பதிப்பக துறையில் கடைசியாக இருப்பது சுயாதீன புத்தக கடைகள் தான்

/files/https___blogs-images.forbes.com_rachelkramerbussel_files_2018_12_prologue-bookshop-new-year-books 2020-09-18 10:45:21.jpg

பதிப்பக துறையில் கடைசியாக இருப்பது சுயாதீன புத்தக கடைகள் தான்

  • 46
  • 0

-V.கோபி

ஆறு சுயாதீன புத்தககடைகள் ஒன்றுசேர்ந்து புத்தககடைகளுக்கான சங்கத்தை தொடங்கியுள்ளன. அவர்களின் இலக்கு என்ன?

இந்தியாவில் உள்ள சுயாதீன புத்தககடைகள் பணப்புழக்கம், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சரக்கை கொண்டு செல்வது, முக்கியமாக ஆன்லைன் விற்பனையாளர்கள் வழங்கும் தாராள தள்ளுபடிகள் போன்ற பிரச்சனைகளை நீண்ட காலமாக சந்தித்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கோவிட்-19 நோய்தொற்று மற்றும் அதனை தொடர்ந்து வந்த ஊரடங்கு காரணமாக பிரச்சனைகள் உச்ச நிலையை தொட்டுள்ளன.

இந்த வார தொடக்கத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஆறு சுயாதீன புத்தக உரிமையாளர்கள் – லிட்ரெட்டி-யின் (Literati) திவ்யா கபூர், கோவா; ராச்சனா (Rachna) புக்ஸ்-ன் ராமன் ஷ்ரெஸ்டா, கங்கோதக்; டோகியார்ஸ் (The Dogears) புத்தக நிலையத்தின் லியோனார்ட் மற்றும் குய்னி  ஃபெர்னாண்டஸ், கோவா; பக்தந்தி (Pagdandi) புக் கஃபேயின் விஷால் பிப்ரயா, புனே; ஸ்டோரிடெல்லர் (Storyteller) புத்தக நிலையத்தின் அமன் மற்றும் மயூரா மிஸ்ரா, கொல்கத்தா; ட்ராயலஜி-யின் (Trilogy) அகல்யா மற்றும் மீதில் மொமையா, மும்பை – ஒன்றுசேர்ந்து கூட்டாக Independent Bookshops Association of India (IBAI) என்ற சங்கத்தை தொடங்கியுள்ளனர். இந்தியாவில் உள்ள  சுயாதீன புத்தக நிலையங்களை ஒருசேர கொண்டு வருவது, பதிப்பக துறைக்கு உள்ளேயும் வெளியேயும்  கூட்டுரிமை ஏற்படுத்துவது மற்றும் உரிமைகளுக்காக வாதிடுவது போன்ற குறிக்கோளை இந்த சங்கம் கொண்டுள்ளது.

இந்த சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களான லியோனார்ட் பெர்னாண்டஸ் மற்றும் ராமன் ஷ்ரெஸ்டா ஆகியோர்களிடம் எடுக்கப்பட்ட பேட்டி இதோ….

Independent Bookshops Association of India தொடங்குவதற்கான உரையாடலை எப்போது நீங்கள் தொடங்குனீர்கள்? தனிநபராகவா அல்லது சுயாதீன புத்தக விற்பனையாளராகவா அல்லது கூட்டுறவாக இது தொடங்கப்பட்டதா?

லியோனார்ட் பெர்னாண்டஸ்: அமெரிக்காவில் சுயாதீன புத்தக விற்பனையாளர்கள் தாங்களாகவே கூட்டாக ஆன்லைனில் புத்தககடையை தொடங்கியது குறித்த கட்டுரையே எங்களுக்கு IBAI தொடங்குவதற்கான உரையாடலுக்கு உந்துதலாக அமைந்தது. இந்தியாவில் இணைய புத்தக விற்பனையில் அமேஸான் ஏகபோக உரிமையை கொண்டுள்ளது. இவை வழங்கும் தாராள தள்ளுபடியை யாரும் கண்டுகொள்வதில்லை என எங்களுக்கு தோன்றுகிறது. இதற்கு எதிரான போக்கு தற்போது தேவைப்படுகிறது. ஆன்லைன் புத்தக விற்பனையில் இதேப்போன்ற நடவடிக்கை தேவைப்படுவதால், அது சுயாதீன புத்தக கடைகள் ஒன்றுசேர்ந்து செயல்பட்டால் நன்றாக இருக்குமே என நாங்கள் நினைத்தோம்.

அதற்காக IBAI தொடங்கப்படுவதற்கு அமேஸான் மட்டுமே காரணம் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை ஒருசேர நிவர்த்தி செய்தால் மட்டுமே இந்தியாவில் உள்ள சுயாதீன புத்தக விற்பனையாளர்கள் செழித்தோங்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். அதற்கு தேவை சிறந்த நடைமுறைகளையும் வியாபார உத்திகளையும் பகிர்ந்து கொள்வது. ஒரு சில புத்தக கடைகள் மட்டுமே இதே சந்தையை பகிர்ந்து கொள்கின்றன. அதனால் எந்த முட்டுமோதலும் இருக்காது. ஆனால் அவர்கள் ஒன்றுசேர்ந்து செய்யக்கூடிய விஷயங்கள் உள்ளன.

ராமன் ஷெரஸ்டா: நாம் என்னதான் கூறினாலும் இன்றும் பதிப்பக த்துறை சிறிய துறையே. குறிப்பாக சுயாதீன புத்தக கடைகளை எடுத்துக்கொண்டால், இங்கு ஒருவருக்கொருவர் நன்றாக அறிமுகம் ஆனவர்களாகவே இருப்பர் . மேலும் பதிப்பக மாநாடுகள் மூலம் எங்களில் பலரும் ஒருவரையொருவர் பல வருடங்களாக அறிந்து வைத்துள்ளோம்.

நமக்கென்று ஒரு சங்கம் தேவை என்ற யோசனை எப்போதும் எங்கள் மனதிற்குள் இருந்தது. அமெரிக்க சுயாதீன புத்தக விற்பனையாளர்கள் தங்களுக்கென்று சொந்தமாக ஒரு தளம் அமைத்துக்கொண்ட செய்தி வெளியானதும் எங்கள் உரையாடலை மேலும் முன்னெடுத்துச் செல்ல வசதியாக இருந்தது. சுயாதீன புத்தக விற்பனையாளர்களான நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் ஒருவருக்கிடையே கற்றுக்கொள்ள உதவியாகவும் இந்த சங்கம் இருக்கும். இந்த சமயத்தில்தான் ஊரடங்கு எங்களை கடுமையாக தாக்கியது. இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்ற நிலை வந்தது.

இதுவே எங்களை ஒன்று சேர்க்கவும், நிதானமாக யோசிக்கவும், பிரதிபலிக்கவும், உடனடியாக செயல்படவும் தூண்டியது.

இதற்கு முன்பு இது போன்ற சங்கங்கள் இருந்ததா?

பெர்னாண்டஸ்: இந்திய பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்க கூட்டமைப்பு ஒன்றுள்ளது. புத்தக விற்பனையாளர்களுக்கு சங்கங்கள் இருக்கிறது என்பதை இது பெயரளவில் சுட்டி காட்டுகிறது. எனினும், கடந்த காலங்களில் சுயாதீன புத்தக நிலையங்கள் ஒன்றுசேர்ந்து சங்கம் தொடங்கியதாக நாங்கள் கேள்வி பட்டதில்லை.

எந்தவொரு முறையான, ஒழுங்குப்படுத்தப்பட்ட பதிப்பக சங்கமும் இந்தியாவில் இல்லாத போது, இப்படியொரு சங்கம் தொடங்கியதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பெர்னாண்டஸ்: இதுவொரு முக்கியமான முதல் படி என நாங்கள் நம்புகிறோம். அனைத்து சுயாதீன புத்தக விற்பனையாளர்களையும் ஒரு கூட்டுக்குள் கொண்டு வந்து, ஆறு ஆரம்ப உறுப்பினர்கள் கூறிய குறிக்கோள்களை அவர்கள் அனைவரையும் சம்மதிக்க வைப்பதில்தான் பெரும் சவால் உள்ளது. உறுப்பினர்களுக்கு இந்த சங்கத்தை பொருத்தமுடையதாக ஆக்குவதிலும் சவால்கள் உள்ளது. தங்கள் பிரச்சனைகள் சரியாக கவனிக்கப்படாமல் அல்லது தீர்க்கப்படாமல் இருந்தால் சங்கத்தில் சேர்ந்து ஒரு பயனும் இல்லை என்றே உறுப்பினர்கள் நினைப்பார்கள்.

பதிப்பகங்களுக்கு முறையான சங்கங்கள் உள்ளன. FPBAI, FIP மற்றும்  API போன்றவை.

இந்தியாவில் சுயாதீன புத்தக கடைகள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனைகள் என்ன என்று கொஞ்சம் கூறுங்கள்.

பெர்னாண்டஸ்: பல பிரச்சனைகள் உள்ளது. இவை எல்லாவற்றையும் பின்தொடர்ந்து சென்றால், தனிப்பட்ட புத்தக நிலையங்களுக்கு போதிய அளவிற்கு பேரம் பேசும் அதிகாரம் இல்லை என்பது தெரிய வரும். உதாரணமாக, பதிப்பாளர் ஒருவர் அமேஸான் அல்லது குறிப்பிட்ட விநியோகிஸ்தருக்கு ஒரு புத்தக தலைப்பை ஆறு மாத காலத்திற்கு பிரத்யேக உரிமை கொடுத்தால், இந்த அநீதியை எதிர்த்து தனிப்பட்ட புத்தக கடைகளின் அழுகுரல் யாருக்கும் கேட்காது. அதேப்போல், குறிப்பிட்ட புத்தக கடைக்கு விநியோகஸ்தர் நேரத்திற்கு புத்தகம் கொண்டு வராவிட்டால் விற்பனையிலும் நல்லெண்ணத்திலும் இழப்பு ஏற்படும். எந்தவொரு எதிர்ப்பும் தனிமைப்படுத்தப்பட்டு அருவருப்பு ஓசையாக மூழ்கடிக்கப்படும்.

ஆகவே, பதிப்பகத்தார்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் போன்ற பதிப்பக துறையில் உள்ள இதர பங்குதாரர்களை சமாளிக்க IBAI ஒரே குரலில் பேசுகிறது. அனைவருக்கும் இந்த துறையில் உள்ள பிரச்சனைகள் தெரியும் - இணையதளங்களை விரும்புவது, அமேஸான் போன்றவர்கள் வழங்கும் தாராள தள்ளுபடி, ஒழுங்கற்ற புத்தக விநியோகம், விற்பனையின் எண்ணிக்கையை பொருத்து வியாபாரிகளிடம் வித்தியாசமாக நடந்துகொள்வது. எங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் குறித்து பதிப்பாளர்களையும் விநியோகிஸ்தர்களையும் அழைத்து பேசி சரி செய்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

ராமன்: எங்கிருந்து தொடங்குவது? பதிப்பக துறையில் கடைசியாக இருப்பது சுயாதீன புத்தக கடைகள் தான். எழுத்தாளர் தரக்கூடிய அனைத்தும் பதிப்பக துறையின் உதவியோடு புத்தக கடையின் மூலமாக இறுதியில் வாசகரின் கையில் கிடைக்கிறது. ஆனாலும், கடந்த பதினைந்து ஆண்டுகளாக, இந்த வலைப்பின்னலில் புத்தக கடைகள் முற்றிலும் தனித்து விடப்பட்டுள்ளன. தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளுமாறு அவர்கள் விடப்பட்டுள்ளார்கள்.

சுயாதீன புத்தக கடைகள் செயல்படும் விதம் மற்றும் பேரம் பேசும் அதிகாரம் ஆகியவை கடை அமைந்திருக்கும் இடத்தைப் பொருத்து மாறுபடுமா? வேறு வகையில் கூறினால், தொலைதூர நகரத்தில் உள்ள புத்தக கடைகளை விட டெல்லியில் அல்லது வேறு ஒரு மெட்ரோ நகரத்தில் இருக்கும் சுயாதீன புத்தக கடைகளுக்கு ஏதாவது அனுகூலம் உள்ளதா?

பெர்னாண்டஸ்: அப்படி இருப்பதாகவே நான் நினைக்கிறேன். தற்போதைய சூழ்நிலையில், மும்பை, புனே போன்ற சிவப்பு மண்டலங்களில் உள்ள விநியோகஸ்தர்களை சார்ந்துள்ள புத்தக கடைகள்  புதிய புத்தகங்களை வாங்க முடியாது. அதனால் டெல்லியில் உள்ள பதிப்பாளர்களிடம்தான் ஆர்டர் கொடுக்க வேண்டும். இதனால் விலையும் புத்தகம் டெலிவரி ஆகும் நேரமும் அதிகமாகும்.

ராமன்: சுயாதீனமாக புத்தக கடையை நடத்துவதால் ஏற்படும் அசௌகர்யங்களை பற்றி நாங்கள் ஆறு பேரும் பேசிக் கொண்டிருக்கும்போது, கங்கோதக் போன்ற தொலைதூர பகுதியிலுள்ள புத்தக கடைகள் எந்தளவிற்கு பின்தங்கியிருக்கிறது என்பதை நாங்கள் உணர்ந்தோம். அருகிலுள்ள விமான நிலையம்/ரயில் நிலையம் செல்ல வேண்டுமென்றால் 120கிமீ/மலை பாதையில் 4 மணி நேரம் செல்ல வேண்டும். எனக்கு பிடித்தமான விநியோகஸ்தர்களின் குடோனிற்கு செல்வதைக் கூட வருடத்திற்கு ஒருமுறைதான் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

டெல்லியில் அரை நாளிலேயே புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுவிடும். காலையில் ஆர்டர் செய்தால் மதியம் உங்களுக்கு புத்தகம் கிடைத்து விடும். நீங்கள் டெலிவரி கட்டணம் கூட கொடுக்க வேண்டாம்.

இன்று நான் புத்தகம் ஆர்டர் செய்தால், கொல்கத்தாவில் உள்ள விநியோகஸ்தரிடம் அந்த புத்தகம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அதை கொரியர் மூலம் அவர்கள் அனுப்ப வேண்டும். ரூ.299 புத்தகத்திற்கு கொரியருக்கு மட்டும் 100 ரூபாய் கொடுக்க வேண்டும். அதிர்ஷ்டம் இருந்தால் மூன்று நாட்களில் புத்தகம் கிடைக்கும். ஒரு புத்தகத்திற்கு கொரியர் கட்டணம் செலுத்துவதால், அதை முழு விலை கொடுத்து விற்றாலும் எங்களுக்கு நஷ்டம்தான். சாலை வழியாக அனுப்பினால், நிலச்சரிவு அல்லது எந்த முற்றுகையும் இல்லாத பட்சத்தில் சரக்குகள் செல்ல இரண்டு வாரங்கள் ஆகும்.

விநியோகஸ்தர்களிடம் புத்தகம் இல்லாவிட்டால், டெல்லி அல்லது மும்பையில் உள்ள பதிப்பக குடோனிலிருந்து வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும். கொல்கத்தா அல்லது டெல்லியிலிருந்து வரும் புத்தக பெட்டிகள் மூன்று லாரிகள் மற்றும் நான்கு குடோன்களை கடந்த பிறகே எங்களை அடையும். பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் நாங்கள் பணம் செலுத்தியாக வேண்டும். அதனால், நல்ல நிலமையில் கூட புத்தகம் வருவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் ஆகும். டெல்லியிலிருந்து நேரடியாக அனுப்பபட்ட ஒரு புத்தக பெட்டி 20 நாட்கள் கழித்து கிடைத்தது. அதற்காக நான் ரூ.1100 செலவழித்தேன்.

இப்படியெல்லாம் பிரச்சனை இருக்கும்போது, எவ்வுளவு நல்ல நோக்கம் இருந்தாலும் ஆன்லைன் வியாபாரிகள் போல் எங்களால் தள்ளுபடி கொடுப்பதற்கு வாய்ப்பே இல்லை. போதிய அக்கறை இல்லாத அல்லது காத்திருக்க முடியாத வாசகர்களே ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள். தோற்கப் போகும் போரில்தான் நாங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்.

விற்பனை ஆகாத புத்தகங்களை திரும்ப அனுப்புவது அதைவிட சவாலான விஷயம். கங்கோதக்கில் உள்ள சரக்குகளை – தோராயமாக 9-10 பெட்டிகள் கொண்ட புத்தக மூட்டைகள் – எந்தவொரு போக்குவரத்து நிறுவனமும் பெறாது என்பதால் அதை எடுத்துக் கொண்டு 120கிமீ தொலைவிலுள்ள சில்குரிக்குச் செல்ல வேண்டும். கொல்கத்தாவிலிருந்து கங்கோதக்கிற்கு அனுப்பிய 10 பெட்டிகளை பெறுவதற்கு உண்டான செலவை விட மூன்று பெட்டிகளை திரும்ப அனுப்புவது மிகவும் செலவு பிடிக்கும்.

பதிப்பக துறைக்கு உள்ளேயும் வெளியேயும் வசதியை ஏற்படுத்துவது மற்றும் கூட்டாண்மையை ஊக்கப்படுத்துவது உங்கள் குறிக்கோளில் ஒன்று. இதைப்பற்றி மேலும் கூற முடியுமா?

பெர்னாண்டஸ்: பேரம் பேசுவதில் IBAI குறிப்பிடத்தக்க அதிகாரத்தை பெற்று, அதிக எண்ணிக்கையிலான புத்தக கடைகளை பிரதிநித்துவப்படுத்தும் நிலையை இறுதியில் எட்டும் என நாங்கள் நம்புகிறோம். உதாரணமாக,  லாஜிஸ்டிக்ஸ் ஏற்பாடு குறித்து நாங்கள் பேரம் பேச வேண்டியிருந்தால், அதை அனைத்து உறுப்பினர்களின் புத்தக கடைகளுக்கும் IBAI செய்யும்.

இந்தியாவில் ஒழுங்குப்படுத்தப்பட்ட சங்கத்தின் மூலம் உங்களால் சுயாதீன புத்தக கடைகளுக்கு உதவவும் அதன் உரிமைகளுக்காவும் வாதிட முடியும் என நீங்கள் நினைக்குறீர்களா? உங்களுக்கு தெரிந்து இதை வெற்றிகரமாக நிறைவேற்றிய சங்கங்கள் மற்ற நாடுகளில் ஏதாவது உள்ளதா?

பெர்னாண்டஸ்: நமது நாட்டின் கலாச்சார சூழலில் சுயாதீன புத்தக கடைகளை முக்கியமான பகுதியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே எங்களுடைய முதன்மையான பணி. அவர்கள் புத்தகங்களை ஆங்கிலத்தில் விற்பனை செய்கிறார்களோ அல்லது உள்ளூர் பிராந்திய மொழியில் விற்பனை செய்கிறார்களோ, தங்களது பகுதியில் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் முக்கியமான பணியில் ஈடுபடுகிறார்கள். தங்களது முக்கிய வாசகர்களை கவர தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை வழங்குகிறார்கள். பதிப்பகத்தார் மற்றும் வாசகர், விநியோகஸ்தர் மற்றும் வாடிக்கையாளர் ஆகியோர்களுக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கினாலும் அரிதாகவே அவர்கள் அங்கீகரிக்கப்படுகிறார்கள். எப்போதும் நம் தெரு கடைசியில் திறந்திருக்கும் சுயாதீன புத்தக விற்பனையாளர் கடைக்கு சென்று அவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.  பல நல்ல வேலைகளை செய்து கொண்டு பல புத்தக விற்பனையாளர்கள் நாட்டின் மூலை முடுக்கில் யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறார்கள். அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அவர்களது இருப்பை மக்களுக்கு தெரியப்படுத்தும் காரியத்தில் நிச்சியம் IBAI ஈடுபடும்.

ராமன்: வெளிநாட்டில் உள்ள சங்கங்கள், குறிப்பாக மேற்குலகில், உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு கூட்டுறவாக சிறப்பாக பணியாற்றுகிறார்கள். இந்தியாவில் நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மிகவும் அடிப்படையானவை என்றாலும், பதிப்பக துறையில் உள்ள எல்லா பிரிவினரும் அறத்தோடும் பிணைப்போடும் பணியாற்றுவதற்காக எப்படி அங்கே செயல்படுகிறார்கள் என்பது எங்களுக்கு பெரிய உத்வேகமாக உள்ளது.  

IBAI நிறுவன உறுப்பினர்களாக ஆறு சுயாதீன புத்தக கடைகள் மட்டுமே உள்ளன. அதிலும் சிலர் ஏற்கனவே வல்லுநர்களாக இருக்கிறார்கள். பெரிய சுயாதீன புத்தக கடைகளிடம் இதற்கு எந்தளவில் வரவேற்பு இருக்கிறது? உறுப்பினராக சேர்வதற்கு அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்களா?

பெர்னாண்டஸ்: இதுகுறித்து இப்போதே கருத்து கூற முடியாது. IBAI தொடங்கப்பட்டது குறித்த செய்தி பரவியதும், சங்கம் குறித்து மேலும் அறிந்து கொள்ளவும் அதில் இணைந்து கொள்ளவும் புத்தக விற்பனையாளர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என நாங்கள் நினைக்கிறோம்.

ராமன்: சமூக ஊடகம் வழியாக சுயாதீன புத்தக விற்பனையாளர்கள் என்னிடம் சில கேள்விகள் கேட்டனர். முறையாக அவர்கள் உறுப்பிர்களாவார்கள் என நம்புகிறேன். இப்போதுதான் அறிவித்துள்ளதால் இன்னும் நிறைய புத்தக கடைகளை சென்றடைய வேண்டியுள்ளது.

கொரானா தொற்று பதிப்பக துறையில் – சிறியதோ, பெறியதோ, பன்னாட்டு அல்லது உள்ளூரோ -   யாரையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் உள்ள சுயாதீன புத்தக விற்பனையாளர்களின் நிலை என்னவாக இருக்கும்?

பெர்னாண்டஸ்: இந்த சமயத்தில் பல சுயாதீன புத்தக கடைகளும் மூடப்பட்டுள்ளதால் புத்தக விற்பனையில் இழப்பு ஏற்படும். ஒருசிலர் தொலைபேசியிலும் ஆன்லைன் மூலமாகவும் புத்தகங்களை ஆர்டர் எடுத்து அதை வீடுகளுக்கே சென்று கொடுக்கிறார்கள். ஆனால் கடை திறந்த பிறகு அவர்களது வருமானத்தை இது ஈடு செய்யும் என்று சொல்ல முடியாது.

ராமன்: விற்பனை ரீதியாக  சுயாதீன புத்தக நிலையங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கிற்கு ஐந்து நாள் முன்கூட்டியே என் கடையை மூடி விட்டேன்.  என் புத்தக கடைக்கு அருகில் காபி ஷாப் இருப்பதால்  அனைவரின் பாதுகாப்பு குறித்தும் கவனமாக இருந்தேன்.

இந்தியாவெங்கும் உள்ள பல புத்தக கடைகள் இன்னும் திறக்கவில்லை. எங்கள் சிலருடையது போல் எல்லா அருகாமை புத்தக கடைக்கும் மக்களை சென்றடையும் வசதி இல்லை. அதனால் நமக்கு தெரிந்ததை விட பாதிக்கப்பட்ட புத்தக கடைகளின் உண்மையான எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். வாடகை, ஊழியர்களுக்கான சம்பளம் போன்ற பல பிரச்சனைகள் இருக்கும் நிலையில், சுயாதீன புத்தக விற்பனையாளர்களுக்கு இது மோசமான காலகட்டமாகும்.

ஏற்கனவே புத்தகங்களை கடைகளிலிருந்து வாங்குவதை தவிர்த்து ஆன்லைன் வியாபரிகளிடம் வாங்கும் முறையால் இழப்புகளை சந்தித்து வரும் நிலையில் வைரஸ் நோய்தொற்று சுயாதீன புத்த கடைகாரர்களுக்கு இரட்டை அடியாக விழுந்துள்ளது. இத்தகைய பெரிய பிரச்சனையை எப்படி கையாளப் போகிறீர்கள்?

பெர்னாண்டஸ்: பலர் உள்ளூர் புத்தக விற்பனையாளர்களிடம் போனில் தொடர்புகொண்டு புத்தகம் வாங்கி வருகிறார்கள். புத்தக கடைகள் மீது அவர்கள் கொண்டுள்ள விசுவாசத்தை நாம் நிச்சியம் பேசியாக வேண்டும்.  தாராளமான தள்ளுபடிகள் வழங்குவதால்தான் இங்கு ஆன்லைன் புத்தக விற்பனை செழித்தோங்குவதாக நாங்கள் நம்புகிறோம். இதுபோன்ற தள்ளுபடிகளை சுயாதீன புத்தக கடைகள் நினைத்தாலும் தர முடியாது. சமீபத்திய பேட்டி ஒன்றில், ஆன்லைன் விற்பனையாளர்கள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் தள்ளுபடி கொடுக்க முடியாதபடி பிரான்ஸில் இயற்றப்பட்ட The Lang Law பற்றி Hachette India-வின் மேலாண்மை இயக்குனர் தாமஸ் ஆப்ரகாம் பேசியுள்ளார். இதுபோன்ற சட்டத்தையோ அல்லது ஏற்கனவே உள்ள வியாபார நடைமுறையில் மாற்றத்தையோ தனிப்பட்ட புத்தக கடைகள் ஒருபோதும் கேட்கவில்லை.

ராமன்: ஒன்றோ அல்லது இரட்டை அடியோ, விளையாடும் களம் சரிசமமாக இல்லாததால் கடைகள்தான் கடுமையாக பாதிக்கப்படுகிறது.  இப்போது ஆன்லைன் கடைகளால் தங்களது அர்டரை கொடுக்க முடியாத போதுதான் அருகாமை புத்தக கடைகள் மீது தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். ஆபத்தை பற்றி கவலையில்லாமல் இவர்கள் வாசகர்களின் வீடுகளுக்கே சென்று புத்தகங்களை டெலிவரி செய்து வருகிறார்கள்.  

இத்தகைய மோசமான காலகட்டத்திலும் இது உண்மையிலேயே நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது.இந்த துறையில் உள்ள ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சார்ந்து இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த ஊரடங்கு காலத்தில் எந்த சுயாதீன புத்தக நிலையமாவது கடையை மூடியுள்ளதா?

ராமன்: அது எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் முன்பு பல அருகாமை புத்தக கடைகள் இருந்துள்ளன. அதை நாங்கள் இன்னும் தொடர்பு கொள்ளவில்லை. இதற்குதான் சுயாதீன புத்தக கடைகள் அடங்கிய விவரத் தொகுப்பு மிகவும் அவசியமாகிறது.

இந்தியாவில் சுயாதீன புத்தக கடைகள் எத்தனை உள்ளன?

பெர்னாண்டஸ்: இதுபற்றிய முழுமையான எண்ணிக்கை கிடைக்கவில்லை

ராமன்: ஆமாம், எங்களுக்கு உறுதியான எண்ணிக்கை தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்தவரை ஒவ்வொரு அருகாமையிலும் சமூகத்திலும் ஒன்று நிச்சியம் இருக்கும். IBAI கீழ் அனைத்து சுயாதீன புத்தக நிலையங்களும் வரும் பட்சத்தில், தனித்தனியாக ஒவ்வொரு புத்தக நிலையத்துக்கும் தேவையான ஆதரவையும் அவர்களது கனவை நிறைவேற்றவும் எங்களால் முடியும் என நம்புகிறோம்.

நான் அதிக நம்பிக்கையோடு பேசுவதாக தோன்றுகிறதா?  நானும் ஒரு புத்தக விற்பனையாளர்தான்.

IBAI-வின் குறிக்கோள்கள்

    இதன் உறுப்பினர்களுக்கு செய்தி தொடர்பாளராக இருப்பதோடு பதிப்பக துறையில் சுயாதீன புத்தக நிலையங்களின் பங்கை தீவிரமாக ஊக்குவிப்பது.

     சுயாதீன புத்தக நிலையங்கள் மற்றும் புத்தக பதிப்பு மற்றும் புத்தக சில்லறை வியாபார துறையிலும் உள்ள இதர பங்குதாரர்கள் மற்றும் வாசகர்களுக்கு பாலமாக இருப்பது

    சிறந்த நடைமுறைகளையும் வளங்களையும் பகிரும் உறுப்பினர் வலைப்பின்னலை வளர்த்தெடுப்பது.

    புத்தக பதிப்பு மற்றும் புத்தக சில்லரை வியாபாரம் குறித்து தங்கள் கவலைகளை உறுப்பினர்கள் தெரிவிக்கும் தளமாக திகழ்வது

    தங்கள் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ள வசதி ஏற்படுத்தி தருவதோடு பதிப்பக துறைக்கு உள்ளேயும் வெளியேயும் கூட்டாண்மையை ஊக்கப்படுத்த உறுப்பினர்களுக்கு உதவியாக இருப்பது.

    உறுப்பினர்களின் வியாபாரத்தை நேரடியாக அல்லது மறைமுகமாக பாதிக்ககூடிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் பற்றி மாநில மற்றும் மத்திய அரசாங்கத்திடம் உறுப்பினர்களின் பிரதிநிதியாக பேசுவது.  


Source Article: https://scroll.in/article/963365/six-indie-bookstores-have-founded-an-association-of-bookshops-what-do-they-hope-to-achieve

 

Leave Comments

Comments (0)