பிரெஞ்சு எதிர்ப்பு : கோஸ்தா காவ்ராஸ்

/files/detail1.png

பிரெஞ்சு எதிர்ப்பு : கோஸ்தா காவ்ராஸ்

  • 4
  • 0

-மாயா ஜக்கி தமிழில் V.கோபி 

இருண்ட வானிலையும் கருப்புநிற கட்டிடங்களும்,அவர்கள் மொழியை நாம் பேசாதபோது மக்கள் நம்மை பார்க்கும் பார்வையும்,இதையெல்லாம் பார்த்ததும் உடனே ரயிலை பிடித்து வீட்டுக்கு போய் சேர வேண்டும் என்பதே என் மனதில் இருந்ததாக முதன் முதலில் 1954ம் ஆண்டு கிரீஸ் நாட்டிற்கு வந்ததை நினைவு கூர்கிறார் 76 வயதாகும் கோஸ்தா காவ்ராஸ்.

தனது பேரக் குழந்தைகளோடு பாரீஸில் வசித்துவரும் கோஸ்தா,பிரெஞ்ச் சினிமாவின் உலகப்புகழ்பெற்ற இயக்குனர் ஆவார்.தனது 45 வருட சினிமா வாழ்க்கையில் இதுவரை 20 படங்களை இயக்கியுள்ளார்.

இவரின் புகழ்பெற்ற படமான Z சீர்திருத்த அரசியல்வாதி ஒருவரின் கொலையை விசாரிக்கும் நேர்மையான நீதிபதி பற்றிய கதையை கொண்டது.சதித்திட்டத்தின் மூலமாக ஜனநாயகத்தை கொன்று,அமெரிக்க ஆதரவுடம் நடைபெற்ற ஆட்சிகவிழ்ப்பினை நகைச்சுவையோடு ஆவணப்பட சாயலில் கூறுகிறது இப்படம்.வேகமான காட்சியமைப்புகளுடனும் பரபரப்பான அரசியல் விமர்சனத்தின் மூலமும் இந்த வகை படத்தின் மேதையாக கோஸ்தா கவ்ராஸ் அறியப்படுகிறார்.இப்படம் சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஆஸ்கர் விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.
80களில் ஹாலிவுட்டிற்கு வந்த கோஸ்தா,தான் எடுத்த Missing(1982) படத்திற்கு சிறந்த தழுவல் திரைக்கதைக்காக ஆஸ்கார் விருது பெற்றார்இப்படமும் அமெரிக்க ஆதரவுடன் சிலியில் நடந்த ஆட்சி கவிழ்ப்பினை விவரிக்கிறது.ஹோலாகாஸ்ட் சம்பவத்திற்கு உறுதுணையாக இருந்ததாக கூறி கத்தோலிக்க ஆலயத்தை விசாரிப்பதாக அமைந்த இவரின் Amen(2003) படமும் சர்ச்சைக்குள்ளானது. 

‘அரசியல் படம்’ என்ற தனியாக பிரிப்பதை கோஸ்தா விரும்பவில்லை.எல்லா படமும் அரசியல் படமே எனக் கூறும் கோஸ்தா, “துப்பாக்கியை கொண்டு உலகை காக்கும் நாயகனை” வைத்து சண்டை படம் எடுப்பது கூட அரசியல் படமே என்கிறார்.தனது திரைப்படங்களை உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கும் கோஸ்தா,கொள்கையாலும்,நம்பிக்கையாலும்,உலக அரசியலாலும் அழிவுறும் உறவுகளை தனது விருப்பமான களமாக தேர்வு செய்கிறார்.எதிர்ப்பு தெரிவிப்பது மனிதனின் முக்கிய செயலாக கோஸ்தா பார்க்கிறார்.

வரலாறுக்கும் தனிமனித விருப்பத்திற்கும் இடையில் நடக்கும் சண்டைகளை தனது கேமராவின் வழியாக கோஸ்தா காட்சிபடுத்துவதாக கூறும் பிரெஞ்ச் நாவலாசிரியரும் இயக்குனருமான பிலிப் கிளாடல்,கோஸ்தாவை “துன்பியல் கவிஞர்” என பாராட்டுகிறார்.

நாசிகள் கட்டுப்பாட்டில் கிரீஸ் இருந்தபோது கோஸ்தாவின் தந்தை இடதுசாரி எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக போரில் ஈடுபட்டார்.1949ம் ஆண்டு கம்யுனிஸ்ட் தோல்வியினால் போர் முடிவிற்கு வந்தது.வரி வசூல் செய்யும் அதிகாரியாக இருந்த அவரது தந்தை பணி இழந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

“அனைவரையும் கம்யுனிஸ்ட் என அரசாங்கம் நினைத்தது.நாங்கள் வறுமையில் தள்ளப்பட்டோம்.வருமானத்திற்காக எனது அம்மா வீட்டு வேலையும்,நான் கிடைத்த எந்த வேலையையும் செய்து வந்தேன்.எனது அப்பாவின் அரசியல் கொள்கையால் கிரேக்க பல்கலைக்கழகமும், அமெரிக்க திரைப்பட பள்ளியும் என்னை சேர்த்து கொள்ளவில்லை.பனிப்போரினால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.கிரேக்க வரலாற்றில் இது ஒரு மோசமான காலகட்டம்.என் அதிர்ஷ்டம் பிரான்ஸ் நாட்டிற்கு வந்து படிக்க முடிந்தது.என் தந்தையை கைது செய்திருக்காவிட்டால் நான் கிரீஸை விட்டு வெளியேறி இருக்க மாட்டேன்” என தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் கோஸ்தா.

“கிரேக்க பாலெட் நிறுவனத்தில் இணைந்து நடனமாடியதாகவும் பின்பு ஓப்ரா மற்றும் பாலெட் நடனத்தை இயக்கியதாகவும்” தான் வருமானத்திற்காக ஏதென்ஸ் நகரத்தில் பணிபுரிந்ததைப் பற்றி கூறும் கோஸ்தா,அங்குதான் சினிமா என்பது சிறந்த மனிதர்கள் மட்டுமே வெற்றி பெறும் தொழில் அல்ல என்பதை தெரிந்து கொண்டேன் என்கிறார்.

1956ம் ஆண்டு பாரீஸின் திரைப்பட பள்ளியில் சேர்ந்த கோஸ்தா, “திரைப்படத்தை பார்ப்பதும் ஆய்வு செய்வதும் சந்தோஷமாக இருந்தது.1958ல் பயிற்சி இயக்குனரானதும் ரெனே கிளார்,ரெனே கிளெமண்ட் போன்றவர்களிடம் பணிபுரியத் தொடங்கினேன்.மேலும் வேறு கலாச்சாரத்திலிருந்து வந்த தன்னால் பிரெஞ்ச் இயக்குனர்கள் போல் திரைப்படம் எடுக்க முடியாது” என்பதையும் கூறுகிறார்.

தனது அரசியல் ஈடுபாட்டை பற்றி குறிப்பிடும் போது, “என் தந்தை சிறைக்குச் சென்றதால் அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு என் அம்மா அடிக்கடி கூறுவார்.நீங்கள் அரசியலை மறுத்தால்,பல உறவுகளை மறுக்க வேண்டி வரும்.தனிநபராக இருப்பது சமூகத்திற்கு கேடான விஷயம்.நீங்கள் எந்த ஒரு நிலை எடுக்காமல் இருப்பதும் ஒரு நிலையே”

என்னுடைய தலைமுறையில் கிரீஸ் நாட்டிற்கு கம்யுனிஸமே தீர்வு என்று நினைத்திருந்தோம்.ஆனால் கட்சி தலைவர்களை தவிர்த்து மற்ற மனிதர்கள் யாரையும் மதிக்காத அடக்குமுறை அமைப்பு என்பதை பின்புதான் தெரிந்து கொண்டோம்.சமூகம் தன்னை மாற்றிகொள்ள தொடர்ந்து போராடி வருகிறது.என்றாவது ஒருநாள் நாம் வாழும் சமூகம் சொர்க்கமாகும் என்பதில் எனக்கு நம்பிக்கையே இல்லை” என்கிறார்.

ஹாலிவுட்டில்  படம் இயக்கியனாலும் திரைக்கதையும் நடிகர்களின் தேர்வும் தன் கட்டுப்பாட்டில் இருக்கும்படி பார்த்துக்கொண்டார். “எதற்கு நகச்சுவை நடிகர் ஜேக் லெமானை தேர்வு செய்தீர்கள் என ஒருமுறை என்னை கேட்டனர்.தனது நடிப்பிற்காக கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளார் லெமான் எனக்கூறி அவர்களின் தேர்வை நான் ஒத்துக்கொள்ளவில்லை.பார்வையாளர்களின் பிரச்சனைகள் சிக்கலானது.அவர்கள் யார் என்பதோ,அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதோ யாருக்கும் தெரியாது.என் படத்திற்கு எப்போதும் நானே முதல் பார்வையாளன்”.

தனது ஆமென் படத்தை பற்றி கூறும்போது, “ஆமென் படத்தின் போஸ்டரே பெரும் பிரச்சனையை உருவாக்கியது.நல்லவேளையாக பிரெஞ்ச் கிறிஸ்த்துவ குழுக்களால் படத்தை தடை செய்ய முடியவில்லை.இங்கு 2000 வருடத்திற்கும் மேல் கிறிஸ்த்துவ ஆலயங்கள் நிலைத்திருக்கிறது என்றால்,இவர்கள் வலிமையானவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்”.

“சமீபத்தில் இளைஞர் ஒருவனை காவல்துறை சுட்டதால் மீண்டும் கிரீஸில் வன்முறை வெடித்துள்ளது.இன்னும் அங்கு சமூக,பொருளாதார,கல்வி அமைப்பு மாறவில்லை என்பதையே இக்கலவரம் நமக்கு உணர்த்துகிறது.வலதுசாரியோ அல்லது சோசியலிசமோ,எந்த அரசாங்கத்தையும் இளைஞர்கள் இப்போது நம்புவதில்லை.ஏனென்றால் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை ஒருபோதும் நிறைவேற்றியதில்லை.கோடிக்கனக்கான பணத்தை கல்விக்கு செலவழிக்காமல் வங்கிக்கு கொடுப்பதை அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.தனது குழந்தைகள் சினிமாத்துறையில் பணிபுரிவதை வரவேற்கும் அதே சமயத்தில் அவர்கள் மருத்துவர்களாகவோ,வழக்கறிஞராகவோ பணிபுரிவதே நல்லது” என்று கிரீஸின் இன்றைய நிலையை பிரதிபலிக்கிறார் கோஸ்தா கவ்ராஸ்.

ஹாலிவுட்டை பற்றி கூறுகையில், “அங்கு நிலைமை வேறு விதமாக உள்ளது.பிரபலமான நடிகர்களின் ஈடுபாட்டால் வெளிப்படையான அரசியல் படம் அங்கு வெளியாகிறது.ஆனால் இந்த எண்ணம் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்தோ இயக்குனரிடமிருந்தோ வரவேண்டும்.மேலும் ஹாலிவுட்டின் கவர்ச்சி மோகத்தை பற்றி குறிப்பிடுகையில், “நாம் படம் எடுப்பது பொழுதுபோக்கிற்கே என்பதை நான் மறுக்கவில்லை.சினிமா என்பது பார்வையாளர்களை தூண்டி இழுத்து அவர்களை சிந்திக்க தூண்டுவதே.கிரீஸில் இதற்கான சரியான வார்த்தை இல்லை.பழைய கிரேக்க வழக்கில் கூறுவதானால், “ஆன்மாவிற்கு வழிகாட்டுதல்”.என்னை பொருத்தவரை ஒரு பொழுதுபோக்கின் நோக்கம் இதுவாகத்தான் இருக்க முடியும்”.

குறிப்பு: படச்சுருள் அரச பயங்கரவாத எதிர்ப்பு சினிமா சிறப்பிதழுக்காக மொழியாக்கம் செய்யப்பட்ட இந்தக் கட்டுரை, பக்க பற்றாக்குறை காரணமாக கருப்பில் வெளியிடப்படுகிறது.


 

Leave Comments

Comments (0)