DARK DRAVIDIAN - PROUD TAMIZHAN
April 18, 2022 - selvamani T
May 16, 2022,5:50:57 PM
தவ.செல்வமணி
நல்ல படங்கள் தமிழில் வரவேண்டும் என்று பலர் கூறலாம்,விமர்சங்களை வைக்கலாம் ஆனால் அதற்க்கு முதலில் நல்ல படைப்புகளை ரசிக்க கூடிய ரசனையை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்பதை முதலில் தமிழ் சூழலுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ் ஸ்டுடியோ தான்.
கலைகள் பொழுது போக்கோ,பெரும் பொருள் ஈட்டும் தொழிலோ,பெரு முதலாளிகளின் வியாபார சந்தையோ அல்ல அது மக்களுக்கானது, அதுவும் கலைகளின் பெரும் கலையான சினிமாவை இவர்கள் ஆட்டுவிக்கிறார்கள் நல்ல படங்கள் வரவேண்டும் என்று பல குரல்கள் வந்தாலும் அதை மாற்றுவதற்கான சரியான செயலை முன்னெடுக்க வேண்டும் அப்படியான பல முன்னெடுப்புகளை தமிழ் ஸ்டுடியோ 16 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்து வருகிறது அதில் மிக முக்கியமான ஒன்று சாமிக்கண்ணு திரையிடல் !
அதற்க்கு முன்பாகவே பல குறும்படங்களை இனங்கண்டு திரையிட்டு வந்ததும்,குறுந்திரையரங்கம் என்ற ஒன்றை 2014 ஆம் ஆண்டே நடத்தியும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் ஸ்டுடியோவின் மைய நோக்கு என்பது மக்கள் சிந்தனையை மேம்படுத்தும் நல் படைப்புகள் உருவாக்க வேண்டும் என்பதே அதற்க்கு முதலில் நல்ல கலைஞர்களை உருவாக்க வேண்டும்,நல்ல படைப்புகளை ரசிக்க கூடிய வகையில் நல்ல பார்வையாளர்களை உருவாக்க வேண்டும்.
இந்த மூன்றையும் தொடர்ச்சியாக பல முன்னெடுப்புகள் வழி தமிழ் ஸ்டுடியோ செய்து கொண்டே தான் வருகிறது.
நல்ல படைப்புகளை மக்கள் தொடர்ந்து பார்ப்பதன் மூலமே அவர்களின் ரசனை தொடர்ந்து மேம்படும்,அதற்காக தமிழ்நாடு முழுக்க குறுந்திரை பயணம்,தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் குறுந்திரை அரங்கம்,பவுர்ணமி இரவு திரையிடல் என பல முன்னெடுப்புகளை செய்து வந்த தமிழ்ஸ்டுடியோ,வடபழனியில் பிரமாண்டமான ப்யூர் சினிமா புத்தக அங்காடியில்,தென்னிந்தியாவின் முதல் திரையரங்கை நிறுவிய வின்சன்ட் சாமிக்கண்ணுவின் பெயரில் சாமிக்கண்ணு திரையிடலை தொடங்கியது,வாரா வாரம் மிக முக்கியமான திரைப்படங்களை திரையிட்டு கலந்துரையாடலும் நடந்திடும் ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக ப்யூர் சினிமா வரசரவாக்கத்திற்கு மாற்றப்பட்ட பின்பு திரையிடல் நடத்தும் அளவிற்கான இடம் இல்லாததால் சாமிக்கண்ணு திரையிடல் தள்ளிக்கொண்டே போனது,
நெருக்கடிகள் சூழ்ந்த போதும் கொள்கை நெறிப்படி வாழ்தல் வீரம் என்கிற கூற்று தமிழ் ஸ்டுடியோவுக்கு எப்போதும் பொருந்தும் எவ்வித பெரு முதலாளிகளின் பின்புலமும் இல்லாமல் மக்களோடு மக்களாக நின்று எல்லா வித முன்னெடுக்களையும் எப்போதும் தீவிரமாக நடத்தும் ஒரு மக்கள் இயக்கமே தமிழ் ஸ்டுடியோ !
சாமிக்கண்ணு திரையிடலுக்கு தொடர்ச்சியாக வந்து தன்னுடைய ரசனையை வளர்த்துக்கொண்ட ஒருவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்,அவரின் ஊக்கத்தோடும்,உதவியோடும்,தமிழ் ஸ்டுடியோ இயக்கத்தின் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்து மீண்டும் சாமிக்கண்ணு திரையிடலை நடத்த தமிழ் ஸ்டுடியோ ஆயுத்தமாகியுள்ளது அதற்காக வளசரவாக்கம் அன்பு நகர் சக்தி பேலஸ் அருகில் மிக சிறப்பாக ஒரு அரங்கு திரையரங்கு போல தயார் செய்யப்பட்டுள்ளது.
அதற்க்கு மேலும் ஒரு சிறப்பு அந்த அரங்கின் பெயர் திராவிடர் கலையரங்கம்,சிறப்பிலும் ஒரு கூடுதல் சிறப்பு அந்த அரங்கு அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் திறக்கப்பட்டு,முதல் நாளில் சமூக நீதி திரைப்பட விழா திரைப்படங்கள் திரையிடப்பட்டது.
இனி ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து திரையிடல்கள் நடக்கும் எல்லோரும் வாருங்கள்,திரைப்படங்களை பாருங்கள்,கற்றுக் கொள்ளுங்கள்,அங்கு இருக்கும் புத்தகங்களை வாங்கி படியுங்கள் ,திரை ரசனையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்,சிந்தனையை மேம்படுத்தும் படைப்புகளை கொடுங்கள்.
பெரியார்,அம்பேத்கர்,மார்க்ஸ் வழியில் இந்த தமிழ் உலகில் எவ்வித பொருளாதார நோக்கும் இல்லாமல் மிக நேர்மையாக உண்மையாக சமூக சினிமாவை மக்களுக்காக உருவாக்க உறுதியாக களமாடும் ஒரு மக்கள் பேரியக்கம் தமிழ் ஸ்டுடியோ என்பதில் தமிழ் நாடே பெருமிதம் கொள்ளட்டும்,தமிழ் ஸ்டுடியோ போன்ற அமைப்புகளே இன்றைக்கு இந்திய அளவில் தேவைப்படுகின்றன,இந்துத்துவா மதவாத சக்திகள் அறத்துக்கு எதிரான அச்சுறுத்தல்களை ஏவும் நிலையில் கலை ஆயுதங்களை கொண்டு அவர்களை வீழ்த்த இப்படியான இயக்கங்கள் வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்புகிறார்கள்.
காப்புரிமை © 2021 கருஞ்சிறுத்தை. All Right Reserved.
Leave Comments