இன்றைய சுற்றுசூழல் பிராச்சனைகள் குறித்து கார்ல் மார்க்ஸ் என்ன சொல்லுகிறார் ?

/files/detail1.png

இன்றைய சுற்றுசூழல் பிராச்சனைகள் குறித்து கார்ல் மார்க்ஸ் என்ன சொல்லுகிறார் ?

  • 4
  • 0

-டெட் பென்டன், தமிழில் V.கோபி 

சோவியத் யூனியன் சிதறுண்டதும்,சீனாவின் பொருளாதாரம் வேறு பாதையை நோக்கி திரும்பியதும்,இனி முதலாளித்துவம் மட்டுமே உலகத்தை ஆட்சி செய்யும் என நினைக்கத் தோன்றியது.கார்ல் மார்கஸ் சிந்தனைகள் வரலாற்றின் குப்பை தொட்டிக்குள் வீசப்பட்டன.ஆனாலும் 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையும் அதற்குப் பின்பான உலக பொருளாதார நிலையும் அனைவரையும் கார்ல் மார்க்ஸின் சிந்தனையை நோக்கி திரும்ப வைத்தது.

நல்லதோ,கெட்டதோ கார்ல் மார்க்சின் சிந்தனைகள் இவ்வுலகை பாதித்தது போல் வேறு எந்த நவீன சமூக,அரசியல் அறிஞரின் கருத்துக்ளும் பாதித்ததில்லை.சமீபத்தில் கார்ல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போதுகூட,வழக்கமான மார்க்ஸிய பார்வையே விவாதப் பொருளாக இருந்தது.மார்க்ஸியத்துக்கு எதிராக அல்லது ஆதரவாக கருத்து கூறுபவர்கள் கூட,அவரின் முதலாளித்துவ,ஏகாதிபத்திய எதிர்ப்பையும்,சமூகத்தை சோசியலிசத்தை நோக்கி செலுத்துவதற்கு நடத்திய போராட்டத்தையுமே கவனம் கொடுத்து பேசுகின்றனர்.

இதில் வருத்ததுக்குரிய விஷயம்,மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான தொடர்பை பற்றிய மார்க்ஸின் சிந்தனைக்கு மிகச் சிறிய அளவே கவனம் கொடுக்கப்பட்டது.

இத்தனை ஆண்டுகாலம் நாம் வாழ்ந்து வந்த வாழ்க்கையை,இந்த உலகத்தை நவீன முதலாளித்துவம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருவதே இன்றைய மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை.தற்போதைய ‘வானிலை மாறுபாட்டின்’ மூலம் நாம் இதை தெரிந்து கொள்ளலாம்.மேலும் கடல் மாசடைதல்,நகர்மயமாக்குதல்,மண் வளம் குறைதல் முக்கியமாக உயிர்ச்சூழல் குறைதல் போன்ற பல ஆபத்துகள் நம்மை சூழ்ந்துள்ளன.

இன்றைய கால பிரச்சனைக்கு,நூறாண்டுகளுக்கும் முன்னர் எழுதிய மார்கஸை ஏன் நாம் எதிர்பார்க்கிறோம் என சிலர் கேட்கலாம்.மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான சிக்கலான உறவுகள் பற்றி மார்க்ஸ் தன் வாழ்நாள் முழுதும் சிந்தித்ததாக தற்போதைய ஆய்வுகள் பல கூறுகின்றன.
மார்க்ஸின் ஆரம்பகால தத்துவ பிரதிகளில்,முதலாளித்துவத்தின் மூலம் ‘அந்நியமாக்கப்பட்ட தொழிலாளி’ என்ற கருத்தை உருவாக்குகிறார்.இயற்கையுடன் கூடிய உறவை நாம் முறித்து கொண்டதையே மார்கஸ் அந்நியமாதல் என குறிப்பிடுவதை கருத்துரையாளர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை.

இதன் ஆரம்பமாக பொது நிலங்கள் வேலியிட்டு அடைத்து வைக்கப்பட்டன.இதனால் பல கிராம மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக தொழிற்சாலைகளுக்கு கூலிகளாக செல்லத் தொடங்கினர்.இயற்கையை அழிப்பதும் தொழிலாளர்களை கீழ்த்தரமாக நடத்துவதும் ஒருசேர நடந்தன.இத்தைகைய நிலையை எதிர்கால கம்யுனிஸ சமூகம் மாற்றியமைத்து மனிதர்கள் தங்கள் தேவைகளை இயற்கையோடும் மற்றவர்களோடும் ஒத்திசைந்து நிறைவேற்றி கொள்வார்கள் என மார்க்ஸ் நம்பினார்.

மனிதன் இயற்கையோடு வாழ்கிறான்.தான் இறந்துவிடாமல் இருப்பதற்காக இயற்கையோடு தொடர்ந்து உரையாடல்களை பரிமாறிக் கொள்கிறான்.மனிதனின் உடலும் ஆண்மீக வாழ்வும் இயற்கையோடு பின்னிப் பிணைந்துள்ளது.இதன்மூலம் மனிதன் என்பவன் தனித்துவமானவன்,இயற்கைக்கும் மேலானவன் என்ற பழையகால தத்துவத்தை மார்க்ஸ் மறுக்கிறார்.மேலும் முதலாளித்துவத்தினால் இந்த உறவில் சிக்கல் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்.

தனது பிற்கால எழுத்துகளில் உற்பத்திமுறை பற்றி விரிவாக ஆராயும் மார்க்ஸ்,வரலாற்றில் பல்வேறு வகையான மனித சமூகங்கள் தங்களது அன்றாட பயன்பாட்டிற்கான பயிர்களை விளைவிக்க தங்களுக்கே உண்டான வழியில் உழைப்பாளர்களை பயன்படுத்துவது மட்டுமின்றி அதை தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்கவும் செய்துள்ளனர்.உதாரணமாக,பண்டைய வேட்டை சமூகத்தினர் சமத்துவத்தோடும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமலும் இருந்தனர்.ஆனால் நிலப்பிரபுத்துவ சமூகம் சமத்துவம் இன்றி சமூக உறவை அழித்தும் செயல்பட்டது.

1860 களிலேயே மார்கஸ் மண் வளம் குறைவதை பற்றி எழுதுகிறார்.அன்று இது மிகப் பிரச்சனையாக இருந்துள்ளது.நாட்டிற்கும் நகரத்திற்கும் இடையே பங்கீடுதலால் எவ்வாறு மண் வளம் குறைகிறது என்பதையும் இதனால் நகர்ப்புறங்களில் நோய்தொற்றும் மாசும் ஏற்படுவதையும் தன் எழுத்துக்களில் குறிப்பிடுகிறார்.இக்கருத்தையே நவீன எழுத்தாளர்களான ஜேம்ஸ் ஓ கானரும் சமுகவியலாரான ஜான் பெல்லாமி பாஸ்டரும் சற்று மேம்படுத்தி முதலாளித்துவத்தினால் சுற்றுச்சூழலில் பிளவு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

மார்க்ஸின் சிந்தனைகள் இன்றியமையாதது மட்டுமல்ல பிரச்சனைக்குரியதும் கூட.சில நேரத்தில் முதலாளித்துவத்தின் மூலம் உற்பத்தி பெருக்கம் ஏற்பட்டதை கொண்டாடும் மார்கஸ்,இதன் பலனை அனைவருக்கும் கிடைத்திட சோசியலிஸம் அவசியமானதாக கருதுகிறார்.தற்போதைய ஆய்வுகள் இக்கருத்தை மறுத்தாலும்,வரலாற்று நோக்கில் இக்கருத்து செல்வாக்கு செலுத்துகிறது.இதனால்தான் ரஷ்யாவில் ஸ்டாலின் மேற்கொண்ட தொழில்மயமாக்குதல் கடும் விளைவை ஏற்படுத்தியது என கூறும் வாதம் விவாதத்துக்குரியது.

முதலாளித்துவம் சுற்றுச்சூழலுக்கு ஒருபோதும் உகந்ததல்ல,ஆகையால் மீதமுள்ள இயற்கையிடம் அறிவார்ந்த முறையில் தொடர்பை ஏற்படுத்த நமக்கு சோசியலிஸம் தேவையாக உள்ளது என இன்றைய சுற்றுச்சூழல் மார்க்ஸியவாதிகள் கூறுகின்றனர்.மேலும் இத்தைகைய அறிவார்ந்த சமூகத்தை கட்டி எழுப்ப,சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமையான மார்க்க்ஸியமே நமக்கு இப்போதைய தேவை.
                                                                                                                                                                                                                                                                                                    நன்றி    : https://mronline.org/2018/06/08/what-karl-marx-has-to-say-about-todays-environmental-problems/#lightbox/0/                                                                                                                                                               

Leave Comments

Comments (0)