரியாக இருந்தார்.ஆனால் வட்டமேசை மாநாட்டிற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் ஸ்ரீனிவாசனை அழைத்து, அவரை அழைக்காததால் அவர் மனத்தாங்கலில் இருந்தார்.அதனால் காந்தியின் ஆதரவாளராகி, இடஒதுக்கீட்டை எதிர்த்தார்.அவர் சொன்னார்:

“ஏனென்றால், மாண்ட்போர்டு சீர்திருத்தத்தின் மூலம் நாங்கள் ஏற்கனவே அனுபவித்துவரும் விசேஷ சலுகை எண்ணற்ற ஊராட்சி அமைப்புகளிலும் மாகாண சட்டமன்றங்களிலும், மத்திய சட்டமன்றத்திலும் நாங்கள் பிரதிநிதித்துவம் பெறுவதற்கு வகை செய்துள்ளது என்பதை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்...இந்துக்களின் தார்மீக மனச்சான்று பெருமளவுக்கு விழிப்படைந்திருப்பதையும், எழுச்சி கொண்டிருப்பதையும் காண்கிறோம்.எனவே, இந்து சமூகத்தின் பிரதான அமைப்பிற்குள்ளேயே மாற்றம் ஏற்படுவதில்தான் எங்களது விமோசனமும், விடுதலையும், நற்கதியும் அமைந்திருப்பதைத் திட்டவட்டமாகப் பார்க்கிறோம்.”

அம்பேத்கரின் குழு மட்டுமே தனித் தேர்தல் தொகுதிகளை வலியுறுத்திக் கொண்டிருந்தது.

அம்பேத்கரோடு பேரம் பேசுவதில் மும்முரமாக இருந்தது காங்கிரஸ்.அந்தச் சூழலைப் பின்வருமாறு விளக்குகிறார் அம்பேத்கர்:

“சொல்லவும் தேவையில்லை, நான் அந்தக் கூட்டத்தில் ஒரு வில்லனைப் போல் கருதப்பட்டேன்.உண்மையில் காந்தியின் உண்ணாவிரதம் பற்றி எனக்கே ஒரு சொந்த பார்வை இருந்தது.அதனை ஒரு அரசியல் செப்படிவித்தை என்று வருணித்துள்ளேன்.அவருடைய பேச்சுகளில் எப்போதுமே பொய்மையின், நேர்மையின்மையின் ஒலியைத்தான் கேட்கிறேன்.காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டது இந்து சமூகம் உடைந்து போவதிலிருந்து, பிளவுபடுவதிலிருந்து அதனைக் காப்பாற்றுவதற்காகவே அன்றி, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விடுதலை தேடித்தருவதற்காக அல்ல என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது.என்ன விலை கொடுத்தாலும், இன்னும் சொல்லப்போனால் தாழ்த்தப்பட்ட மக்களை அரசியல் ரீதியில் அடிமைப்படுத்த நேரிடினும் இதைச் செய்ய அவர் தயாராக இருந்தார்.”

“இத்தகைய மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு, இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற நிலைக்கு என்னைப் போன்று வேறு எவருமே ஆளாகியிருக்க மாட்டார்கள் என்று கூறினால், அது மிகையல்ல.அது பெரிதும் திகைப்பூட்டும், திணறவைக்கும், குழப்பமூட்டும் நிலைமை.என் முன்னால் இரண்டு வெவ்வேறான பணிகள், கடமை சார்ந்த பிரச்சினைகள் இருந்தன.மனிதத் தன்மையுடன், மனிதப் பண்புடன் மரணத்திலிருந்து காந்தியைக் காப்பாற்றும் கடமை ஒருபுறம், பிரதமர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க முன்வந்துள்ள அரசியல் உரிமைகளை அவர்களுக்குக் காப்பாற்றித் தரும் கடமை மற்றொருபுறம்.”

“திரு.காந்தியின் உண்ணாவிரதத்துக்கு எத்தகைய தார்மீக அடிப்படையும் இருப்பதாக அவரது சொந்த ஆதரவாளர் தவிர வேறு எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.அவர் மரணத்தின் கோரப்பிடியிலிருந்து மீண்டார் என்றால், அவர் மறுபிறவியெடுத்தார் என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்பால் காட்டிய நல்லெண்ணமும், பெருந்தன்மையும், தாராள மனப்பான்மையுமே முழுக்க முழுக்க காரணம் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.”

வெளியில் அது ‘நன்மதிப்பு’, ‘பெருந்தன்மை’ என்று தெரிந்தாலும், உண்மையான காரணம் என்னவெனில், தீண்டப்படாதோர் இடையே போதுமான ஒற்றுமையும், போராடும் திறனும் இருக்கவில்லை.தீண்டப்படாதோர், தம் நலனுக்கு எதிராக இருப்போரிடம் கருணை காட்டுவதென்பது தமக்குத்தாமே கருணை காட்டவில்லை என்பதையே உணர்த்துகிறது.தீண்டப்படாதோரைக் காப்பது ‘திரு.காந்தியின்’ பொறுப்பல்ல.காந்தி அவருடைய அரசியல் தந்திரங்களுக்கே பொறுப்பாவார்.இல்லை மற்ற காங்கிரஸ் தலைவர்கள் பொறுப்பாவர்.அவர்கள் காந்தியை எதிர்த்து நின்று,அவருடைய உண்ணாவிரதத்தை திரும்பப்பெற செய்து அவரை காத்திருக்க வேண்டும்.

சொல்லப்போனால், காந்தி உண்ணாவிரதத்தைத் தொடங்கும் முன்னரே அவர்கள் அவரோடு கடுமையாக வாதிட்டிருக்க வேண்டும்.இது எதுவும் நடக்காதபோது நடந்தவைகளுக்கு தீண்டப்படாதோர் பொறுப்பாக முடியுமா? ‘தீண்டப்படாதோர் காந்தியிடம் பெருந்தன்மையும், நன் மதிப்பையும் வெளிப்படுத்தினார்கள் என்று சொல்வதற்குப் பதில், ‘தீண்டத்தகாதோருக்கு நிலைமையை எதிர்த்து நிற்கும் பலம் இருக்கவில்லை’ என்ற உண்மையான சுய-விமர்சனப் பார்வையை அம்பேத்கர் வைத்திருக்க வேண்டும்’.

மொத்தத்தில், காந்தியோடு அம்பேத்கர் மிகுந்த வேதனையோடும், அதிருப்தியோடுமே ‘சமரசம்’ செய்து கொண்டார்.இதுவே உண்மை.

அந்த சமரசம் இதுவே: தீண்டப்படாதவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி இருக்கும்.தீண்டப்படாதவர்கள் அவற்றில் போட்டியிட்டாலும், வாக்காளர்களில் இந்துக்களும் அடங்குவர்.இது ஒரு ‘பொது தேர்தல் முறை’.தீண்டப்படாத வேட்பாளர்கள் இந்த முறையிலும் சட்டசபைக்குள் நுழையலாம்.ஆனால், சாரத்தில், தீண்டப்படாத வேட்பாளரின் தேர்வுக்கும், முற்றிலும் தீண்டப்படாதோர் வாக்காளர்களுக்கும் மற்றும் தீண்டத்தகாதோர், இந்து வாக்காளர்கள் உள்ளிட்ட இரண்டு பேர் அடங்கிய வாக்காளர் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

தீண்டப்படாதோர் மட்டும் அவர்களில் இருந்து வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முறையில், அவர்களின் நலன் காப்பார் என்னும் நம்பிக்கைக்கு உரியவரையே அவர்கள் தேர்ந்தெடுப்பர்; அவ்வகையில், அந்த வேட்பாளரும், தீண்டப்படாதோரின் வாக்கை மட்டுமே நம்பியிருப்பார், அதனால் அவர்களின் நலனில் அவரும் கவனம் செலுத்துவார்.ஆனால் பொதுத் தேர்தல் முறையில், இந்து வாக்காளர்கள் பெரும்பான்மையினர்.அதனால் தீண்டப்படாதோர் இந்துக்களின் வாக்கைச் சார்ந்திருக்க வேண்டும், அதனால் வேட்பாளர் இந்துக்களின் நலனையே சார்ந்திருக்க நேரும்.

உதாரணத்திற்கு, ஓர் ஒதுக்கப்பட்ட தொகுதியில், இரண்டு தீண்டப்படாத வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள், தீண்டப்படாதோர் மட்டுமே வாக்காளர்கள் என்று வைத்துக் கொள்வோம், அவர்களில் எவர் வெல்கிறாரோ அவர் தீண்டப்படாதோரின் நலனில் அக்கறை செலுத்துவார்.ஆனால், அதில் இந்து வேட்பாளர்களும் அடக்கம் என்றால், இந்துக்களுக்கு அடிபணிபவருக்கே அதிக வாக்குக் கிடைக்கும்.இவ்வாறாக, பொதுத் தேர்தல் முறை நன்மையைவிடத் தீமையே செய்கிறது, அது இந்துக்களுக்கே நன்மை அளிக்கிறது.

தனித்தொகுதி முறையை முற்றிலும் எதிர்ப்பதே காந்தி உண்ணாவிரதம் தொடங்கியதன் உண்மையான பின்னணி.ஆனால், அதற்குத் தீண்டப்படாதோரின் பிரதிநிதிகள் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால், ‘தனித் தொகுதி’ முறைக்கு அவர் இணங்க வேண்டியிருந்தது.தன்னுடைய வாழ்வை காத்துக் கொள்ளவாவது அவருக்கு அவசியம். இருந்தும் தீண்டப்படாதோருக்கு எந்த பயனும் அளிக்காத வகையில் அவர் அதை மாற்ற முடிந்தது. ‘தனித் தொகுதி’ முறை மூலம் இந்துக்களை பிளவுபடுத்தியதில், அவர் மனம் வெடித்துவிடவில்லை.நல்ல நிலையிலேயே இருந்தது.

(இந்த வாக்காளர் தொகுதி பற்றிய விவரங்கள் குறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளன. முழுவிவரங்களுக்கு அம்பேத்கரின் தொகுதிகளைப் பார்க்கவும்).

இந்த ஒதுக்கீடு தொடர்பான சமரசத்தில் அம்பேத்கர் வகுப்புத் தீர்ப்பில் சொல்லியுள்ளபடி கூடுதல் தொகுதிகள் கேட்டார்.அதற்கு காந்தி இணங்க வேண்டியிருந்தது.

கூடுதல் இடம்கொடுப்பதில் இந்துக்களுக்கு உடன்பாடு இல்லையென்றாலும், தீண்டப்படாதோருக்கு பொதுத் தேர்தலில் உடன்பாடு இல்லையென்றாலும், இருதரப்பும் ஒரு உடன்பாட்டிற்கு வந்தன.அது பூனாவில் நிகழ்ந்ததால்.அதற்குப் பூனா ஒப்பந்தம் என்று பெயர்.அது செப்டம்பர் 24 அன்று, அதாவது காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய ஐந்தாவது நாளில் நிகழ்ந்தது.

எப்படியோ, நான்கு நாட்கள் உணவின்றி மகாத்மா சமாளித்தார், தீண்டப்படாதவர்கள் பெற வேண்டிய அனுகூலத்தை முடியும்வரை குறைத்தார், உண்ணாவிரதம் முடித்து, இந்துக்களுக்கு இலாபத்தையும், தீண்டப்படாதோருக்கு இழப்பையும் கொடுத்த மகிழ்ச்சியோடு உணவு உண்ணத் தொடங்கினார்.

‘காந்தியும் அவரது உண்ணாவிரதமும்’ என்ற அத்தியாயத்தில் அம்பேத்கர் பின்வருமாறு முடிக்கிறார்:

“காந்தியிடம் எச்சரிக்கையாக இருங்கள்”.

தீண்டப்படாதோர் ‘இடஒதுக்கீடு’ கேட்டதால் மட்டுமே காங்கிரஸ் கட்சி சமூகச் சீர்திருத்தம் குறித்து பெரும் கூச்சலிட்டது.

கோவில் நுழைவு அத்தகையதொரு சீர்திருத்தமே.

குருவாயூர் கோவில் கதை: (இந்தத் தகவல்களை ஆங்கிலத் தொகுப்பில் பார்க்க).

மலபார் பொன்னானி தாலுக்காவில் உள்ள குருவாயூரில் ஒரு கிருஷ்ணர் கோவில் உள்ளது.கோழிக்கோடு ஜமோரின் அதற்கு தர்மகர்த்தா.காந்தியின் செல்வாக்கிற்கு உள்ளான கேளப்பன் என்பவர் அந்த கோவிலுக்குள் நுழையும் விருப்பத்தோடு தர்மகர்த்தாவிடம் அனுமதி கோரினார்.ஆனால் அவர் அதற்கு அனுமதி மறுத்ததோடு, சட்டத்தின் கீழ் தனக்கு அனுமதி தர உரிமை இல்லை என்றார்.உண்மையில் அவருக்கு உரிமை இல்லைதான்.இருந்தாலும், தர்மகர்த்தா அனுமதி பெற்றுத் தர முயற்சித்திருக்கலாம்.அவருக்கு விருப்பம் இல்லாததால்தான், சட்டத்தைக் காரணம் காட்டி அதை மறுத்திருக்கிறார்.
ஆனால் கேளப்பன் விசயத்தை அப்படியே விடாமல்,செப்டம்பர் 20,1932 அன்று கடும் வெயிலில், வெட்ட வெயிலில் கோவிலுக்கு முன்னர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார்.யெரவாடா சிறையில் காந்தி உண்ணாவிரதம் தொடங்கிய அதே நாள்.ஆனால் காந்தியின் உண்ணாவிரதம் 24ஆம் தேதியே முடிவடைந்துவிட்டது, ஆனால் கேளப்பனின் உண்ணாவிரதம் 10 நாட்கள் வரை தொடர்ந்தது.தர்மகர்த்தாவுக்கு இது பெரும் தலைவலியாகிப்போனதால், தற்காலிகமாக கேளப்பன் உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெறும்படி செய்ய காந்தியின் உதவியை நாடினார்.உடனே காந்தியும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறும், தர்மகர்த்தாவுக்கு கால அவகாசம் கொடுக்குமாறும் கேளப்பனுக்குத் தகவல் அனுப்பினார்.காந்தியின் அறிவுரைக்கு மதிப்புக் கொடுத்து கேளப்பனும் தன்னுடைய உண்ணாவிரதத்தைக் கைவிட்டு தர்மகர்த்தாவுக்கு மூன்று மாதம் அவகாசம் கொடுத்தார்.

மூன்று மாதம் முழுதாகக் கடந்தது.தர்மகர்த்தா வாயே திறக்கவில்லை. இதனால் காந்தியிடம் புகார் செய்தார் கேளப்பன்.உடனே காந்தி, வரும் ஜனவரி 1 ஆம் தேதிக்குள் கேளப்பனை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லையென்றால் தானும் கோவிலின் முன் அவரோடு இணைந்து உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தந்தி அடித்தார்.அப்போதும் தர்மகர்த்தா அசைந்து கொடுக்கவில்லை.”அனுமதி கொடுக்க எனக்கு உரிமை இல்லை” என்பதைத் தவிர அவர் வேறு எதுவும் சொல்லவில்லை.உடனே காந்தி உண்ணாவிரதம் தொடங்கி இருக்கவேண்டும் இல்லையா? மாறாக, அந்த தாலுக்காவில் வசிக்கும் இந்துக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்றொரு புதிய வாதத்தை முன்வைத்தார் காந்தி. பெரும்பான்மை இந்துக்கள் தீண்டப்படாதோர் கோவில் நுழைவை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நான் உண்ணாவிரதம் இருக்க மாட்டேன்.பெரும்பான்மை இந்துக்கள்

ஒப்புக் கொண்டும் தர்மகர்த்தா ஒப்புக் கொள்ளவில்லை என்றால் நான் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்’.
பிறகு, பொது வாக்கெடுப்பு நடந்தது.எவரெல்லாம் தினம் கோவிலுக்கு வருவார்களோ அவர்கள் மட்டுமே வாக்காளர்கள் என்று தீர்மானிக்கப்பட்டது.கோவில் நுழைவு மறுக்கப்பட்டவர்கள், கோவிலுக்கு வராதவர்கள் அதில் அடக்கம் இல்லை. அவர்களில், கோவில் நுழையத் தகுதி பெற்றோரில் 73% பேர் வாக்கெடுப்பில் பங்கெடுத்தனர்,அதில் 56% பேர் தீண்டப்படாதோர் நுழைவை ஆதரித்தும்,9% பேர் எதிர்த்தும்,8% பேர் நடுநிலையிலும்,27% பேர் ஓட்டுப் போடாமலும் இருந்தனர். பெரும்பான்மை இந்துக்கள் தீண்டத்தகாதோர் கோவில் நுழைவை ஏற்றுக்கொண்டனர் என்பதே இதன் பொருள் இப்போதாவது காந்தி உண்ணாவிரதம் தொடங்கி இருக்க வேண்டும்.இப்போது மற்றொரு புதிய வாதத்தை வைத்தார் ‘மகாத்மா’: சென்னை சட்டசபையில், கோவில் நுழைவு குறித்து காங்கிரஸ் கட்சி ஒரு மசோதா கொண்டுவரவிருக்கிறது.அதன் வெற்றி நமக்கு ஜனவரி 15 தேதிக்குப் பின்னரே தெரியும்.அதனால், நான் ஜனவரி 2இல் தொடங்குவதாகச் சொல்லியிருந்த உண்ணாவிரதத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கிறேன்.(அவரது மேற்கோளுக்கு அம்பேத்கர் தொகுதி 10,பக். 117 ஐ பார்க்கவும்).

தர்மகர்த்தாக்களுக்கு கோவில் நுழைவை அனுமதிக்கும் உரிமை இல்லாததனால், அதை அவர்களுக்கு அளிப்பதற்கான முயற்சியே இந்த மசோதாவின் சாரம்.ஆனால், இந்த மசோதாவின் படியும் கோவில் பகுதியில் பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும்.பெரும்பான்மை இந்துக்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தர்மகர்த்தா அனுமதிக்க முடியும்.பெரும்பான்மை இந்துக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே அனுமதி! சந்தேகமின்றி, அந்த மசோதா இந்துக்களின் கருணையை வேண்டி நின்றது!

உண்ணாவிரத வாக்குறுதி வேறு தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருந்தது, சபையில் இந்த மசோதா நிறைவேற்றப் படாது, தோற்கடிக்கப்படும் என்று நினைத்தார் காந்தி.ஆனால், மசோதா நிறைவேற்றப்பட்டது.

இப்போது காந்திக்கு வேறுவழி இல்லை இல்லையா? உண்ணாவிரதம் தொடங்கி இருக்க வேண்டும்.ஆனால், காந்தி அதுபற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை! யெரவாடா சிறையில்-நான்கு நாட்கள் உண்ணாமல் இருந்தபோது-அவர் கண்ட கனவு புத்தொளி அளித்ததாம். ‘உண்ணாவிரதம்’ குறித்து அறிவித்துக்கொண்டே இருக்க வேண்டும்.தொடங்கிவிட்டால் உயிருக்கு ஆபத்து என்னும் ‘அறிவொளி’யாக இருக்கலாம் அது.அம்பேத்கரும் முன்னர் நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார், எவருக்குத் தெரியும் கோழிகோடு ஜமோரின் அதற்கு அடிபணிவாரா என்று? முன்வைக்கப்பட்ட சட்டம் அவருக்கு ஆதரவாக இருந்தது. ஞானசீலர் காந்தி இதையெல்லாம் முன்னரே யூகித்திருந்ததால், உண்ணாவிரதம் பற்றி பேசுவதையே தவிர்த்தார். கேளப்பனும் காந்தியின் நடத்தையால் சோர்ந்துபோய், சமூகச் சீர்திருத்த மூட்டையைச் சுருட்டிக் கொண்டு கிளம்பினார்.

குருவாயூர் கோவில் நுழைவுக்காக உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும் முன்னர் காந்தி என்ன சொன்னார் என்று பாருங்கள்:

“ஒரு நாளில் குறிப்பிட்டசில மணி நேரங்களில் குருவாயூர் கோவிலை ஹரிஜனங்களுக்கும், அவர்களது வருகையை ஆட்சேபிக்காத இந்துக்களுக்கும் திறந்துவிடலாம்; வேறு சில மணி நேரங்களை ஹரிஜனங்கள் பிரவேசத்தை விரும்பாதவர்களுக்கென ஒதுக்கித் தரலாம்’

குருவாயூர் கோவிலில் வழக்கத்தில் இருந்த ஒரு சடங்கைப் பின்வருமாறு விளக்குகிறார் காந்தி.

“...குருவாயூரில் கிருத்திகை ஏகாதசி திருவிழா சந்தர்ப்பத்தில் இந்துக்களுடன் சேர்ந்து ஹரிஜனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதையும், அதன் பின்னர் கோவில் அல்லது விக்கிரகம் சுத்திகரிக்கப்படுவதையும் பார்க்கும்போது இந்த யோசனையை ஏற்பதில் எத்தகைய சிரமமும் இருக்காது...”

“ஹரிஜனங்கள் ஆலயப்பிரவேசம் செய்த பின்னர் நாள்தோறும் கோவிலைத் தூய்மைப்படுத்த வேண்டுமா என்று கேட்கப்பட்டபோது அவர் பதிலளித்ததாவது “என்னைப் பொறுத்தவரை தூய்மைப்படுத்தும் சடங்கையே எதிர்க்கிறேன்.ஆனால் தூய்மைப்படுத்துவது ஹரிஜனங்கள்களின் ஆலயப் பிரவேசத்தை எதிர்ப்பவர்களின் மனச் சான்றை திருப்திபடுத்துமானால் இந்த விசயத்தில் தனிப்பட்ட முறையில் நான் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கமாட்டேன்”

காந்தி, தீண்டப்படாதோருக்கு மேலும் சொல்கிறார்: சில புனித நாட்களில் உங்களைத்தான் இந்துக்கள் கோவிலில் அனுமதிக்கிறார்கள் இல்லையா? அதனால், மற்ற நாட்களில் அவர்கள் தெரிவிக்கும் எதிர்ப்பை நீங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சினையை மொத்தத்தில் எப்படி பார்க்க வேண்டும் என்று அறிவுரை கூறுகிறார் காந்தி:

“ஹரிஜனங்களின் மனநிலை இவ்விதம் இருக்க வேண்டும்: எனது ஆலயப் பிரவேசத்தை ஆட்சேபிக்கும் எவரேனும் இருப்பாரேயானால் அவர் (அந்த ஆட்சேபனையாளர்) எனக்குள்ள உரிமையைப் பறிக்காதவரை அவரது ஆட்சேபத்துக்கு மதிப்பு கொடுக்கவே செய்வேன்; அதே சமயம் எனது ஆலயப்பிரவேசத்தை ஆட்சேபிக்காதவர்களுடன் சேர்ந்து வழிபாடு செய்வதற்கு எனக்குள்ள நியாயமான உரிமை அனுமதிக்கப்படும் வரை நான் திருப்தியடையவே செய்வேன்”

இந்துக்களுக்கு கோவிலுக்குள் நுழைய எல்லா நாட்களிலும் அனுமதி இருக்க, தீண்டத்தகாதோருக்கு ஒன்றிரண்டு நாட்கள் மட்டும் அனுமதி, அதுவும் கோவில் தூய்மைப்படுத்தப்படும் என்னும் நிபந்தனையுடன்.இது போன்ற உரிமைகளைச் சுட்டிக்காட்டி, எல்லாருக்கும் சம உரிமை என்று தீண்டப்படாதோரிடம் சொல்கிறார் காந்தி.’உங்களுக்குத்தான் சில நாட்கள் உரிமை இருக்கிறதே.இல்லையா? இந்துக்களுக்கும் உங்களை சில நாட்கள் அனுமதிக்கும் உரிமை இல்லாமல் போகட்டும்’.இதுதான் காந்தியின் வாதம்.தீண்டப்படாதோரும் இந்துக்கள் சில நாட்கள் கோவிலில் நுழைவதை தடுக்கும் உரிமை பெற்றிருந்தால், அது சம உரிமை எனலாம்.அதைவிடுத்து அவர்களுக்கு ஓரிரு நாட்கள் அனுமதி கிடைப்பதை அவர்கள் சமஉரிமை என்று கருத வேண்டுமா? அப்படி என்றால் எதற்கு இந்த கோவில் நுழைவு இயக்கம்,உண்ணாவிரதம், இத்யாதி, இத்யாதி?

(அடுத்த பகுதியில் தொடரும்...)

நன்றி: சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு

தெலுங்கு மூலம்: ரங்கநாயகம்மா

பதிப்பகம்: SWEET HOME PUBLICATIONS

Leave Comments

Comments (0)