ஹிமா தாஸின் சாதியை கூகுளில் தேடிய இந்தியர்கள்

/files/detail1.png

ஹிமா தாஸின் சாதியை கூகுளில் தேடிய இந்தியர்கள்

  • 1
  • 0

-சபீனா அக்தர் (தமிழில் V.கோபி )

சமீபத்தில் பின்லாந்து நாட்டில் நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட IAAF தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400மீ ஒட்டப்பந்தயத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதான ஹிமா தாஸ் தங்கப்பதக்கம் பெற்றார். சாதாரண பொதுமக்கள் முதல் குடியரசு தலைவர் வரை ஹிமாவின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். சமூக வலைதளத்தில் விராத் கோலியும் பல புகழ்பெற்ற நடிகர்களும் வாழ்த்துச்செய்தி அனுப்பினர். ஆனால் இந்த கொண்டாட்டத்தையும் புகழையும் கெடுக்கும் வகையில் இந்திய தடகள கூட்டமைப்பின் செயல் அமைந்தது. பாராட்டுகிறேன் என்ற பெயரில், “ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரியாது என்றாலும்….என டிவிட்டரில் ஹிமாவிற்கு வாழ்த்து கூறியது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. சமுகவலைதளத்தில் பொதுமக்களின் கடும் கணடனத்தால் வேறு வழியின்றி தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டது இந்திய தடகள கூட்டமைப்பு.
ஒரு விவசாயி மகள் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறாள் என பலரும் புகழ்ந்து கொண்டிருக்கும் அதே சமயத்தில் கேரளா, கர்நாடகா, ஹர்யானா, அஸ்ஸாம் மற்றும் வங்காள மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் இதற்கு மாறான காரியத்தை செய்து கொண்டிருந்தனர். அப்படி என்ன இவர்கள் செய்தார்கள்? ஹிமா தாஸின் சாதி  என்ன என்று கூகுளில் தேடி கொண்டிருந்தார்கள்.

கூகுள் தேடு பொறியில் “ஹிமா..” என நாம் டைப் செய்த அடுத்த நொடி ‘ஹிமா தாஸ் சாதி ’ என்று முதலில் வந்து நிற்கிறது. இதிலிருந்தே எவ்வுளவு அதிகமான மக்கள் அவரின் சாதியை தேடியிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். நாம் இன்னும் சற்று ஆராய்ந்தால், ஹிமா தாஸ் தங்கப்பதக்கம் வென்ற செய்தி பரவ தொடங்கியதும் கேரளா, கர்நாடகா, ஹர்யானா, அஸ்ஸாம் மற்றும் மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் இருந்தே அதிகமான மக்கள் ஹிமாவின் சாதியை தேடியுள்ளார்கள் என கூகுள் டிரெண்ட்ஸ் நமக்கு காட்டுகிறது.

ஹிமாவின் சாதியை பற்றி அதிக எண்ணிகையில் தேடியவர்கள் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் கேரளா, கர்நாடகா மற்றும் ஹர்யானா மாநிலம் உள்ளது. இப்போது போலவே 2018ம் ஆண்டு பிவி சிந்துவும் ஷாக்சி மாலிக்கும் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கமும் வெண்கல பதக்கமும் வென்றபோது இதேமாதிரி அவர்களின் சாதி என்ன என்று கூகுளில் பலரும் தேடினர். ஆனால் அப்போது ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஹர்யானா மாநில மக்கள் அதிகளவில் தேடினர்.

“சில சமயம், ஒரு இந்தியனாக இருக்கவே வெட்கப்படுகிறேன். இதுமாதிரி சமயங்களில் என் நாட்டு மக்களை நான் வெறுக்கிறேன்” என சென்னையைச் சேர்ந்த கார்த்திக் தனது முகநூலில் பதிவு செய்துள்ளார்.

இன்றும் நம் நாட்டில் சாதி  மக்களின் ஆழ் மனதில் வேறூன்றி உள்ளதையே இத்தகைய தேடுதல் நமக்கு தெரிவிக்கிறது. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் கூகுள் டிரெண்ட்ஸ் நமக்கு கொடுத்த தகவலின் படி, பரந்த மனப்பான்மை கொண்டவர்கள், கல்வியறிவில் சிறந்தவர்கள் என நாம் இதுவரை கூறிக்கொண்டிருந்த கேரளா மற்றும் மேற்கு வங்காள மக்களே ஹிமாவின் ஜாதியைப் பற்றி அதிகமாக கூகுளில் தேடியுள்ளார்கள்.

“தனது கடும் முயற்சியாலும் போராட்டத்தாலும் நமக்கு பெருமை தேடி தந்துள்ளார் ஹிமா. அவர் ஒரு இந்தியன். அதுவே இங்கு முக்கியம். மாறாக அவரின் சாதி , நிறம், மதம் போன்றவற்றை தேடுவதில் ஒரு பயனும் இல்லை” என்கிறார் முன்னாள் உலக அழகியான கொங்கனா பக்சி.

இன்னும் பல வேடிக்கையான தேடுதல்கள், குறிப்பாக ஹிமாவின் இனம் குறித்தும் சமூக வலைதளத்தில் விவாதம் நடந்து வருகின்றன. சிலர் அவரது பெயரை வைத்து அவர் வங்காளத்தைச் சேர்ந்தவர் என வாதிடுகின்றனர். ஆனால் உண்மையில் அவர் அஸ்ஸாமைச் சேர்ந்தவர்.

இந்திய தடகள அமைப்பு தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டிருக்கலாம், ஆனால் ஜாதி பெயரை தேடிய இந்தியர்களின் சார்பாக யார் மன்னிப்பு கேட்பது. தங்களது திறமையால் சாதனைகள் புரிந்து வரும் ஹிமா, சிந்து, சாக்சி போன்றவர்களின் சாதி  என்ன, இனம் என்ன என்று நாம் காலம் காலமாக தேடி அவமதிப்பதை எப்போது நிறுத்தப் போகிறோம். இவர்களின் சாதனைகளையும் வெற்றியையும், கடைசி வரை போராடும் துணிச்சலையும் ஒரு இந்தியனாக நினைத்து நாம் எப்போது கொண்டாடப் போகிறோம்? அல்லது இனிமேல் சாதனை புரிபவர்களின் இனம், சாதி, மதம் ஆகியவற்றை வைத்தே பாராட்டப் போகிறோம் என இருக்கப்போகிறீர்களா?

நன்றி  https://enewsroom.in/hima-das-caste-searched-google-athlete-assam/

Leave Comments

Comments (0)