பாப்லோ பிக்காஸோ : கலையும் கம்யூனிசமும்

/files/re 2020-10-29 16:23:53.jpg

பாப்லோ பிக்காஸோ : கலையும் கம்யூனிசமும்

  • 154
  • 0

-யமுனா ராஜேந்திரன்

தனது சமகாலத்தில் தன் வாழ்வை உலகுத் தழுவியும் வெளிப்படையாகவும் வாழ்ந்த கலைஞன் பிக்காஸோ. வாழ்வின் அனைத்து அனுபவங்களுக்குள்ளும் மனித உறவுகளின் வேறுபட்ட தன்மைகளுக்குள்ளும் புரண்டு எழுந்தவன். சூழலைச் சுவீகரித்துக்கொண்டவன். வெளியளாவியவன் பிக்காஸோ.

பிக்காஸோ பற்றிய அமெரிக்க மற்றும் சோவியத் அணுகுமுறைகள் பற்றிய ஆவணங்கள் தற்பொழுது தான் உலகுக்கு வெளிப்படையாகக் கிடைத்திருக்கின்றன, பிக்காஸோ எனும் கலைஞன் பற்றிய சமாதானப் போராளி பற்றிய அவனின் அரசியல் ஈடுபாடு பற்றிய அமெரிக்க சோவியத் உளவுத் துறைகளின் ரகசிய ஆவணங்கள் தற்பொழுது வெளியாகியிருக்கின்றன.

பொதுவாகக் கலைஞனின் அரசியல் தேர்வை அவனது வாழ்வு பற்றிய நேசமே தீர்மானிக்கிறது. அவனை நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை, சிலவேளை அன்பு கருதி அவன் எடுப்பார் கைப்பிள்ளை ஆகிவிடுவதும் உண்டு. உண்மையில் அதிகாரம் சார்ந்தவர்கள் கலைஞனை சந்தேகக் கண்கொண்டு தான் பார்க்கிறார்கள். பிக்காஸோ ஒரு சமூக விரோதி. மக்கள் எதிரி. அவ்வாறான தூற்றதலுக்கும் போற்றுதலுக்கும் ஆளான ஓவியன் பிக்காஸோ.

பிக்காஸோ 1944 ஆம் ஆண்டு பிரஞ்சுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். ஸ்டாலினுக்கு அடுத்து உலகின் பிரபலமான புகழ் வாய்ந்த கம்யூனிஸ்டாக அவர் திகழ்ந்தார். அதையடுத்து பிக்காஸோ பற்றி ஒற்றரிவதற்காக அமெரிக்க புலனாய்வுத்துறை எப்பிஐ புதிய கோப்பு ஒன்றைத் திறந்தது. கோப்பு எண் : 100 – 337396. 1944 இல் ஆரம்பிக்கப்பட்ட பிக்காஸோ மீதான இந்தக் கண்காணிப்பு 1973 இல் அவர் இறக்கும் வரை தொடர்ந்தது.

பிக்காஸோ பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் தனது முடிவை 1944 அக்டோபர் 4 ஆம் தேதி வெளியிட்டார். சுதந்திரமான பிரான்சுக்கான பாசிஸ்ட் எதிர்ப்பில் முன்னணியில் அதன் புகழின் உச்சியில் இருந்தது கம்யூனிஸ்ட் கட்சி. கிழக்கு மேற்கு ஐரோப்பா பிரிவினைகள் தெளிவாக தென்படத் தொடங்கியிருந்தாலும் ஸ்டாலினின் இரும்புத்திரை நடவடிக்கைகள் வெளிப்படையாக அப்போது தெரிவிந்திருக்கவில்லை.

பிக்காஸோவின் அரசியல் ஈடுபாடும் தேர்வும் யதேச்சையாகவோ உடனடியாகவோ தோன்றியது அல்ல. அராஜகவர்க்கத்துக்குச் சார்பான நாடோடி வாழ்வுப் பின்னணி கொண்டது அவரது இளமை நாட்கள். அவர் எப்பொழுதுமே கலைஞனுக்கு அரசியல் பொறுப்புணர்வு வேண்டும் எனும் நிலைபாடு உடையவர். 

1907 – 1906 வாக்கில் அவரது ‘நீலக்காலகட்டம்’ சார்ந்த ஓவியங்களில் வெளிப்பட்ட அவரது மனிதாபிமான உள்ளடக்கமே பின்னாளில் அரசியல் முதிர்ச்சியாக வெளிப்பட்டது. 1930ல் பிரஞ்சு இடதுசாரிக் கவிஞரான லூயி ஆரகானால் ‘லட்சாதிபதி ஓவியர்’ என விமர்சிக்கப்பட்டவர் பிக்காஸோ. அக்காலகட்டத்தில் கலைஞனுக்கு அரசியல் தேவையில்லை எனும் நிலைபாடு பிரான்ஸிலும் ஐரோப்பாவிலும் இருந்தது. இந்த நிலைப்பாட்டுக்கெதிரான கலகத்தை 1920 இல் ஆந்த்ரே பிரிட்டன், ஸ்ல்வடார் டாலி போன்ற ஸாரியலிஸ்ட்டுகள் தொடங்கி வைத்தார்கள். பிக்காஸோ அவர்கள் காலத்தின் உச்சமட்ட வெளிப்பாடாக கம்யூனிஸ்ட் அரசியலைத் தேர்ந்தார். 

பிக்காஸோவின் அரசியல் ஈடுபாட்டுக்கான இன்னொரு அடிப்படையான காரணம் அவர் தாய்நாடு ஸ்பெயினில் பாஸிஸத்திற்கு எதிராக நடைபெற்ற உள்நாட்டுக் கிளர்ச்சி. இடதுசாரிகள் மற்றும் கம்யூனிஸ்ட்களின் போராட்டம். பிக்காஸோ 1937 இல் தனது புகழ்வாய்ந்த ஓவியமான குவர்னிகாவை பாரிஸ் உலகக் கலைவிழாவில் ஸ்பானிஸ் கண்காட்சி மண்டபத்துக்காக வரைந்தார். உடனடியாக பிக்காஸோவின் பாஸிஸ்ட் எதிர்ப்புச் செய்தி உலகெங்கும் பரவியது. பிக்காஸோவின் பெருமையும் ஆளுமையும் எங்கும் எழுந்தது.

17 டிசம்பர் 1937 இல் அமெரிக்க ஓவியர்களின் கூட்டமைப்புக்கு ஒரு செய்தி அனுப்பினார் பிக்காஸோ : ‘மக்களின் ஆன்மீக மதிப்பீடுகளோடு ஒன்றி வாழும் கலைஞன் அந்த உன்னதமான மனித மதிப்பீடுகளுக்கு ஆபத்து வரும்போது இடைப்பட்ட சமரசநிலை என்று ஏதும் மேற்கொள்ள முடியாது’. பிக்காஸோவைப் பொறுத்த வரை பாஸிஸ்ட் எதிர்ப்பு போராட்டம் தான் அவரது அரசியல் தேர்வு. 

பிக்காஸோ யூதர் எனும் சந்தேகத்தின் பேரில் பிரெஞ்சு அரசாங்கத்தினால் துன்புறுத்தப்பட்டார். ஸ்பெயினில் நடைபெறும் சுதந்திரப் போராட்டத்திற்கு நிதி உதவி செய்கிறார் எனும் குற்றச்சாட்டின் பேரில் பிராங்கோவின் வேண்டுகோளின்படி பிரான்ஸில் இவரது ஓவியக் கண்காட்சி தடை செய்யப்பட்டது. அப்போது பாஸிஸ ஆதரவு பிரெஞ்சு ஓவியர்கள் கலைஞர்கள் பிராங்கோ மற்றும் ஜெர்மனியோடு சேர்ந்து வேலை செய்தார்கள். இதற்கு எதிராக கலைஞர்களின் எதிர்ப்பியக்கத் தேசிய முன்னணிக்குத் தலைமையேற்றார் பிக்காஸோ.

பிக்காஸோவின் அரசியல் நடவடிக்கைகள் நிறைந்த இக்கலகட்டம் பற்றிய குறிப்புகள் அமெரிக்க புலனாய்வுத் துறையின் கோப்புகளில் 1945, ஜனவரி 11ம் தேதி இவ்வாறு பதியப்பட்டது :

1. பிக்காஸோ அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பாஸிஸ்ட்டு எதிர்ப்பு அகதிகள் இணைப்புக் குழுவின் உறுப்பினர்.  

2. அவர் தன்னை இணைத்துக் கொண்ட ஸ்தாபனங்கள் பின்வருமாறு : ஸ்பானிஷ் ரிபப்ளிக்கன் உதவிக்குழு உறுப்பினர். ஸ்பெயின் நட்பு பிரெஞ்சு அறிவாளிகள் குழு உறுப்பினர். பன்னிருவர் பாதுகாப்புக்கான பிரெஞ்சுக் குழு உறுப்பினர். பாஸிஸ்ட் எதிர்ப்பு அகதிகள் குழு உறுப்பினர். பிரான்ஸில் வாழும் ஸ்பானிஷ் ரிபப்ளிக்கன் குழு உறுப்பினர். ஸ்பானிஷ் அறிவாளிகள் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர். உலக சமாதானத்துக்கான அறிவாளிகள் குழு உறுப்பினர். உலக சமாதானத்துக்கான போராளிகள் குழு உறுப்பினர்.

இக்கால கட்டத்தில் பிரெஞ்சு தேசிய நவீன ஓவியக் கலைக்கூடம் அலுவலக ரீதியில் திறக்கப்பட்டது. எதிர்ப்பியக்க ஓவியர்களின் நடவடிக்கைகளை முன்னின்று நடத்தினார் பிக்காஸோ. ஸ்பெயின் பாஸிஸ்ட் எதிர்ப்பு ஓவியங்களை இக்கால கட்டத்தில் தான் வரைந்தார். இந்த நாட்களில் உலகின் புகழ் வாய்ந்த கம்யூனிஸ்ட் அறிவாளிகளோடு சேர்ந்து செயல்பட்டார் பிக்காஸோ. விஞ்ஞானி பிரெடரிக் ஜொலியட் க்யூரி கவிஞர்கள் எழுத்தாளர்கள் அல்டஸ் ஹக்ஸி, போல் எலுயார்ட், லூயி ஆரகான் போன்ற மேதைகள் அவர்கள்.

1949 மே 1ம் தேதிய எப்பிஐ ஆவணக் குறிப்பு இவ்வாறு தெரிவிக்கிறது :

ஜொலியட் க்யூரி, லூயி அரகான் போன்றவர்களோடு பிக்காஸோ மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டார். ஊர்வலத்தில் ‘உலக சமாதானம் வாழ்க, பிரெஞ்சு இரத்தம் அமெரிக்க டாலர்களுக்கு விலைக்கு அல்ல’ போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதே சமயத்தில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு டிகால் அரசால் எதிர்ப்பு ஊர்வலமொன்று நடைபெற்றது. கம்யூனிஸ்ட்டுகளின் ஊர்வலத்தில் ஸ்டாலின், தோரஸ், பிக்காஸோ போன்றவர்கள் படங்கள் இருந்தன.

அரசியல் ரீதியில் சந்தேகிக்கப்பட்ட பிக்காஸோவின் நவீன ஓவியமும் விமர்சனத்துக்கு உள்ளானது. எவ்வாறாக பிக்காஸோவின் லட்சாதிபதி பணத்தகுதியும் யுத்தத்திற்குப் பின்னான அழிவு பற்றிய ஓவியங்களும் அசிங்கமான பெண் ஓவியங்களும் இணைந்து போக முடியும்? எவ்வாறாக யுத்தத்திற்குப் பின்னான அதன் பிரான்ஸ் வாழ்க்கை முறையும் அமெரிக்க சந்தைப் பொருளாதாரமும் இணைந்து போக முடியும்?’

இக்கேள்விகள் அமெரிக்கப் புலனாய்வுத் துறையினால் இன்னும் பலமாகக் கேட்கப்பட்டது. 1945 மார்ச் மாதத்தில், பிக்காஸோவை கண்காணித்த அமெரிக்க புலனாய்வாளர்களின் தீர்க்கம் சாதாரணமாக வெளிப்பட்டது : 

பிக்காஸோ வரைவது நவீன ஓவியம். பிக்காஸோ ஒரு கம்யூனிஸ்ட்டு, ஆகவே நவீன ஓவியமும் கம்யூனிஸ்ட் ஓவியம். ஆகவே அறிவுக்கு முரணான பிக்காஸோவின் ஓவிய உருவங்களும் கருத்துக்களும் தேச விரோதமானவை, கம்யூனிஸ்ட் அச்சுறுத்தலின் ஒரு அங்கம் அவரது ஓவியங்கள்.

செனட்டர் ஜொர்ஜ் டொன்டாரோ குறிப்புகளும் இதில் உள்ளிடப்பட்டது:

நவீன ஓவியம் என்று சொல்லப்படுகிற எல்லா இஸங்களையும் கொண்ட கலைமுயற்சிகள் அழிவு சார்ந்தவை. கீழானவை. கேவலமானவை. பிக்காஸோவும் அவர்களில் ஒருவர். பிக்காஸோ அந்த இஸங்களின் ஒரு தலைவர்.

முந்தாய்ப்பாக எழுதப்பட்ட கோப்புவரி இதுதான் :

மிக ரகசியமானது. 1940ல் ஹொலிவுட்டில் கம்யூனிஸ்ட் நடிகர்கள் கலைஞர்களுக்கு எதிரான விசாரணைகள் பீதியுடன் நடைபெற்றது. போல் ரொப்ஸன், சார்லி சாப்ளின், பெரிபோல் பிரோகம் போன்றவர்களெல்லாம் இதில் சம்பந்தப்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். பிக்காஸோவிற்கும் சார்லி சாப்ளினுக்கும் இடையில் நிகழந்த உரையாடல்கள் கடிதத்தொடர்புகள் போன்றவை இக்கால கட்டத்தில் உளவுத்துறையின் முக்கியப் பிரச்சினைகள் ஆயின. இக்கால கட்டத்தில் சோவியத் பாணி சோசலிஸ யதார்த்தவாதம் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியால் அதிகாரபூர்வ கலை வெளிப்பாட்டு வடிவமாகக் கையாளப்பட்டது.

லூயி அரகான் கம்யூனிஸ்ட் கட்சியின் கலைக் கொள்கைகளை வகுப்பவராயிருந்தார். கட்சியின் கலை வாராந்தரப் பத்திரிகைக்கு பொறுப்பாக இருந்தார் லூயி அரகான். இரட்டை அடுக்கு கலைக்கொள்கையைக் கையாண்டார் அவர். தொழிலாளர் கண்காட்சிகள் போன்றவற்றுக்கு சோசலிஸ யதார்த்தவாதம் சரியானது எனத் தீர்மானித்தார். அதே வேளை பிரெஞ்சுச் சிந்தனையாளர்கள் அறிவாளிகள் போன்றவர்க்கு நவீனத்துவம் சார்ந்த படைப்புகள் பேணப்பட வேண்டுமென்றார். போல் எலூவார்ட் ஜுன் லுகார்ட் பெர்னான்ட் லேகரின் படைப்புகள் போன்றவற்றோடு ஓவியர் மட்டிஸேயின் காகித வெட்டு ஓவியங்களையும் பிக்காஸோவின் ஓவியங்களையும் இதற்கு பயன்படுத்தினார். சோசலிஸ யதார்த்தவாதத்தை பிரதிநிதித்துவக் கலையாக அங்கீகரித்த அதே நேரம், நவீனத்துவக் கலைகளிலும் ஈடுபாடு கொண்டனர் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட்டுகள். இது பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சிக் கலைஞர்களின் விஷேட தன்மையாகும்.

காமின்டெர்ன் பிக்காஸோவின் புகழை உடனடியாக அங்க்கரீத்தது. 1948ல் போலந்தில் நடைபெற்ற முதல் உலக சமாதானக் காங்கிரஸின் நட்சத்திரமாக உயர்ந்தார் பிக்காஸோ. வோர்ஸோ, வார்கலா, ஓஸ்க்விட்ச் போன்ற இடங்களுக்கு விஜயம் செய்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் 1946 ஆம் ஆண்டு சோவியத் யூனியனில் ஸாதனோவிச் கலைக் கொள்கை கோலோச்சியது. 1947ம் ஆண்டு ஓகஸ்ட் பிராவ்தா பத்திரிகையில் சோசலிஸ யதார்த்தக் கலைக்கொள்கையின் பிரதான ஓவியர் அலெக்ஸாண்டர் குராஸிமோவ் ஒரு கட்டுரை எழுதினார் :

சோசலிஸ யதார்த்த சோவியத் ஓவியம் – கலை ஏற்கனவே அடையாளமிக்க வளர்ச்சிக் கட்டத்தை எய்திவிட்டது. இந்நேரத்தில் முதலாளித்துவ பிற்போக்குவாத ஓவியத்தைக் கலையை அனுதாபம் கொண்டு பார்ப்பதென்பது நினைத்துக் பார்க்க இயலாதது. வடிவவாதக் குழுவினரை நாம் ஒப்புக் கொள்ளத்தக்கதாயில்லை. இதற்கு பதில் கிடைத்தது. 1949ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற இரண்டாம் உலக சமாதான காங்கிரசுக்கான சின்னமாக 1942 ஆம் ஆண்டு பிக்காஸோ வரைந்த புறா சின்னம் தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரெஞ்சுக் கவிஞர் லூயி ஆரகான் இதைத் தேர்ந்தெடுத்தார். இதைப் பற்றிய குறிப்புகள் அமெரிக்க உளவுத்துறையின் கோப்பில் (1950) உடனடியாக பதியப்பட்டது. புறா பற்றி ஆராய்ச்சி செய்யப்பட்டது.

ஒரு கியூப பிரஜையால் (புரட்சிக்கு முந்திய கியூபா) தரப்பட்ட புறா பற்றிய குறிப்பு நன்றியுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பிக்காஸோவினால் வரையப்பட்ட இப்புறா, ரஷ்ய வகைப்பட்ட புறாவிலிருந்து இனவிருத்தி செய்யப்பட்ட புறாவாகும்.

உலக சமாதானத்துக்கான இயக்கம் முழு வீச்சுடன் செயல்பட்டது. 60 கோடி கையெழுத்துக்கள் பெறப்பட்டன. பிரான்ஸில் மட்டும் 1 கோடி 60 லட்சம் கையெழுத்துக்கள். அணு ஆயுதங்கள் தடைசெய்யப்பட வேண்டும் என உலகெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 1950 நவம்பரில் இங்கிலாந்தின் செப்பீல்ட் நகரில் நடைபெறுவதாயிருந்த உலக சமாதான மாநாடு கிளமன்ட் அட்லியின் தொழிற்கட்சி அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்டது,

பிக்காஸோவுக்கு அவரின் புறா படச்சுவரொட்டிக்காக லெனின் விருது வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற சிலியின் மகாகவிஞன் பாப்லோ நெருதா இந்த சம்பவத்தை இப்படி வர்ணிக்கிறான் :

பிக்காஸோவின் புறா உலகின் மீது பறக்கிறது, தனது விஷ அம்புகளால் அமெரிக்கா இதைத் துளைக்க நினைக்கிறது. யூகோஸ்லாவிய கிரீஸ் பாஸிஸ்ட்டுகள் தம் ரத்தக் கரைபடிந்த கைகளால் கொல்ல நினைக்கிறார்கள். கொலைகாரன் மக்கார்த்தர் வீரஞ்செறிந்த கொரிய மக்கள் மீது நேபாம் குண்டுகள் போடுகிறான். கொலம்பிய சிலி கொடுங்கோல் ஆட்சியாளர்கள் புறாவின் நுழைவைத் தடுக்கிறார்கள். அனைத்தும் நடக்காது. பிக்காஸோவின் புறா உலகின் மீது பறக்கிறது. ஒளிபொருந்தி வெள்ளை நிறத்துடன் தாய்மார்களுக்கு இனிய வார்த்தைகளையும் நம்பிக்கையையும் கொண்டு தருகிறது. தனது சிறகடிக்கும் இறகுகளால் மக்களுக்கு எழுச்சியைத் தருகிறது. தாம் மக்களின் மைந்தர் என நினைவூட்டுகிறது. தமது சாவுக்குச் செல்ல நாம் விரும்பவில்லை என்றும் செய்தியைத் தருகிறது. புறா பிறந்தபோது புன்னகைத்த எதிரிகள் இப்போது அதை பயத்துடன் பார்க்கிறார்கள். அவர்கள் செப்பீல்ட் நகரத்தில் டாங்கிகளின் அரணை உருவாக்குகிறார்கள். 

உடனடியாக அமெரிக்க அரசாங்கம் செயலில் இறங்கியது. சமாதானம் சுதந்திரம் எனும் பெயரில் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களுக்கு நிதியளித்து ஒன்று திரட்டியது. புறாவை டாங்கி வடிவத்தில் வரைந்து இரண்டு லட்சம் போஸ்டர்கள் உலகெங்கும் ஒட்டப்பட்டது. புறா இனிமேல் நிர்மலானது இல்லை.

பிக்காஸோ கட்சி வேலைகளைத் தொடர்ந்து செய்தார். பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் இருபதாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் பொருட்டு தனது அன்பு மனைவி பிராங்காய்ஸ் ஜில்லட்டின் தலையைச் சுற்றிய புறாவின் சிறகுகள் ஓவியத்தை வரைந்தார் பிக்காஸோ. இன்னும் அதிக அளவில் யதார்த்த பாணிக்கு அவர் திரும்ப வேண்டும் என கட்சி வட்டாரத்தில் பேச்சு நிலவியது. கொரியாவில் படுகொலை அவர்களின நம்பிக்கையை பொய்ப்பித்தது. கோயா, பேகர்ஸ், மேனட் போன்றவர்கள் மரபொட்டிய ஓவியம் அது. நிர்வாணக் குழந்தைகள் சித்தரிக்கப்பட்டிருந்தார்கள். அரசியல் முக்கியத்துவம் சொல்லப்படவில்லை என அந்த ஓவியம் விமர்சிக்கப்பட்டது. பிக்காஸோ இவ்விமர்சனத்துக்கு கைமாறாக வேறொரு ஓவியம் தீட்டினார். கொரியா பற்றிய யுத்தமும் சமாதானமும் எனும் ஓவியம் அது. சாவை நெருப்பின் பின்னணியில் கறுப்பு யுத்த ரத்தத்துடன் காண்பிக்கும் ஓவியம் அது. அமெரிக்க எதிர்ப்பு ஓவியம்.

1953ஆம் ஆண்டு மார்ச் 5ம் நாள் ஸ்டாலின் மரணமுற்றார். மார்ச் 12ம் நாளிட்ட பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கலைப் பத்திரிகை ‘பிக்காஸோவின் ஸ்டாலின்’ படத்தை முகப்பாகத் தாங்கி நினைவுமலர் ஒன்றை வெளியிட்டது. அந்த ஓவியம் ‘ஸ்டாலினின் கம்பீரத்தைக் காண்பிக்காத படம்‘ என்று விமர்சிக்கப்பட்டது, அது ஒரு இளைய ஜொர்ஜியனின் புன்னகை பூக்கும் படம். அது சோசலிச யதார்த்தம் சார்ந்த அஞ்சலி ஓவியம் அல்ல என்று விமர்சிக்கப்பட்டது. அதே வருடம் மே மாதம் கட்சியால் ஒழுங்கு செய்யப்பட்ட ‘மார்க்ஸிலிருந்து ஸ்டாலின் வரை’ எனும் ஓவியக் கண்காட்சிக்கு அப்படம் தெரிவு செய்யப்படாமல் நிராகரிக்கப்பட்டது. ஸ்டாலின் பெருமையை அது கேவலப்படுத்தி விட்டது எனச் சொல்லப்பட்டது.

பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் ஆன்ட்ரே போர்கின் இந்த ஓவியத்தை ‘வடிவவாத அழகியலின் தொடரும் விளையாட்டு’ என விமர்சித்தார். இந்தச் செய்தி உடனடியாக பாரிஸ் அமெரிக்க எம்பஸியிலிருந்த அரசியல் ஆலோசகர் வில்லியம் கிரான் போர்டு மூலம் உளவத்துறை கோப்புக்குப் பறந்தது, இக்காலத்தில் அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் உளவாளிகள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு ஜுலியல் மற்றும் ஈதல் ரோஸிபர்க் போன்றோர் அமெரிக்க அரசால் கொல்லப்பட்டார்கள். இவர்களின் விடுதலைக்காக நிறைய ஓவியங்கள் வரைந்து பிரச்சாரம் செய்த பிக்காஸோவின் நடவடிக்கைகளும் கோப்புக்குச் சென்றன.

ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு ஐரோப்பிய கம்யூனிஸ்ட்டுக் கட்சிகள் ஸ்திரமில்லாத எதிர்காலத்தை நோக்கின. பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி பிக்காஸோவுடன் மறுபரிசீலணைக்கு வந்தது. அவரது யுத்தமும் சமாதானமும் ஓவியம் ரோமிலும் இத்தாலியிலும் இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சியால் காட்சிக்கு வைக்கப்பட்டது. பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி தனது இரட்டை அடுக்கு இலக்கியக் கொள்கையை மறுபடி எடுத்தாண்டது, 1956ம் ஆண்டு பிக்காஸோவின் 75-ம் ஆண்டு பிறந்த நாள் மாஸ்கோவில் அவர் பற்றிய ஓவியக் கண்காட்சியின் திறப்பு விழாவோடு கொண்டாடப்பட்டது. இது நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஹங்கேரியின் மீது சோவியத் படையெடுப்பு மூண்டது.

பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் மத்தியக் குழுவுக்கு மிகப் புகழ்வாய்ந்த பத்து அறிவாளிகளால் ஒரு எதிர்ப்பு அறிக்கை கையெழுத்திட்டு அனுப்பி வைக்கப்பட்டது. பிக்காஸோ அதில் முன்னணியில் நின்றார்.

1963ல் பிக்காஸோ விண்ணப்பித்த குடியேற்றதாரர் அல்லாத விசா கோரிக்கை அமெரிக்காவினால் நிராகரிக்கப்பட்டது. 1971 இல் இளைய தலைமுறை அமெரிக்க இடதுசாரி அறிவு ஜீவிகளோடு பிக்காஸோவின் பெயர் அடையாளம் காணப்பட்டது, அஞ்சலா டேவிஸ் மீதான அவதூறு வழக்கை எதிர்த்து மாக்ஸ் ஏர்னஸ்ட, மிஷேல் பூக்கோ, அலன் ரோப்கில்லட் போன்றவர்களோடு சேர்ந்து நின்றார் பிக்காஸேர். 1973 ஏப்ரல் 8-ம் நாள் பிக்காஸோ மரணமெய்தினார். அவரை நேசித்த பலர் தற்கொலை செய்துகொண்டார்கள். அவரது பிரிவைத் தாங்கமாட்டாது சித்த சுவாதீனமுற்றார் அவரது மனைவியருள் ஒருவர். அவரது கம்யூனிஸ ஈடுபாடு அடிப்படையில் மனித நேயம் சார்ந்தது. சுயாதீனமான அவரது வாழ்வும் அவரது படைப்பும் மரணத்துக்கு எதிரானது.

நவீன ஓவியர்கள் பற்றிய ஸ்டாலின் விமர்சனம் பிரசித்தமானது :‘நவீன ஓவியர்கள் சமபாலுறவாளர்கள்’ என்றார் அவர். சமப்பாலுறவாளர்கள் பற்றி மனிதாபிமான அடிப்படையில் இன்று பேசுகிறார் காஸ்ட்ரோ. மார்க்ஸியமும் மனித விடுதலை குறித்த அதன் புரிதலும் வெகுதூரம் வந்து விட்டது. இன்னும் அது தொடர்ந்து தேடிச் செல்லும்.

1944 ம் ஆண்டு அக்டோபர் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘லா ஹியுமனிட்டா’ நாளிதழ் தனது முதல் பக்கத்தில் பாப்லோ பிக்காஸோ பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரான செய்தியை பெருமிதத்தோடு வெளியிட்டது. அந்தப் பெருமிதம் இன்றளவும் அர்த்தமுள்ளது. அவரைத் தேடி வந்த எண்ணற்ற அமெரிக்கப் பத்திரிக்கையாளர்களுக்கு தான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்ததற்கான நியாயம் பற்றி திரும்பத் திரும்ப அவர் சொல்வது இதுதான்:

கம்யூனிஸ்ட் கட்சியில் நான் உறுப்பினர் ஆனதென்பது எனது வாழ்வின் எனது படைப்பின் தர்க்கபூர்வமான முன்னேற்றம். நான் இதைச் சொல்ல பெருமிதப்படுகிறேன். நான் ஓவியம் வரைவதை அலங்காரத்துக்கான கலை என ஒருபோதும் நினைத்ததில்லை – வரைதல் மற்றும் நிறங்களின் மூலம் – ஏனெனில் இவை எனது ஆயுதங்கள். இந்த உலகம் மற்றும் மனுக்குல அறிவை முன்னோக்கி நகர்த்த விரும்புகிறேன். இந்த அறிவு ஒவ்வொரு நாளும் நம்மைச் சிறிதேனும் விடுதலைக்கு இட்டுச் செல்கிறது. நான் எனது பிரத்தியேக வழியில் – மிகத்துல்லியமானதும் மிகப் பிரமாதமானதும், இயல்பாகவே மிகுந்த அழகு வாய்ந்தெனத்தக்கதாகவும், மிகச்சிறந்த கலைஞர்கள் அறிந்தபடி சொல்ல விரும்புகிறேன். ஒரு நிஜமான புரட்சியாளன் எனும் அளவில் எப்போதும் எனது ஓவியங்களில் பிரக்ஞையுடன் நான் போராடுகிறேன். இப்போது நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அது மட்டும் போதாது. இந்தக் கொடூரமான அடக்குமுறைக் காலம் எனக்குக் காண்பித்திருக்கிறது, எனது கலை மூலம் மட்டும் போராடுவது போதாதது. எனது முழுமையையும் செலுத்திப் போராட வேண்டும். எந்தவிதமான கொஞ்ச நஞ்சமான தயக்கமும் கூட இல்லாமல் நான் கம்யூனிஸ்ட்டுக் கட்சியை அணுகினேன். ஏனெனில் எப்போதுமே நான் அதன் ஒரு அங்கமாக இருந்து வந்திருக்கிறேன். அரகான், எலுவார்ட், காஸர், போகரன் போன்ற எனது எல்லா நண்பர்களும் இதை நன்கு அறிவர். நான் அதிகார பூர்வமாக உறுப்பினராக இல்லாமல் இருந்தேனென்றால் அது ஒருவகை அறியாமையாலேயே இருக்கும். ஏனெனில் எனது உணர்வார்ந்த இணைவு, எனது படைப்பு போன்றவையே போதுமானது என நினைத்ததால் அப்படி இருக்கும். எப்படியாகிலும் அது ஏற்கனவே என் கட்சி.

உலகைப் புரிந்து கொள்வதிலும் அதற்காக உழைப்பதிலும் கஷ்டப்படுகிறவர்கள் கம்யூனிஸ்டுகள் அல்லவா? இன்றைய மற்றும் நாளைய மக்களை தெளிவுள்ளவர்களாகவும், சுதந்திரமாகவும், சந்தோசமானவர்களாகவும் ஆக்க கடினமாக உழைத்தவர்கள் அவர்கள் அல்லவா? பிரான்ஸிலும். சோவியத்யூனியனிலும் ஏன், எனது சொந்த ஸ்பெயினிலும் வீரஞ்செறிந்தவர்கள் அவர்கள் அல்லவா? எப்படி நான் தயங்க முடியும்? சேர்ந்திருப்பதில் ஏற்படும் பயத்தினாலா தயங்க முடியும்? எப்போதும் நான் முழு விடுதலை பெற்றவனாக உணர்ந்ததேயில்லை. அதற்கு மாறாக நான் மேலும் முழுமையாக உணர்ந்திருக்கிறேன். அந்த அளவில் நான் ஒரு நாட்டைத் தேடிக் கொண்டேயிருந்தேன். நான் எப்போதுமே ஒரு அகதி. நாடு கடந்து வாழ்பவன். இப்போது நான் அப்படி இல்லை. எனது சொந்த தேசம் ஸ்பெயின் என்னை வரவேற்கக் காத்திருக்கும் இவ்வேளை, பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சி எனக்காக தன் கைகளை விரித்து அழைக்கிறது. நான் மதிக்கிற எல்லாவற்றையும் இக்கட்சியில் நான் கண்டேன்.

மகத்தான சிந்தனையாளர்கள் மாபெரும் கவிஞர்கள் முகங்கள் அற்புதங்கள் ஓகஸ்ட் நாட்களில் எழுந்த நான் பார்த்த இந்த பாரிஸக்கார எழுச்சியாளர்கள் மறுபடியும் எனது சகோதரர்களுக்கு மத்தியில் நான் கலைஞர்களை எவரென்று நினைக்கிறீர்கள்? அறிவிலிகள் என நினைத்தீர்களா? ஓவியர்களாய் இருப்பதால் கண்கள் கொண்டவர்கள், இசைஞர்களாய் இருப்பதால் செவிகள் கொண்டவர்கள், கவிஞர்களாய் இருப்பதால் இதயம் முழுதும் லயம் கொண்டவர்கள், குத்துச் சண்டைக்காரர்களாய் இருப்பதால் தசை கொண்டவர்கள் என நினைத்தீர்களா ?

நேர்மாறானது அர்த்தம். அவர்களும் அரசியல் ஜீவிகள் தான். இதயம் விகசித்து மனம் கொதித்து உலகின் இனிமையான நிகழ்வுகளுக்கு மனம் தந்து எப்போதும் உத்வேகத்துடன் இருப்பவர்கள், தமது சொந்த சித்திரங்களுக்கு ஏற்ப மாறிக் கொண்டிருப்பவர்கள். எவ்வாறு அவர்கள் பிற விஷயங்களில் ஈடுபாடில்லாமல் இருக்கமுடியும்? எந்தத் தந்தக்கோபுர வித்தியாசத்தினால். உங்களுக்கு கிடைத்திருக்கும் வாழ்வின் அற்புதங்களில் இருந்து அவர்கள் விலகிப் போயிருக்க முடியும்? இல்லை. ஓவியம் மாளிகைளில் சுவர்களை அழகுபடுத்தும் அலங்காரங்களாகச் செய்யப்படுவதில்லை, அது எதிரிக்கு எதிரான யுத்தத்தில் பாதுகாத்தும் எதிர்த்தும் தாக்கும் ஆயுதமும் ஆகும். (24 மார்ச் 1945).

பிக்காஸோ அளவுக்கு ஒழுக்கவாதிகளையும் ‘பொலிடிகலி கரக்ட்’ அரசியல்காரர்களையும் மதவாதிகளையும் இன்றளவும் உலுக்கியெடுத்துக் கொண்டிருக்கிற கலைஞர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டில் பிறிதொருவில்லை. அவர் பற்றி இத்தகையவர்களால் அதிகமான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. 1988 ஆம் ஆண்டு அனா என்கிற கிறித்தவப் பெண்நிலைவாத ஒழுக்கவாதி ஒருவரால் அவர் பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தகம் தான் பிக்காஸோ பற்றி நான் படித்த புத்தகங்களில் மிக மோசமான புத்தகம் ‘பிக்காஸோ : ஆக்குபவனும் அழிப்பவனும்’(Picasso : Creator and Destroyer:1988) என்பதுதான் அப்புத்தகம். அப்புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட மிக மோசமான ஒரு திரைப்படம்தான் மர்ச்சன்ட் ஐவரியின் திரைப்படமான ‘ஸர்வைவிங் பிக்காஸோ’(Surviving Picasso : 1996). புத்தகம் சொல்கிற பல சம்பவங்களைக் கூட திரித்துச் சொல்கிறது திரைப்படம். கலை, மனிதன், கலைஞன், வரலாறு, மரபுகள், நிரந்தரமான கேள்விகள் என்று பல்தரப்பட்ட எந்தக் கேள்விகளையும் கேட்டுக் கொள்ளாமல் மிகுந்த ஒற்றைப் பட்டைத்தன்மையான காட்டுமிராண்டித் தனமான அணுகுமுறையை இப்படம் முன்வைக்கிறது.

பிக்காஸோ ஒரு வன்முறையாளன் பெண்களை சித்திரவதைக்கு உள்ளாக்குபவன் பொய்யன் பொறுப்பற்றவன் சுயநலக்காரன் அரசியல் தெரியாதவன் அவன் படைப்பூக்கமாக இருந்தவர்கள் பெண்களே என அடுக்கிக் கொண்டே போகிறது இப்படம்.

பிக்காஸோ பாசிசத்துக்கு ஆதரவாக இருந்தவனும் கூட என்கிற தோற்றத்தை இப்படம் உருவாக்குகிறது. ஒரு கலைஞனைப் பற்றி வந்த சினிமாக்களில் இந்தப் படத்தைப் போல் எனக்கு ஆத்திரமூட்டிய படம் வேறொன்றுமில்லை. புத்தகம் கத்தோலிக்க அறிவியல் ஒழுக்க அடிப்படையில் சாத்தான் – தேவன் – இருட்டு – ஒளி – வெறுமை – ஆன்மா என்ற இருதுருவ அடிப்படையில் பிக்காஸோவின் வாழ்வைப் பார்க்கிறது. மதவாதிகளுக்கு ஏன் பிக்காஸோவின் மீது இவ்வளவு ஆத்திரம்?

பிக்காஸோ மிகத்தீவிரமான நாத்திகன். கடைசி வரை கடவுளோடு சமரசம் செய்யாதவன். நவீனத்துவ நாகரிகம் சமூகம் என்பது பற்றி நம்பிக்கை கொள்ளாத அவநம்பிக்கைவாதி. எல்லாமும் அழிப்பவைதான் பயங்கரமானவைதான் என்று எதிர்த்து நின்ற உன்னதமான பழைய காட்டுமிராண்டிக்கால மனிதன். ஆதி மனிதன். சாவு அவனை வாழ்வு முழுக்க உலுக்கிய பயம். சாவை எதிர்கொள்ள அவன் விரும்பவில்லை. அதனை மறுதலித்து அதனை வென்று வாழ அவன் முயன்றான். அப்போலைனர் என்கிற போர்னோகிராபி எழுத்தாளன் கவிஞன் பிக்காஸோவின் நண்பன். புருலு எனும் கறுப்புச் சிற்பி அவனது நண்பன். டீ சேடின் பாலியல் வன்முறை சார் புத்தகம் பிக்காஸோவுக்குப் பிடிக்கும்.

அவரது மனைவி இவாவின் சாவு பிக்காஸோவை திடுக்கிடச் செய்தது. அவர் தனது தாயின் மரணச்சடங்குக்கு ஸ்பெயினுக்குப் போகவில்லை,

பாசிஸம் தொழிற்துறை நாகரிகம் மதிப்பீடுகளின் வீழ்ச்சி ஒழுக்கவாதத்தின் போலித்தனம் போன்றவற்றின் இடையில் தான் அவன் வாழ்ந்தான். தன்னைச் சுற்றிலுமிருந்த எல்லாமுமே அவன் படைப்பியக்க ஆதாரங்கள் தான். பெண்ணின் குறி, மார்பு, கர்ப்பவயிறு, களிமண், மரங்கள், குழந்தைகள், விளையாட்டுச்சாமான், பழைய இரும்பு, அட்டைகள், உலோகக் கம்பிகள், ஆணிகள், சணல்சாக்குகள், பலகைகள், காகிதப்பூக்கள் என அனைத்துமே அவனுக்கு படைப்பு ஆதாரங்கள்.

சாவுக்கு எதிரானவன் அவன். பிக்காஸோவுக்குக் கலை வேறு வாழ்வு வேறு அல்ல. தனி வாழ்வு புறஉலக வாழ்வென்று அவனுக்குப் பிரிவுகள் இல்லை. குடும்பம், ஓழுக்கம், கடவுள், விமோசனம், ஓளி என்று வாழ்வைப் புரிந்து கொள்கிறவர்களுக்கு பிக்காஸோவைப் புரிந்து கொள்ள முடியாது. பிக்காஸோ இரண்டு நூற்றாண்டுகளின் சாரமாக வாழ்ந்த கலைஞன். வன்முறை பாலுறவு என்கிற இரு மிகப்பெரிய நெருக்கடிகளைக் கடந்து போக முயன்றவன்.

அவன் குழந்தைகளை நேசித்தவன். பிராணிகளை நேசித்தவன். புறப்பொருள்களை நேசித்தவன். காளைச்சண்டை மாதிரித்தான் மனிதரோடான அவனது உறவு. நியதிகள், ஒப்புக்கொள்ளப்பட்ட அழகு மதிப்பீடுகள் போன்றவற்றைச் சிதைத்த பிசாசு அவன். அதியதார்த்தவாதி. முப்பரிமாணக்காரன். அராஜகவாதி. அழிவுக்கு எதிரானவன். அழிவுக்குத் துணை போகும் அனைத்தையும் வன்மையாக அழிக்கத் துணிந்தவன். அவனது நாசகார மனம் தான் அவனது சிருஷ்டி மனத்தின் ஆதாரம்.

ஸர்வைவிங் பிக்காஸோ படம் 1941ம் ஆண்டு ஜெர்மன் படைகள் பாரிஸைக் கைப்பற்றுவதுடன் தொடங்குகிறது. 1953 ஆம் ஆண்டு பிக்காஸோவை கௌரவிக்கும் பொருட்டு நடைபெறும் காளைச் சண்டையை ஆரம்பித்து வைக்க பிரான்காய்ஸ் ஜில்லெட் குதிரை மீது ஆரோகணித்து வரும் காட்சியுடன் படம் முடிவு பெறுகிறது. இவற்றுக்கு இடையிலான 12 வருடங்களிலான நிகழ்ச்சிகளில் தான் படம் கட்டமைக்கப்படுகிறது. படத்தின் கதை பிரான்காய்ஸ் ஜில்லெட் பார்வையில் சொல்லப்படுகிறது. ‘ஆக்குபவனும் அழிப்பவனும்’ புத்தகம் பெரும்பாலும் பிரான்காய்ஸ் ஜில்லட்டின் ’பிக்காஸோவுடன் எனது வாழ்வு’(My Life With Picasso:1989) புத்தகத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டிருக்கிறது. படத்தில் பெர்னான்டோ ஆலிவர், இவா, ஸாரா, ஓல்கா போன்றோருடனான பிக்காஸோவின் வாழ்வு இடம் பெறவில்லை. நஸ் எலுவாருடனான உறவும் காண்பிக்கப்படவில்லை. பிக்காஸோவின் நெருங்கிய வாழ்நாள் முழுவதிலுமான நண்பனாயிருந்த கவி பால் எலுவார்ட் உடனான நட்பு இல்லை. மட்டீஸ{டன் ஒரு சந்திப்பு மட்டுமே பிக்காஸோவுக்கு உண்டு. கம்யூனிஸ்ட்டு கட்சி உறவு கூட படத்தில் அவரைக் கேவலப்படுத்தவே சொல்லபட்டிருக்கிறது.

1953 முதல் 1973 ஏப்ரல் 8 அவர் இறக்கும் வரையிலுமான 20 ஆண்டுகள் படத்தில் இல்லை. ஆக 91 ஆண்டுகள் படைப்பாற்றலுடன் வாழ்ந்த ஒரு மனிதனைப் பற்றிய வரலாறு 10 ஆண்டுகளே அவருடன் வாழ்ந்த ஒரு கத்தோலிக்க அறவியல் பெண்ணின் பார்வையில் சொல்லப்படுகிறது. படத்தில் சிற்சில பாத்திரங்கள் சிற்சில காட்சிகளில் பிக்காஸோவின் கோணல் புத்தியைக் காட்டிவிட்டுப் போவதற்காக வருகிறார்கள். மரியா தெரஸா, டோரா மார் இருவரும் குடுமிப்பிடி சண்டைபோட வருகிறார்கள். ஓல்கா பைத்தியமாகி பிக்காஸோ கைவிட்டவள் என்று காட்ட வருகிறாள். தான் குடிகாரப் பொறுக்கி என்று காட்ட மகன் பால்வா வருகிறான். பிக்காஸோவில் வஞ்சிக்கப்பட்டவன் என்று காட்ட அவர் நண்பர் வருகிறார். பிக்காஸோ காசுப்பித்துப் பிடித்தவன் எனக் காட்ட டிரைவர் மார்சல் வருகிறார். ஆக மொத்தம் இந்தப் படத்தில் ஆளுமையுள்ள ஒரே ஒரு நபர் பிரான்காய்ஸ் ஜில்லெட்தான், பிக்காஸோவுக்கு 62 வயதிருக்கும் போது 40 வயது குறைச்சலாகி 22 வயதாகியிருக்கும்போது அவரோடு வாழ முடிவெடுத்த ஜில்லெட.

ஒல்கா, மரியா தெரஸா, டோரா மார் என தனக்கு முன்பு மூன்றுபேர் உயிரோடிருக்கையில் உயர்ந்த நோக்கங்களுக்காக பிக்காஸாவோடு வாழ நேர்ந்த ஜில்லட். இவருடைய பார்வையில் தான் கதை சொல்லப்படுகிறது. இவர் பிக்காஸாவோடு வாழ்ந்த பின்னான தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார்: ‘தனது ஆன்மா குறித்த படிப்பில் ஒளி இன்மைதான் இருட்டு’ எனப் படித்திருக்கிறார். ‘தேவன் இல்லாமை என்பது சாத்தானின் இருப்புதான்’. இவருக்கு பிக்காஸோவின் கம்யூனிஸ்ட் கட்சி உறவும் பிடிப்பதில்லை. காரணம் அவர் பாசிசத்தை எதிர்த்து சமாதானத்துக்காக ஊர் சுற்ற, தான் பிள்ளைகளை வளர்க்க நேர்ந்தது தான். இதற்காக பிக்காஸோவை இவர் கன்னத்தில் அறையவும் செய்கிறார்.

பிக்காஸோ தன் காலத்தில் படைத்தவை 50,000 படைப்புகள். 1,885 ஓவியங்கள் 1,228 சிற்பங்கள் 2,880 களிமண் படைப்புகள் 18,095 என்கிராவிங்ஸ் 6,112 லித்தோகிராப்கள் 7,089 வரைபடங்கள் இதுவன்றி 149 நோட்டுப் புத்தகங்களில் 4,659 வரைபடங்களும் ஸ்கெட்ச்சுகளும். அதனோடு 8 திரைச்சீலைகள்.

ஒல்காவுக்கும் பாலாவுக்கும் தெரஸாவுக்கும் மாதா மாதம் அவர் பணம் அனுப்பினார். அவரது கலை வாழ்வைப் புரிந்து கொள்ளாத சாதாரண பெண் வாழ்வுக்கு ஏங்கியவர்கள் அவருக்குப் பிரச்சினையாய் இருந்தது வியப்புக்குரியதல்ல. குழந்தைகள் பலோமா, மாயா, கிளாப் போன்றோர் மீது தீராத நேசம் கொண்டிருந்தார் பிக்காஸோ. ஜில்லெட் வழக்குமன்றம் போன பிறகு அங்கு நீதி மன்றம் தான் பேசுமேயொழிய பிக்காஸோ அல்ல. அவரது கடைசி காலத்தில் அவரை மணந்த ஜாக்குலின் எல்லோருக்குமே பிரச்சினையாக இருந்தார்.

பிக்காஸோ இறந்த பிறகு அவரது பேரன் பாப்லிட்டோ பொட்டாசியம் குளோரைடு அருந்தி மரணமுற்றார். மரிய தெரஸா ஜாக்குவின் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். அவரது மகன் பாவ்லா போதை மருந்தினாலும் குடியினாலும் மரணமுற்றான். பிக்காஸோவின் சொத்துக்கள் எல்லோருக்குமே முறைப்படி பிரித்துக் கொடுக்கப்பட்டது.

பிக்காஸோ உயிரோடிருந்த வரையிலும் எவருக்கும் தன் பங்கை மறுக்கவில்லை. அதே வேளை தன் படைப்பாற்றலை வெறும் காசுக்காக தன்னையே கேவலப்படுத்தும் நபர்களுக்காக தரத் தயாராயில்லை. ஆகவே அத்தகைய நெருக்கலின் போது அவர் படைப்பில் ஈடுபடாது சோம்பியே இருந்தார்.

பிக்காஸோவின் அரசியல் உரைகளை கவிஞர் பால் எலுவார்ட் தான் எழுதிக் கொடுத்தார் என்று குறிப்பிடுகிறார் அனா. பிக்காஸோவின் ‘குவர்னிக்கா’வுக்கான தத்துவ அடிப்படையை டோரா மார்தான் கொடுத்தார் என்கிறார் அனா. இதுவெல்லாம் பேத்தல். பிக்காஸோ எப்போதும் தன்னோடு உறவு கொண்டவர்களின் படைப்பாற்றலை மட்டுப்படுத்தியவரோ மறைத்து நின்றவரோ அல்ல. ஜில்லெட்டை அவளது பாணியை உருவாக்கிக் கொள்ள வலியுறுத்தியவர் அவர். டோரா மாரின் புகைப்படக் கலை ஆர்வத்தை வளர்த்து கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தவர் அவர். கிளாடுக்கும் பலோமாவுக்கு மாயாவுக்கு ஓவியத்தில் ஆர்வமூட்டியவர் அவர்.

குவர்னிக்காவில் வரும் எருது, குதிரைகள், சிதைந்த உருவங்கள் அவரது அனைத்துக் காலகட்டப் படைப்புகளிலும் தொடர்ந்து வருபவை தான். பிக்காஸோ காட்டுமிராண்டி கால நம்பிக்கைகளும் பயமும் உள்ளவர் என்கிறார் அனா. இது ஆப்பிரிக்கக் கலையை காட்டுமிராண்டிக் கலை எனப் பார்க்கும் ஐரோப்பிய உன்னதக் கலைப்பார்வையிலிருந்து வருகிறது. பிக்காஸோவின் கியூபிசத்தில் பிராக்கினதும் ஆப்பிரிக்க சிற்பங்கள் ஓவியங்களின் பாதிப்பும் வெளிப்படையானது.

அவரே சொல்கிறபடி ‘எனக்கு நிகழ்காலம் சார்ந்த அனைத்துமே அழிவுக்குரியதாகவும் பயமூட்டுவதாகவும் தோன்றுகிறது’.

மனோவியலாளர்கள் அதுவும் மத ரீதியிலான அறவியலுக்கு ஆட்பட்ட மனோவியலாளர்கள் கலைஞனை ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது. அனா அத்தகைய மனோவியலாளர்கள் ‘பிக்காஸோ அழிப்பதற்காக ஆக்குகிற ஆசையுள்ள மனிதர்‘ என்று சொல்வதை எடுத்துக் காட்டுகிறார். மனோவியல் குறித்த சர்ச்சைகளில் இன்று மிகவும் மதிக்கப் பெறுகிற ழாக் லக்கான் பிக்காஸோ ஜில்லட்டின் இருவரினதும் மிக நெருங்கிய நண்பணாகவும் அவர்களது உடல் நலன் பற்றி அடிக்கடி ஆலோசனை சொல்கிறவராகவும் இருந்தார். அவர் பிக்காஸோ பற்றி இவ்வாறான அவதூறுகளைச் சொல்லவில்லை. மேலும் கலையை உக்கிரமாக அனுபவத்தில் படைப்பில் ஈடுபடுகிற படைப்பாளிகளிடம் சிருஷ்டி – வக்கிரம் போன்றவற்றுக்கு இடையிலான இடைவெளி மிக மிகச் சன்னமான இழை போன்றே இருக்கும்.

கொடூரமும் வக்கிரமும் இரத்தமும் வெளியே இருந்தால் படைப்பிலும் அதுதான் வரும். பிக்காஸோ மிகுந்த நேசம் கொண்டவனாக இருந்த தருணங்களில் அவன் ஓவியங்கள் நெகழ்ச்சியைப் பரவசத்தைக் காட்டும. நீலக் காலகட்ட ஓவியங்கள் ஜில்லெட் பற்றிய பெண்ணின் மலர்ச்சி தொடர்பான ஓவியங்கள். பலோமா, கிளாட் பற்றிய ஓவியங்கள் அத்தகையவை. தெரஸா கர்ப்பமுற்றிருக்கையில் தெரஸாவின் முழு உருவும் கர்ப்ப வயிறும் செழுமையான மார்புகளும் தான். டோராமாரிடம் அவர் வெறுப்புக் கொண்டால் டோரா எப்போதும் துக்கம் சுமந்த அழும் பெண் தான். ஜாக்குலின் மிகுந்த சுயநலமும் நெருக்கடியும் அவருக்குக் கொடுத்தால் அல்லது முதிய வயதில் பெண்உடம்பு அவருக்குப் பிரச்சினையாகத் தோன்றினால் அவள் சிறுநீர் கழிக்கும் அற்பப் பெண்தான். 

குவார்னிகா இனி நம்பிக்கை கொள்ள ஏதுமில்லை என்கிற அழிவு பற்றிய செய்தியைத் தான் உலகுக்குச் சொல்கிறது. அமைதியின் செய்தியைத் தான் உலகுக்குச் சொல்கிறது. அமைதியின் செய்தியை உலகெங்கும் எடுத்துச் சொல்கிறது. பிக்காஸோவுக்கு இரண்டு பிரச்சினைகள் மிகமிக ஆதாரமானவை. ஒன்று வன்முறை. மற்றது பாலியல்பு. பாலியல்பு பற்றி பிரம்மைகள் உள்ள சமூகத்தில் பாலுறவு சாகசக்காரனாக அதுவும் கலைஞனாக அவன் இருந்தான். பெண் அன்பின் வடிவமென அடிக்கடி சொன்னான் பிக்காஸோ. அடங்கிப் போவதை இயல்பெனக் கருதிய பிக்காஸோவுக்கு பெண்ணின் வன்முறையும் சுயநலமும் காரியவாதமும் எதிர்மறை உணர்வையே தந்தன. அதிகாரம் ஆண்பெண் இருவர்க்கிடையிலும் நிலவியது. வன்முறைதான் அங்கு உயர்ந்த பட்ச வெளிப்பாட்டு நிலைமையாக இருந்தது.

பிக்காஸோ நாடோடிப் பின்புலம் கொண்டவன். பிக்காஸோவின் அளவு தன் கால தனிமனித முரண்பாடுகளையும் அரசியல் வரலாற்று முரண்பாடுகளையும் வாழ்ந்து படைத்த கலைஞன் வேறெருவருமில்லை. ஸால்வடோர் டாலி போன்றவர்களை ரூட்டோ போன்றவர்களை பாசிசத்தோடு சேர்த்துப் பார்த்த கால கட்டத்தில், பிக்காஸோ பாசிஸ்ட் எதிர்ப்பாளனாக இருந்தான். ஸ்டாலினியத்தின் எதேச்சாதிகாரத்துக்கு எதிராகவும் இருந்தான். கம்யூனிஸ்ட்டு எதிர்ப்பு நிலைப்பாடு எடுக்க வற்புறுத்திய போதும், ஸ்டாலின் ஓவியம் தொடர்பான பிரச்சினையில் மௌனமாக கம்யூனிஸ்ட் கட்சியோடு நின்றார் அவர்.

ஸர்வைவிங் பிக்காஸோ படத்திற்கு ஜப்வாலா திரைக்கதை எழுதியிருக்கிறார். முர்ச்சன்ட் ஐவரி இயக்கியிருக்கிறார். அமெரிக்க நிறுவனம் விநியோகம் செய்திருக்கிறது. அவர்களின் நோக்கமெல்லாம் ஒன்றே ஒன்றுதான். பிக்காஸோவின் அரசியலைக் கொச்சைப்படுத்துவது. அதே வேளை தனி மனிதனாகவும் அவரை ஒரு கோமாளியாக அதனூடே காண்பிப்பது அந்த நோக்கம். படத்தில் அது நிறைவேறி இருக்கிறது. மார்சல் வரும் காட்சி பொய்யான காட்சி. மார்சல் விலக்கப்பட்டது பிக்காஸோவின் குடிகார மகனோடு விளையாடிக் கொண்டு வந்து காரை இடித்ததால் அல்ல. மாறாக ஜில்nலட்டை தனக்குச் சொல்லாமல் விடுமுறை நாளில் (அவர் கார் கையாளக் கூடாத நாள்) வெளி இடத்துக்கு குழந்தைகளோடு தூரக் கூட்டிப் போனதால் தான். மேலும் அப்போது ஜில்லெட் பிக்காஸோ உறவு நொருங்கும் நிலை அடைந்துவிட்டது.

ஜில்லெட் பிக்காஸோவோடு இருக்கும் அதே காலகட்டத்திலேயே பிக்காஸோவை விமர்சிக்கும் பிறிதொருவரோடு உறவு கொண்டிருந்தர் ஜில்லெட். படத்தில் இதுவெல்லாம் மிகச் சௌகரியமாக மறைக்கப்பட்டிருக்கிறது. பெண் நிலைவாதம் இப்போது விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு புனிதக் கோட்பாடாகி விட்டது. அதோடு சரியான அமெரிக்க பிரிட்டிஷ் கன்ஸர்வேடிவ் அரசியலும் கிறித்தவ அறிவியலும் (ஜப்வாலா நோக்கில் இந்து அறிவியலும்) சேர்ந்து விட்டது. இது தான் இந்தப் படம். அனா பிக்காஸோவை அடிக்கடி டான் ஜூவானோடும் கோபிகைகளை அலைக்கழித் கிருஷ்ண பராமாத்வோடும் ஒப்பிடுகிறார். டான் ஜூவான் X கிறித்தவ அறிவியல். கிருஷ்ணன் X இந்து அறிவியல்.

பிக்காஸோ குறித்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பீடுகள் சந்தர்ப்பவாத நோக்கிலானது. அமெரிக்க மதிப்பீடு கிறித்தவ அறிவியல் பால்பட்ட புனித ஒழுக்க மதிப்பீடு. ஒரு வகையில் சோவியத் எதிர்ப்பு சந்தர்ப்பவாத அரசியல் மதிப்பீடு. பிக்காஸோவை இப்படியெல்லாம் மதிப்பிட முடியாது. பிக்காஸோ தேவதூதன் அல்ல. பிக்காஸோ மிகச் சாதாரண மனிதனாக வாழ்ந்ததை தங்கமாளிகையில் ஒரு பிச்சைக்காரனைப் போல் வாழ்ந்ததை அவரது படைப்புகளும் வாழ்வும் சொல்கிறது. அவர் ஒரு சிறந்த புத்தகம்.

வாழ்க்கையை அவநம்பிக்கையோடு எதிர்மறையாக வன்மத்துடன் பார்த்தவன் அவன். சகமனிதர்களோடான உறவும் அப்படித்தான் இருந்தது. டால்ஸ்டாயின் குடும்ப உறவு அன்பும் வெறுப்பும் இரு பக்கங்களென்பது மாதிரித்தான் பிக்காஸோவும். பிக்காஸோ சந்தைமயமாகி வந்த கலாச்சாரச் சந்தையை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒருவர்தான். ‘நான் விரும்பினால் எனது எச்சிலைக் கூட சட்டமிட்டு விற்க முடியும‘ என்று சொன்னவர்தான் அவர். சாகசம் செய்தவர் தான். வியாபாரிகளிடம் மாற்றி மாற்றிப் பேசி வியாபாரம் செய்தவர்தான். நேர்கோட்டுப் பாதையில் சென்ற கடவுளாக அவர் இல்லை. அப்படிப்பட்ட கடவுளையும் அவர் நம்பவில்லை.

பிக்காஸோவை அவர் காலத்திய பாலியல் அறவியல் மதிப்பீடுகளின் போலித்தனம், அவரது நாடோடி வாழ்வுப் பின்னணி நிலவிய வன்முறை அரசியல், விடுதலை அரசியல், மனித உறவுகள் போன்றவற்றோடு வைத்துத்தான் பேச வேண்டும். கடவுளாக அல்ல. மனிதனாக வைத்துத்தான் மதிப்பிட வேண்டும் பிக்காஸோவின் மிகப் பெரிய பலம் அவரது சகல முரண்களுக்கும் சாட்சியமாக அவரது படைப்புகள் விளங்குவது தான். அவரது படைப்புகள் வேறு அவர் வேறு அல்ல. அவரது வாழ்வு வேறு அவரது அரசியல் வேறு அல்ல. பிக்காஸோ அவர் வாழ்ந்த காலத்தை அனைத்து மனிதரின் வாழ்வையும் அனைத்து முரண்களுடன் படைப்பில் கொண்டு வந்தவன்.

பிக்காஸோவின் படைப்புகள் மரபு ரீதியிலான அனைத்தையும் நிராகரித்து ஒழுங்கமைவைச் சிதைத்தது. சுவரொட்டிகள், செய்தித்தாள்கள், அட்டைகள், ஆணிகள், தகரங்கள் எல்லாமும் அவருக்கு படைப்புப் பொருட்கள் ஆகின. நிலவின அதிகார ஒழுங்கைச் சிதைத்தவன் என்கிற அளவில் பிக்காஸோ நாசகாரன்தான். பிக்காஸோவின் பெண்கள், மனிதர்கள், பொருட்கள், மிருகங்கள், மாளிகைகள் அழகானவை அல்ல. அன்று அழகென்று நினைத்த எல்லாவற்றிற்கும் எதிரானவர் அவர். கடைசி வரை ஸர்ரியலிஸ்டுகளை ஆகர்சித்தவர் அவர். ஸாரியலிசக் கவிதைகளை எழுதியவர்.

ஒரு புறம் பாசிசம். மறுபுறம் கலைஞனைப் புரிந்து கொள்ளாத ஸ்டாலினியம். இத்தோடு ஆண் பெண் உறவின் பாலுறவு அனுபவத்துடன், தன்னை முழுக்கவும் கண்டடைய முயற்சித்து, இழந்த இக்கலைஞனால் கடைசி வரையிலும் தனக்காக நண்பர்களைக் கண்டடைய முடியாது போனது. நவீன உலகத்துக்கு எதிரான தனது தன்னுனார்வுடனான கலகத்தை முன்னெடுத்த அக்கலைஞன் கடைசி வரையிலும் தனக்கு நேரான நட்பைக் கண்டடையவேயில்லை. இந்தச் சோகம் புரட்சிக் கலைஞர்கள் எல்லோர்க்கும் உரியது.

Leave Comments

Comments (0)