‘மகாத்மாக்களிடம்’ ஜாக்கிரதையாக இருங்கள்! பகுதி -1

/files/detail1.png

‘மகாத்மாக்களிடம்’ ஜாக்கிரதையாக இருங்கள்! பகுதி -1

  • 6
  • 0

-தமிழில்: கொற்றவை

“நான் தீண்டாமைக்கு எதிரானவன்” என்று அறிவித்தார் காந்தி. ஆனால் உண்மையில் அவர் அப்படியில்லை என்பதைச் சம்பவங்கள் மெய்ப்பிக்கின்றன.

நாம் அம்பேத்கரையோ அல்லது அவரது தீண்டாமை இயக்கத்தையோ புரிந்துகொள்ள வேண்டுமெனில், முதலில் நாம் காந்தியைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு பேருக்கும் தொடர்புடைய சம்பவங்கள் பல உண்டு.

1885 இல் பாம்பாயில் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது.அதன் 1917 ஆம் ஆண்டுக் கல்கத்தா மாநாட்டில், தீண்டாமைக்கு எதிராக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதன் பின்னர் மூச்சுப்பேச்சில்லாமல் அது கைவிடப்பட்டது.

192௦ இல் காங்கிரஸ் கட்சி காந்தியின் தலைமையின் கீழ் வந்தது. தலைமை என்பதால் அவர் தலைவரோ அல்லது கட்சியின் செயலரோ இல்லை.அவர் அதிகாரபூர்வமற்ற முறையில் ஒரு தலைவர், ஆசிரியர், இறைத்தூதர்.

1922 ஃபிப்ரவரி பர்தோலி மாநாட்டில்தான் காங்கிரஸ் கட்சி தீண்டாமைப் பிரச்சினையில் கவனம் செலுத்தத் தொடங்கியது.அந்த மாநாட்டில், தீண்டப்படாதவர்களுக்காகத் தன்னுடைய சொந்த பணத்திலிருந்து காங்கிரஸ் கட்சி தனிக் கிணறுகள், தனிப் பள்ளிக்கூடங்கள் கட்டித்தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.அதில், தீண்டப்படாதவர்கள் அரசாங்கப் பள்ளிக்கூடங்கள், பொதுக் கிணறுகளைப் பயன்படுத்த வகை செய்ய வேண்டும் என்னும் பிரச்சாரமும் ஒரு பகுதி.
இந்துக்களுக்குச் சமமாகப் பொது வளங்களைத் தீண்டத்தகாதோரும் பயன்படுத்தும் உரிமையே அவர்களுக்குத் தேவை. ’தண்ணீர்’ எடுப்பதோ அல்லது ‘கல்வி’ பெறுவதோ மட்டுமன்று.

இதனால், பொது வளங்களை அவர்கள் பயன்படுத்த வகை செய்யும் பிரச்சாரமே தீண்டாமைக்கெதிரான போராட்டத்தில் முக்கியமானது.ஆனால், உண்மையில் என்ன செய்ய வேண்டுமோ அதைவிடுத்து, காங்கிரஸ் கட்சி தனியாக இங்கும் அங்கும் தீண்டப்படாதோருக்கு ஆறுதல் சொல்லும் முயற்சிகளை மேற்கொண்டது.

தீண்டப்படாதவர்களுக்குத் தனி ஏற்பாடுகள், முரணான விளைவுகளையே ஏற்படுத்தின: “காங்கிரஸார்தான் தனிக்கிணறுகள் ஏற்பாடு செய்கின்றனரே”! “நீங்களும் அது போன்ற ஏற்பாடுகளைக் கேளுங்கள்” என்ற தோடு, பொது கிணறுக்கு அவர்கள் வரக்கூடாது என்றும் சொல்லி அதுவரை தீண்டாமையைப் பின்பற்றாத இந்துக்கள் கூட அதைப் பின்பற்றினர் என்று காங்கிரஸ் கட்சிக்குப் புகார் வரத்தொடங்கியது. இருந்தும் காந்தியோ அல்லது மற்ற தலைவர்களோ இது போன்ற புகார்களிலிருந்து ஏதும் கற்றுக் கொள்ளவில்லை.

ஷ்ரத்தானந்த சுவாமி, ஒரு ஆரிய சமாஜி, காங்கிரசு கட்சி தொடங்கிய தீண்டாமை எதிர்ப்புக் குழுவில் அவர் ஒரு உறுப்பினர். அவர் தீண்டாமைக்கு கடுமையான எதிரி. தீண்டாமைக்கெதிரான தனது பிரச்சாரத்திற்குப் பணம் ஒதுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ’திலக் சுவராஜ் நிதி’ என்று பெருமளவில் வசூல் செய்து பல நிகழ்ச்சிகளுக்கு ஆர்பாட்டத்துடன் செலவு செய்துவந்த காங்கிரஸ் கட்சி, இதற்குப் பணம் கொடுக்க மறுத்துவிட்டது.இந்த மனப்பான்மை கண்டு வெறுப்புற்ற, ஷ்ரத்தானந்தா தனது பதவியை இராஜினாமா செய்தார்.ஷ்ரத்தானந்தாவின் புகாரை காந்தி கவனிக்கவே இல்லை, அவருடன் பேசி என்ன பிரச்சினை என்று கூட அவர் கேட்கவில்லை.
படிப்படியாக, காங்கிரஸ் கட்சி தீண்டாமைக்கெதிரான தனது போராட்டத்தை ‘இந்து மஹாசபா’ என்னும் தனது கலாச்சார அமைப்பின் கையில் ஒப்படைத்தது.இது இந்துக்களின் ஒரு ‘மூர்க்கமான’ அமைப்பு. இந்து மதத்தை நீடித்திருக்கச் செய்வதே அவர்களது இலட்சியம்.அவர்கள் கனவிலும் ‘சமூக சீர்திருத்தம் என்பதற்கு இடமில்லை.இப்படித்தான் காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சினையை ஒரு வகுப்புவாத அமைப்பின் கையில் கொடுத்து தனது பொறுப்பைத் தட்டிக் கழித்தது.

தீண்டாமை என்னும் தீமையை ஒழிக்காமல் இந்தியா சுதந்திரம் பெற இயலாது என்று உரத்த குரலில் அறிவித்து, பிரச்சாரங்களை முன்னெடுத்த காங்கிரஸ் விரைவிலேயே அதனை இந்துமகாசபாவிடம் ஒப்புக் கொடுத்துவிட்டது.அம்பேத்கர் அது குறித்துச் சொல்கிறார்.

“இத்தனை சிறிய லேசான ஒரு செயல்திட்டத்தைக்கூட காங்கிரசால் நடத்த முடியவில்லை, வெட்கமே இல்லாமல் அதை கைவிட்டது(தொகுதி 16 இல் காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாதோருக்காகச் செய்தது என்ன? என்னும் புத்தகத்தில் இது தொடர்பான விவரங்களைக் காணலாம்.தொகுதி 1௦ இல் அத்தியாயம் 24,25 இல் “திருவாளர் காந்தியின் சமுதாய நோக்கு” மற்றும் “காந்தியும் அவரது உண்ணாவிரதமும்” என்னும் தலைப்புகளின் கீழ் நிறைய செய்திகள் உள்ளன).

1.இட ஒதுக்கீட்டுக்கான தொடக்கக்கட்ட முயற்சி 

11 நவம்பர் 1917இல் சர். நாராயண் சந்தவார்கர் தலைமையில் ‘தாழ்த்தப்பட்ட வகுப்புகள்’ ஒரு கூட்டம் நடத்தின (தொகுதி 16).அந்த காலகட்டத்தில் அம்பேத்கர் அரசியலில் நுழையவில்லை.

பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குத் தன் விசுவாசத்தை அறிவித்த அவர்கள், ஒரு வேண்டுகோள் வைத்தனர்.தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தீண்டாமையை எதிர்கொண்டு, கொடுமையான வாழ்வு வாழ்ந்துவந்ததால், நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய சொந்தப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுக்கே அளிக்குமாறு கோரியது.

இவ்வாறாக அம்பேத்கருக்கும் முன்னரே தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கோரும் போராட்டம் 193௦ இல் லண்டனில் நடந்த வட்ட மேசை மாநாட்டில் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்தது.

இந்தியாவில் சுய-ஆட்சி குறித்து விவாதிக்க பிரிட்டிஷ் அரசாங்கம் வட்ட மேசை மாநாட்டைக் கூட்டியிருந்தது. சில இந்தியப் பிரதிநிதிகள் லண்டனுக்கு அழைக்கப்பட்டனர்.அம்பேத்கர் மற்றும் ஆர்.ஸ்ரீனிவாசன் இருவரும் தலித்துகளின் பிரதிநிதிகளாக மாநாட்டில் கலந்து கொண்டனர்.காங்கிரஸ் கட்சி மாநாட்டைப் புறக்கணித்திருந்ததால், அவர்கள் சார்பாக யாரும் கலந்து கொள்ளவில்லை.

அந்த மாநாட்டில், தலித்துகளின் பிரதிநிதிகள் தலித்துகளின் உரிமைகளை வலியுறுத்தி ஓர் ஆவணத்தைச் சமர்பித்தனர்.அது இந்தியாவில் சுய-ஆட்சி தொடங்கும் முன்னரே மற்றவர்களுக்கு நிகராக இந்தியாவில் தீண்டப்படாதோருக்குச் சம உரிமை கோரியது.தீண்டப்படாதோருக்கு தனித் தொகுதிகள் (‘தனி வாக்காளர் தொகுதி’) என்பதே ஆவணத்தின் முக்கியப் புள்ளி.

தீண்டப்படாதோரின் உரிமைகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் உறுதியளித்தது.சிறுபான்மை மதச் சமூகங்களுக்கு ‘வகுப்புவாரி உரிமை’ (Communal award) என்னும் உறுதி அளித்தது.இதனைப் பொறுத்தவரை, தீண்டப்படாதோருக்கு இரட்டை வாக்குரிமை உண்டு.தீண்டப்படாதோரை தேர்ந்தெடுக்க ஒரு வாக்கையும், பொதுப் பிரதிநிதியை தேர்வு செய்ய ஒரு வாக்கையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஒரு தொகுதியில் தீண்டப்படாத பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் ஓட்டுரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு.இந்த தேர்தலில் இந்துக்களுக்குப் பங்கில்லை.தீண்டப்படாத வேட்பாளர் தீண்டப்படாதோரின் வாக்கையே சார்ந்திருப்பார், இந்துக்களுடையதை அல்ல.வெற்றி பெற்ற வேட்பாளர், தீண்டப்படாதோரின் பிரதிநிதியாக சட்ட மேலவைக்குள் நுழைவார்.அந்த தொகுதியில் பொதுத் தேர்தல் நடந்தால், எந்த சாதியினர் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டி இடலாம்.ஓட்டளிப்பவரும் எந்த சாதியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.ஒரு தீண்டப்படாதவர் இந்தப் ‘பொது’ தேர்தலில் பங்கெடுத்தால் அவர் ஒரு இந்து வேட்பாளரையோ அல்லது, தீண்டப்படாத வேட்பாளரையோ தேர்ந்தெடுக்கலாம்.இதன் பொருள் அவர் தனது இரண்டாம் ஓட்டை ‘பொது’ தேர்தலுக்கு பயன் படுத்தலாம் என்பதாகும். இவ்வாறாக வகுப்புவாரி உரிமை தீண்டப்படாதோருக்கு சிறப்பு உரிமைகளை உறுதி செய்தது.இது அவர்களை மகிழ்விக்கக்கூடியது.

பின்னர், 1913 இல், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும், காங்கிரசுக்கும் இடையே ஒரு சமரசப் புரிதல் மேற்கொள்ளப்பட்டதால் காந்தி, இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.
ஒவ்வொரு முறை பேசும்போதும் காந்தி தன்னைப் போற்றி மற்ற பிரதிநிதிகளை அவமானப்படுத்தினார்.அவர்களை சக்கர-நாற்காலியில் உழலும் அரசியல்வாதிகள், ஆதரவாளர்கள் இல்லாதோர், நேர்மையற்றோர் என்று சித்தரித்தார். இஸ்லாமியர் பிரதிநிதிகளைப் பார்த்து, அவர்களைக் காட்டிலும் இஸ்லாமிய மக்களைப் புரிந்து கொண்டவர் தாமே என்றார்.தாழ்த்தப்பட்ட வகுப்பு பிரதிநிதிகளை அம்மக்களின் பிரதிநிதிகள் அல்லர், அதுவும் தாமே என்றார்.ஒவ்வொரு உரையின் முடிவிலும் இதை மீண்டும் மீண்டும் முன்வைத்தார்.

அதே மாநாட்டில், செப்டெம்பர் 15,1931,காந்தி சொன்னார்: தீண்டாமை பிரச்சினையில் காங்கிரசுக்கு மிகுந்த அக்கறை உண்டு.இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமை எவ்வளவு தேவையோ அதேயளவு இந்துக்கள் மற்றும் தீண்டப்படாதோர் ஒற்றுமை தேவை என்பது அதற்குத் தெரியும்.இதுபோன்ற பட்டியலை வைத்துவிட்டு ‘தனித்தொகுதி’ முறை பற்றிக் குறிப்பிட்டு அதை அவர் எதிர்ப்பதாகச் சொன்னார்.தீண்டப்படாதோரின் நலனும் மற்றவர் நலன் போன்றதே.ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சிறப்பு கவனிப்பு என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.இவ்வகையில், தீண்டப்படாதோருக்கு சிறப்புச் சலுகைகள் என்பதை நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன் என்றார் காந்தி.

இஸ்லாமியர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு சலுகைகள் குறித்துச்சொல்கையில், காந்தி பின்வருமாறு வாதம் செய்தார்: அவை இரண்டும் இருவேறு மதங்கள்.அவை எப்போதுமே வேறானவை.ஆனால் தீண்டப்படாதவர்கள் விசயத்தில் அது அப்படி இல்லை.அவர்களும் இந்துக்களே.அவர்களுக்குத் தனித் தொகுதி கொடுத்தால் இந்துக்கள் இரண்டாகப் பிரிந்து விடுவர்.அதை என்னால் சகித்துக் கொள்ள முடியாது.

காங்கிரஸ் கட்சி தீண்டத்தகாதோருக்கு தனிக் கிணறு, தனிப் பள்ளிக்கூடம் என்று அறிவிக்கையில் இந்த வாதம் ஏன் எழவில்லை? அப்போது இந்துக்களில் பிளவு ஏற்படவில்லையா? தீண்டாமையைக் கடைபிடித்தல் என்பதே இந்துக்கள் ஏற்கனவே இரண்டு பிரிவுகளாக உள்ளனர் என்று உணர்த்தவில்லையா?

தீண்டப்படாதோர் ஏதோ சிறப்புரிமைகளைக் கோருவது போல் அல்லவா காந்தி பேசுகிறார்! எல்லாருக்கும் சமமான உரிமைகள் நிலவும்போது, ஒரு சிலருக்கு மட்டும் கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அதுதான் சிறப்புரிமை.ஆனால், ஒரு சிலர் சமத்துவத்திற்கு வெகு தொலைவில் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதைச் சரிசெய்ய, அவர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் சில ஏற்பாடுகள் செய்வதைச் சிறப்புரிமைகளாகக் கருதமுடியாது.அவை வெறும் ‘காப்பாற்றும் நடவடிக்கைகள்’.

அதே மாநாட்டில், காந்தி தன்னை தீண்டப்படாதோரின் பெரும்கூட்டத்திற்கு உண்மையான பிரதிநிதி என்று அறிவித்துக் கொண்டார்:

“தீண்டப்படாதவர்களிடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் மிக அதிகமான வாக்குகள்பெற்று நான் முன்னணியில் இருப்பேன்”.

மேலும் அவர் கோருவது:

“ஆனால் அவர் [அம்பேத்கர்] நாடி விரும்பும் தனி வாக்காளர் தொகுதிகள் அவருக்கு சமூகச் சீர்திருத்தத்தை வாரி வழங்கிவிடாது.அவர் வேண்டுமானால் உயர் பதவியையும் அந்தஸ்தையும் பெறலாம்.இதனால் ‘தீண்டப்படாதவர்களுக்கு’ எந்த நன்மையும் விளைந்துவிடாது.இத்தனை ஆண்டுகளாக ‘தீண்டப்படாதவர்களுடன்’ உண்டு, உறங்கி, வாழ்ந்து அவர்களது எல்லா இன்ப துன்பங்களிலும் பங்கெடுத்துக் கொண்டவன் என்ற முறையில் இதனை என்னால் உரிமையோடு கூறமுடியும்”.

தீண்டப்படாதோர் குறித்து காந்தியே ‘அதிகாரத்துடன்’ பேச முடியுமானால், அம்பேத்கர் தன்னளவில் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், அவர் அதைவிட அதிகாரத்துடன் பேச முடியும்.இல்லையா? இந்த விசயத்தில் காந்தி அம்பேத்கரைப் பின்பற்றியிருக்க வேண்டும், இல்லையா?

தீண்டாமை ஒழிப்புக்குப் பின்வரும் பரிந்துரைகளை வைத்தார் காந்தி:

“தீண்டாமை என்னும் இந்த இழுக்கை, அழுக்கை, சாபக்கேட்டை ஒழித்துக் கட்டுவதற்கு உறுதிபூண்டுள்ள ஏராளமான இந்து சீர்திருத்தவாதிகள் இன்று தோன்றியுள்ளனர் என்பதை இந்தக் குழுவும், முழு உலகமும் அறிந்து கொள்ளட்டும். எங்கள் பதிவேடுகளில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் தீண்டப்படாதவர்கள் ஒரு தனி சமூகத்தினராகக் குறிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை...

இந்தியாவிலுள்ள தீண்டப்படாதவர்கள் அனைவர் சார்பிலும் தாம் பேசுவதாக டாக்டர் அம்பேத்கர் உரிமை கொண்டாடுவது முறையல்ல.இது இந்து சமுதாயத்தில் ஒரு பிளவை உண்டுபண்ணும்.அதை நான் விரும்பவில்லை.தீண்டப்படாதவர்கள் விரும்பினால் இஸ்லாம் சமயத்துக்கோ அல்லது கிறித்துவ சமயத்துக்கோ மதம் மாறலாம். அதனை நான் சகித்துக் கொள்வேன்.ஆனால் கிராமங்களில் இந்து சமயம் இரண்டாகப் பிளவுபடவிருப்பத்தை நான் சகித்துக் கொள்ள மாட்டேன்.”

காந்தியைப் பொறுத்தவரை இந்துச் சீர்திருத்தவாதிகளின் குழுவே தீண்டாமை ஒழிப்புப் பணியை முன்னெடுக்கும் என்பதே இதன் பொருள்.இவ்வாறாக, ;இடஒதுக்கீடு’ கோரிக்கையை தீண்டப்படாதோர் எழுப்பத் தேவை இல்லை என்றார்.காந்தியால் அதை பொறுத்துக் கொள்ள முடியாது! தீண்டப்படாதோருக்கு இடஒதுக்கீடு கோரிக்கையில் உடன்பாடு ஏற்படவில்லை.முஸ்லிம்கள், சீக்கியர்களின் தனித் தொகுதி கோரிக்கையும் இன்னும் தீர்க்கப்படவில்லை. ”இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வரை சுதந்திரம் என்ற பேச்சுக்கே இடமில்லை”, பிரிட்டிஷ் அரசு அதைத் தெளிவுபடுத்தியது.ஒட்டுமொத்தமாக வட்டமேசை மாநாடு தோல்வியடைந்தது என்பதையே இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மாமனிதர்களின் பேச்சுவார்த்தை ஒரு தீர்வாக அமையும் என்று மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் நினைத்தார்கள்.அம்பேத்கர் அந்தச் சூழலைப் பின்வருமாறு நினைவுகொள்கிறார்:

“சிறுபான்மைக் குழுக் கூட்டத்தை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கு முன்னர் ஓர் இணக்கமான உடன்பாடு, ஓர் ஒன்றுபட்ட தீர்வு காணுவது சாத்தியமில்லை என்பதைத் தெரிந்து கொண்ட கூட்டத் தலைவர் பிரதிநிதிகளுக்கு ஒரு யோசனை கூறினார்.அவர் பின்வருமாறு தெரிவித்தார்:

“வகுப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு என்னைக் கேட்டுக் கொள்ளும் ஒரு வேண்டுகோளில் இக்குழுவைச் சேர்ந்த நீங்கள் ஒவ்வொருவரும் கையெழுத்திடுவதற்கும், என் முடிவை ஏற்பதாக உறுதி கூறுவதற்கும் நீங்கள் சம்மதிப்பீர்களா? இது ஒரு நியாயமான கோரிக்கை என்று நம்புகிறேன்.. வகுப்புப் பிரச்சினை சம்பந்தமாக தற்காலிகமாகவாவது ஒரு தீர்வைத் தெரிவிக்கும்படி என்னைக் கேட்டுக்கொள்ளும் ஒரு பிரகடனத்தில் குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, நாங்கள் இந்தத் தீர்வை ஏற்கிறோம் என்று கூறுவீர்களா? இப்போதே இதைச் செய்ய வேண்டும் என்று நான் கேட்கவில்லை.இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டு, நான் கூறும் முடிவை ஏற்போம் என்றும், புதிய அரசியலமைப்பை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் காலத்தில் அந்த முடிவைச் செயல்படுத்த எங்கள் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் செய்வோம் என்றும் நீங்கள் உறுதி அளிப்பீர்களா? இதையே பல பகுதியினரிடம்-குறைந்தபட்சம் தனி நபர்களிடம்-அவ்வப்போது கேட்டு வந்திருக்கிறேன்; ஆனால் என்றும் அந்த உறுதிமொழியை நான் பெற்றதில்லை.இதிலிருந்து நிலைமையை நிச்சயமாகப் புரிந்து கொள்ளலாம்.”

இறுதியாக, காந்தி உட்பட அனைத்துப் பிரதிநிதிகளும், பிரிட்டிஷ் பிரதம மந்திரி ராம்சே மெக்டொனால்டை ஒரு  நடுவராக ஒப்புக்கொண்டு அந்த அறிக்கையில் கையொப்பம் இட்டனர்.

இடஒதுக்கீடு இல்லாமலே தீண்டப்படாதவர்கள் தேர்தலில் பங்கேற்க வாய்ப்பளிக்கின்ற ஓர் அற்புதமான திட்டம் குறித்து மாநாட்டின் கடைசி நாட்களில் காந்தி, அம்பேத்கருடன் விவாதித்தார்.

“அந்த திட்டம் பின்வருமாறு: தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் இதர உயர்சாதி இந்து வாக்காளர்களை எதிர்த்துப் பொதுத் தொகுதியில் போட்டியிடலாம்.தாழ்த்தப்பட்ட வேட்பாளர் எவரும் தேர்தலில் தோற்றுப்போனால் அவர் ஒரு தேர்தல் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்; தீண்டப்படாதவர்கள் என்பதால் தான் தோற்கடிக்கப்பட்டதாக தீர்ப்பைப் பெறவேண்டும்.இத்தகைய ஒரு தீர்ப்புப் பெறப்பட்டால் சில இந்து உறுப்பினர்களை அணுகி அவர்களை ராஜினாமா செய்ய இணங்கவைத்து ஒரு காலி இடத்தை உருவாக்கித் தருவதாக மகாத்மா கூறினார்.அப்போது மற்றொரு தேர்தல் நடைபெறும்; ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட வேட்பாளரோ அல்லது வேறு எந்த தாழ்த்தப்பட்ட வகுப்பு வேட்பாளரோ இந்து வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிட்டு தனது அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்கலாம்.அவர் மீண்டும் தோற்கடிக்கப்பட்டால் இதே போன்ற தீர்ப்பைப் பெறலாம்; இவ்வாறு அவர் திரும்பத்திரும்ப போட்டியிட்டுக்கொண்டே இருக்கலாம்.”

இப்படித்தான் அந்தத் திட்டம் செல்கிறது! அம்பேத்கர் இந்தத் திட்டத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்று சொல்லவும் தேவையில்லை.

தீண்டப்படாதவர்களுக்கு இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து, அதன் அடிப்படையில் முஸ்லிம் தலைவர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்வதற்கு இலண்டனில் இருந்தபோது காந்தி முயற்சித்தார்.ஆனால் காந்தி நினைத்ததுபோல் ஏதும் நடக்கவில்லை.வட்டமேசை மாநாட்டினால் ஆதரவு கிடைக்காமல், வெறும் விமர்சனம் மட்டுமே எழுந்ததால் விரக்தி அடைந்த காந்தி தன் கவனத்தை தன் வீடு நோக்கித் திருப்பினார்.

வட்டமேசை மாநாட்டில் அவர் முழுமையாகத் தோல்வி அடைந்தது அனைத்து காங்கிரஸ் தலைவர்களுக்கும் தெரியும்.இருந்தும், டிசம்பர்28,1931 அன்று மும்பை வந்திறங்கிய காந்திக்கு ஆடம்பர வரவேற்பை ஏற்பாடு செய்தது காங்கிரஸ்.

அந்த கெளரவ விழா எப்படி இருந்தது என்பதை பட்டாபி சித்தாராமையாவின் சொற்களில் பார்ப்போம்:

“இந்திய மக்களின் உரிமைக் காவலருக்கு, தனிப்பெரும் தலைவருக்குத் தக்க வரவேற்பினை அளிப்பதற்கு, இந்தியாவின் மாகாணங்கள் அனைத்திலிருந்தும், அவற்றின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருந்திரளான பிரதிநிதிகள் பம்பாயில் கூடினர்...சுங்கத்துறை மண்டபமொன்றில் முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர், பேரரசர்களும் பொறாமைப்படத்தக்க மாபெரும் ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது.”

இந்த ‘மாபெரும் வரவேற்பை காந்தி பெறுகையில், ஆயிரக்கணக்கான தீண்டப்படாதவர்கள் தங்கள் எதிர்ப்பு ‘அணிவகுப்புகள்’ மூலம் ‘மாபெரும் அவமதிப்பைக் கொடுத்து காந்தியை நிராகரித்தனர்.பத்துக் கேள்விகள்

அடங்கிய ஒரு துண்டறிக்கையை அவர்கள் கொண்டுவந்தனர்.அவை பின்வருமாறு:

“காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிரான எங்கள் குற்றப் பத்திரிகை... உங்களது பாசங்குத்தனமான ஆதரவுப் போக்கும், உதட்டளவிலான அனுதாபமும் எங்களுக்குத் தேவையில்லை; நீதியும் நியாயமுமே எங்கள் கோரிக்கை...சில கையாட்களையும் போலிகளையும் பக்கத்துணையாகக் கொண்டு, காந்தியாரும் காங்கிரஸ் கட்சியினருமே ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான பிரதிநிதி எனக் காட்டும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.இத்தகைய சூழ்நிலையில், ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து உண்மை நிலை என்னவென்பதை உணர்த்துவது தாழ்த்தப்பட்ட மக்களாகிய எமது கடமையல்லவா? இதுவே காந்தியாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் எதிராக நாங்கள் சாற்றும் குற்றப்பத்திரிகை...

இவ்வார்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான தீண்டப்படாதோர் ஆண்களும், பெண்களுமாய்க் கலந்து கொண்டு, கறுப்புக் கொடிகளைக் காட்டி, காந்திக்குத் தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.காந்தியை வரவேற்க வந்திருந்த, எண்ணிக்கையில் பன்மடங்கு மிகுந்திருந்த காங்கிரஸ் கட்சியினரின் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது, காந்திக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதில் அவர்கள் உறுதியாய் நின்றனர்.இதன் விளைவாய் பூசலும் இரத்தக் களரியும் விளைந்தன; அதனால் இருதரப்பிலும் தலா நாற்பது பேர் பலியாயினர்...தமக்கும் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவிக்கப்படலாம் என்று காந்தியை முதன்முதலாக உணரவைத்த நிகழ்ச்சி இதுவே.இது அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டும்.”

லண்டனில் இருந்து காந்தி திரும்புகையில், ஒரு பேட்டியில், தான் ஒத்துழையாமை இயக்கம் ஒன்றைத் தொடங்கவிருப்பதாக நிருபரிடம் தெரிவித்தார் காந்தி. கெளரவ விழாக்கள் முடிந்தது, அரசாங்கம் காந்தியைக் கைது செய்து, யெரவாடா சிறையில் அடைத்தது.

பிரதம மந்திரியின் சமரச முயற்சிகளை ஏற்றுக்கொள்வதாக கையொப்பமிட்டதை மறந்து சிறையில் இருந்து கொண்டு, பிரிட்டிஷ் அரசு இடஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று காந்தி கடிதங்கள் எழுதத் தொடங்கினார்!

காந்தி, தன் கடிதத்தில், இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டால், இந்துக்கள் தீண்டப்படாதோர் மீது கோபம் கொள்வார்கள், அவர்கள் மாற விரும்பமாட்டார்கள், தீண்டாமை மறையாது, அதனால் இந்துச் சீர்திருத்தவாதிகளின் முயற்சிகளுக்கு எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று எழுதினார்.

அவர் பின்வருமாறு வாதம் செய்தார்:

“வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுத் தாழ்ந்து கிடக்கும் வீழ்ந்து கிடக்கும் தங்கள் சகோதரர்களைக் கைதூக்கி விடுவதற்கு, அவர்கள் உய்வும், உயர்வும் பெறுவதற்கு இந்து சமூகச் சீர்திருத்தச் செம்மல்கள் தங்களைத் தன்னலமற்று அர்ப்பணித்துக் கொண்டு எத்தனை எத்தனையோ அரும்பெரும் பணியாற்றி இருக்கிறார்கள்.அந்த மகான்களின் இத்தகைய சீரிய சேவையின், அற்புதப் பணியின் வளர்ச்சியை, முன்னேற்றத்தை உங்களது இந்த நடவடிக்கையின் மூலம் தடுத்து நிறுத்துகிறீர்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?.”

(அடுத்த பகுதியில் தொடரும்...)

நன்றி: சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு

தெலுங்கு மூலம்: ரங்கநாயகம்மா

பதிப்பகம்: SWEET HOME PUBLICATIONS

 

Leave Comments

Comments (0)